(அரசு நலன் சார்ந்த ‘ஆள் கடத்தல்களே’ இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 2/3 தொடர்ச்சி)

தலைப்பு-ஆள்கடத்தல்,வவுனியா குடிமக்கள் குழு : thalaippu_aalkadathal_vavunia

அரசு நலன் சார்ந்த ஆள் கடத்தல்களே

இலங்கையில் நிகழ்த்தப்பட்டுள்ளன 3/3

வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு

  இதன் ஊடாக, மூன்று வகையான நன்மைகளை அடைந்து கொள்ளும் நோக்கங்கள் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உண்டு.

  ஒன்று: மிகவும் கொடுமையான ‘ஆள் கடத்தல்கள், கைதுகள், தடுத்து வைத்தல்கள்’ ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்குள்ளிருந்தே, உயர்தரம் வரையான கல்வியைக் கற்றுள்ள தகுதியான பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களது உணர்வுடன் இரண்டறக் கலந்துள்ள ஆட்களோடு தொடர்புபட்டுள்ள இந்தச் சிக்கலில் வேலைவாய்ப்பை வழங்குவதற்கு இஃது ஒரு வாய்ப்பாக அமையும். (இந்தப் பிள்ளைகளும் தமது நாளாந்த வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ள பெருந்துயரை – வலியை உளமாரப் பட்டுக் கொண்டிருப்பதால், அலுவலகத்தின் செயல்பாடுகளில் உண்மையாகவும், அக்கறையோடும், ஒப்படைப்பு உணர்வோடும் செயல்படுவர்). தமது பிள்ளைகளே அலுவலகத்தின் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அலுவலகம் தொடர்பிலான அச்சங்கள் – ஐயங்கள் தீர்ந்து, நம்பிக்கையைத் தகவமைத்துக் கொள்ள முடியும்.

  இரண்டு: நிகழ்காலத்திலும் கூட நீங்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ தொடர்பிலும், இதைக் கையாள்வதற்கென்று தனியாக ஓர் அலுவலகம் அமைப்பது தொடர்பிலும் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால், இலங்கை நாட்டின் ‘கொடிய இருண்ட காலம்’ என்று நம்பப்படும் கொடுங்கோலன் மகிந்த இராசபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவனும் – அவனுடைய படைப்புலனாய்வுக் கட்டமைப்பும், ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ சிக்கலை நாட்டுக்குள் இல்லாமல் செய்து விடுவதற்காக மக்களாட்சி முறைக்கு எதிராக வலிந்தும் – நுட்பமாகவும் முன்னெடுத்த பலதரப்பட்ட நடவடிக்கைகளின்பொழுதும், பெருத்த உயிர் அச்சுறுத்தல்கள் – கண்டங்கள் (ஆபத்துகள்) – தாக்குதல்கள் – கைதுகளை எதிர்கொண்டு, மக்களைத் தெளிவுறுத்தி, அட்டூழியங்களுக்கு எதிராகத் தொய்வுறாத கவன ஈர்ப்பு – கண்டனப் போராட்டங்களை நடத்தி, இன்றும் கூட நாட்டுக்குள் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ சிக்கலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ‘வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழு’ முதலான சில குடிமைக் குமுக மனித உரிமை அமைப்புகளுக்கே இப்பெருமை சாரும்.

  கைம்மாறு எதனையும் எதிர்பாராத, ஒப்படைப்பு உணர்வும்(அருப்பணிப்பும்) – சேவை மனப்போக்கும் கொண்டுள்ள துணிகரமான இத்தகைய செயல்பாட்டாளர்களுக்கு உரிய ஏற்பிசைவும்(அங்கீகாரமும்) பெருமைப்படுத்தலும் வழங்கப்படுதல் வேண்டும். ஆதலால் எழுந்தமானமாகப் பணியாட்கள் தொகுதியைப் பணியமர்த்தி, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் – இந்த மக்களின் நலன்கள் சார்ந்து பணி செய்து கிடக்கும் குடிமைக் குமுக மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டாளர்களுக்கும் இடையிலான மனமார்ந்த உறவைத் துண்டாட எங்கும் எதிலும் எவ்வேளையிலும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது!

மூன்று: அவ்வாறு எழுந்தமானமாகப் பணியாட்கள் தொகுதி பணியமர்த்தப்பட்டால், நிகழக்கூடிய மிகவும் கடுமையான விளைவுகள் தொடர்பில் (ஒரு முன்னெச்சரிக்கையாகவும் – விழிப்புநிலையாகவும்) இங்கு சுட்டுவதற்கு விழைந்துள்ளோம்.

  எடுகோளாக, பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் தகவல்களைப் (தகவல் திரட்டு) பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் ஏதேனும் கேள்வித்தாள்கள், விண்ணப்பக் கோவைகளை அலுவலகம் ஏற்பாடு செய்யலாம். அவற்றில் வல்லுநர்த்தனமான சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் கூடியளவில் உண்டு. ஆனால், பாதிக்கப்பட்டுள்ள படிக்காத மக்கள், அவர்களுக்கு மயக்கக் கிறக்கமான – புரியாத இத்தகைய சொல்லாடல்களால் மேலும் குழப்பத்துக்கு ஆளாகி, விவாதத்துக்குரிய கேள்விகளைக் கொண்டுள்ள அந்த விண்ணப்பக் கோவைகளை நிறைவு செய்வதற்காக வழிப்படுத்தப்படும் கண்டமான (அபாய) நிலைமைகள் ஏற்படலாம். அல்லது, அந்த மக்கள் கட்டாயப்படுத்தவும் படலாம். இத்தகைய தவறான வழிநடத்தல்கள், அன்றி அழுத்தச் செயல்பாடுகள் இத்தனை ஆண்டுக் காலமும் அந்த மக்கள் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ‘காணாமல் ஆக்கப்பட்டோர்’ சிக்கலை மழுங்கடித்து, நீர்த்துப் போகச் செய்துவிடும்.

  ஆகவே, அலுவலகம் ஏதேனும் கேள்வித்தாள்கள், விண்ணப்பக் கோவைகளை உருவாக்கும் தேவைப்பாடு இருந்தால் (ஆட்சி, பதவியிலுள்ளவர்களுக்கு அறிக்கைகள் ஊடாக அரசுக் கட்டளைகளை மட்டும் தானாகப் பிறப்பிக்கலாம்) அவற்றை நேரடியாக மக்களின் புழக்கத்துக்கு விடாமல், த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு., சங்கத்தின் எட்டு மாவட்டத் தலைவிகளுக்கும் அனுப்பி வைத்து, 14 நாட்கள் நேரம் வழங்கி, அவற்றில் ஏதேனும் சேர்க்கைகள் – தணிக்கைகள் (திருத்தங்கள்) வேண்டுமா, வேண்டாமா என்பது தொடர்பாக அவர்களிடம் கருத்தறிந்த பின்னர், மக்களின் புழக்கத்துக்கு விடுவதே எல்லாக் குழப்பங்களுக்கும் ஐயங்களுக்கும் உரிய தீர்வை அளிப்பதாக அமையும். இந்த அணுகுமுறை ஒன்றே உண்மையானதும் வெளிப்படத்தன்மையானதும் ஆகும்.

உண்மையாய்உரிமையாய்உணர்வாய்

மக்கள் நலப்பணியில்,

வவுனியா மாவட்டக் குடிமக்கள் குழுவினர். 

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் – த.தா.கை.க.கா.ஆ.உ.தே.க.கு.ச (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland).

 

தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்