(ஏ, தாழ்ந்ததமிழகமே! 6/8 தொடர்ச்சி)

[1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.]


அறிவுகெட்ட தமிழகம்

எங்கே – எடுத்துக் கொள்ளுங்களேன், ஒரு பத்திரிகை “பகவத் கீதையிலே நாலு சாதி இருக்கவேண்டும்” என்று பரமாத்மா கூறியிருக்கிறார் என்று எழுதும். “அது யார் சொன்னது? பகவத் கீதையிலே சாதிக்காதாரமில்லை” என்று ஒரு பத்திரிகை எழுதும், மற்றொரு பத்திரிகை, “நீங்கள் கீதையை வேறு விதமாக அர்த்தம் பண்ணிவிட்டீர்கள்!” என்று செந்தமிழ்ச் செல்வி தீட்டும். அறிவுகெட்ட தமிழகம் எதைத்தான் நம்பும்? கீதையை நம்புமா? தனிப்பட்டவர்கள் சொல்லும் தத்துவார்த்தத்தை நம்புமா?

அலங்காரமான உடை, ஆனால் ஆபாசமான கருத்து

காலையில் நான் இரயிலில் வரும்பொழுது, நான் வந்த கம்பார்ட்மெண்டில் ஒரு கல்லூரி மாணவர், திருச்சி செயிண்ட்டு சோசப்பில் வேதாந்தம் படிக்கிறவர்; இரு பார்ப்பனப் பண்டிதர்களிடம் தர்க்கம் பண்ணிக் கொண்டு வந்தார். மாணவர், அந்த ஐயர்களைப் பார்த்து, ‘வினை என்கிறார்களே, அதைப் பற்றி விதண்டாவாதக்காரர்கள் சில சமயங்களில் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள் என்றார். உடனே பண்டிதர்கள் கேட்பதற்குப் பதில் சொல்லாமல், “நீங்கள் கல்லூரியிலே படிக்கிறேன் என்கிறீ்ர்களே, சாப்பாடு எங்கேயோ? என்று மாணவரைக் கேட்டார்கள். மாணவர் அதற்கு பிராமணர்களுக் கெல்லாம் நம் விடுதியிலே தனி இடம் உண்டு. அங்கேதான் சாப்பாடு என்றார். நெற்றியிலே இல்லாவிட்டாலும், உடனே மாணவன் பிராமணண் என்று தெரிந்து கொள்கிறார்கள். மாணவன் நெற்றியிலே நீறில்லை; கல்லூரியிலே படிக்கிறவர்; அதுவும் வேதாந்தம் படிப்பு படிக்கிறார்; இங்கிலீசுகாரனும் பார்த்துப் புதுமாதிரி என்று கற்றுக் கொள்வான். அவ்வளவு அழகாகக் கிராப்பை வாரி விட்டிருக்கிறார்.

அலங்காரமான உடைதான்; ஆனால் ஆபாசமான கருத்துகள் மாணவன் பிராமணன் என்று தெரிந்து கொண்ட பிறகுதான் ‘சரி விவாதிக்கலாம்’ என்கிறார்கள்.

விவாதம் ஆரம்பமாயிற்று மாணவன் கேட்டான், “ஒருவன் கசுட்டப்படவும் இன்னொருவன் சுகப்படவும் காரணம் என்ன?” என்று. அதற்கு அவனவன் செய்த பாவபுண்ணியம் என்று பதில் அளித்துவிட்டு மாணவனை நோக்கி, “சரி தம்பீ? ஒருவன் 60-ம், இன்னொருவன் 40-ம், மற்றொருவன் 20-ம் மார்க்குகள் வாங்கக் காரணம் என்ன?” என்கிறார்கள். அவன் பண்டிதர்கள் மொழியிலேயே “அவாளவாள் படித்த படிப்புக்குத் தக்கவாறு” என்றான். பண்டிதர்கள் “இதைப்போலத்தான் சுகத்தையும் கசுட்டத்தையும் அவாளவாள் செய்த பாவ புண்ணியத்திற்குத் தக்கவாறு அடைகிறார்கள்” என்று எடுத்துக்காட்டினார்கள். அவர்கள் விவாதிக்கத் தருக்க சாத்திரம் தேவையில்லை. வேதாந்தங்களே உதாரணம்; கதைகள் மூலம்தான் விளக்குவார்கள். ‘சரி அதிருக்கட்டும்’ என்று சற்று நேரம் கழித்து மாணவன், “இந்தச் சென்மத்தில் அனுபவிப்பது போன சென்மத்தில் செய்த பாவம், போன சென்மத்தில் கசுட்டத்தை அனுபவிப்பதற்கு, அதற்கு முந்திய சென்மத்தில் செய்த பாவம்; என்று இப்படியே அதற்கு முன் சென்மம், அதற்கு முன் சென்மம் என்று போய்க் கொண்டேயிருந்தால் முதல் சென்மத்திலே செய்த பாவத்திலே கொண்டு போய்விடும். அந்த சென்மத்தில் பாவம் செய்ததற்கு யார் குற்றவாளி? படைக்கும்பொழுதே பாவத்தைச் செய்யாதபடி யல்லவா ஆண்டவன் படைத்திருக்க வேண்டும்? அது இல்லாமல், பாவம் செய்யும்படியே படைத்துவிட்டு, “பாவம் ஏன் செய்தாய்?” என்று கண்டிப்பது ஒரு குற்றம்; பாவம் செய்யாமல் படைக்காதது இன்னொரு குற்றம்; ஆகவே நாம் செய்கிற பாவத்திற்குக் குற்றவாளி பரமன்தான் என்று சொல்கிறீர்களா? சென்மம் என்பது உண்டா? அப்படியிருந்தால் முதல் சென்மத்திற்கு முன் என்ன நடந்தது, என்று யாராவது கேட்டால் என்ன பதிலளிப்பது, என்றான்.

பண்டிதர்கள் கொஞ்சம் முறைத்துப் பார்த்தார்கள். “சென்மம் என்று ஒன்று உண்டா என்று கூடவா கேட்கிறீர்கள்? நம்பிக்கையிலிருந்துதான் வாதமே எதுவும் தொடங்க வேண்டும். முதல் சென்மம் இருந்தது என்று தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முந்திய விவரங்கள் சொன்னால் புரியாது. அதிருக்கட்டும். “இந்தப் பிரச்சனை யெல்லாம் யார் கிளப்பி விட்டது? ஈரோட்டு நாயக்கராகத்தான் இருக்கும். இவர்களெல்லாம் பெரியார்களாம். ஒரு கட்சியின் தலைவர்களாம்” என்று பேச ஆரம்பித்து, விவாதத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். இது நான் காலையில் இரயிலில் கண்ட காட்சி.

இதுபோல் இன்னும் வருணாசிரமம் தாண்டவ மாடினால், அதை ஆதரித்துக் கவிதைகளும், கதைகளும், கட்டுரைகளும் எழுதினால், இந்தச் சாதி மட்டம் அந்தச் சாதி உசத்தி என்று சாதி மட்டக்கோலை நாம் வைத்திருக்கும் வரையில், வேண்டுமென்றே ஒரு கட்சியையும், கட்சியின் தலைவரையும் துாற்றுகிற வரையில், இந்த நாடு நற்கதியடைய மார்க்கமில்லை.

யாருக்கு வெட்கம், அணுகுண்டு சகாபுதத்திலே?

வைதிகத்தையும், மூடப்பழக்கத்தையும் வளர்க்கும் மாகாமகத்திற்குப் போகாதே என்று. சுயமரியாதைக்காரன் சொன்னான் என்பதற்காகக் கல்கி, மகாமகக் குளத்தையும், அங்குக் குழுமியிருந்த மக்களையும் படம் பிடித்துக் காட்டி, “இதோ பாருங்கள். சுயமரியாதைக்காரன் காட்டுக் கூச்சல் போடுகிறானே. எவ்வளவு கூட்டம் இந்த நெருக்கடியான காலத்திலும்? இதிலிருந்து அவர்களுக்குப் பிரசார பலமில்லை என்று தெரிகிறதல்லவா?” என்பதன் மூலம் சுயமரியாதைக்காரனுக்கு வெட்கம் என எழுதியது. யாருக்கு வெட்கம்? முதலில் கல்கி ஆசிரியர் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்துவிடுகிறார். இந்த அணுகுண்டு சகாபுதத்திலே, அழுக்கு நீரிலே குளித்தால் ஆண்டவனுடைய அருளைப் பெறலாம் என்பதை ஆதரிப்பது போலல்லவா நமது படம் இருக்கிறது என்று அவமானப்பட வேண்டியவர் அவர்தான்.

ஆகவே, எதையும் சுயமரியாதைக்காரன் சொன்னான் என்பதற்காக எதிர்க்காமல், மகாமகம் மடமையை வளர்க்கிறது என்றவுடன், தினமணி ஆதரித்து எழுதட்டும், சுதேசமித்திரன் தலையங்கம் தீட்டட்டும்; இந்து எழுதட்டும்; வேண்டு மென்றால் மதராசு மெயில் மாத்திரம் மகாமகத்தை ஆதரிக்கட்டும்; இந்த நாட்டில் எவ்வளவு காலம் அறியாமை நீடித்திருக்குமோ, அவ்வளவு காலம் அவர்களுடைய அந்நிய ஆட்சி நீடித்திருக்கும் என்பதற்காகப் பத்து வருடம் சுயமரியாதைக்காரன் சொல்வதை ஏற்று எழுதட்டும்; எழுதாவிட்டாலும் எதிர்க்காமலிருக்கட்டும். பாருங்கள் பத்து வருடத்திற்கு பின் இந்த நாட்டிலே சாதி இருக்குமென்று நினைக்கிறீர்களா? அஞ்ஞானம் இருக்குமா? தீண்டாமை இருக்குமா? எல்லாம் போன இடம் தெரியாமல் போய்விடும்.

ஒன்று பட்டாலுண்டு வாழ்வு

பாரதியார்கூட, “ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” என்று கூறினார். இதைச் சொல்லியும், ஒரு கத்தைக் குச்சியை ஒடிக்க முடியாது; தனித் தனியாயிருந்தால் ஒடித்துவிடலாம் என்று சொல்லியும், பள்ளி மாணவர்களுக்கு ஒற்றுமையின் அவசியம் போதிக்கப்படுகிறது. ஒற்றுமை என்றால் எதற்கு ஒற்றுமை? நெருப்புக்கும் நீருக்குமா? மானுக்கும் புலிக்குமா? பினாயிலுக்கும் தண்ணீருக்கும் பேதமிருக்கும்; ஆனால் அதில் ஒற்றுமையைக் காணுதல் என்றால் முடியுமா?

வேற்றுமையில் ஒற்றுமை

இந்து முசுலிம் ஆகிய இருபெரும் சமுதாயங்கள் பல துறைகளிலே வேற்றுமையைக் கொண்டவை. அவற்றில் ஒற்றுமை என்றால் ஏற்படுமா? வேற்றுமையிலே ஒற்றுமை காட்டு, அது தருக்கத்துக்குரியது. மாணவர்கள் கேள்வித்தாளுக்குரியது. நாட்டுக்குரியதா? நாட்டிலே நடவாது. அதை உத்தேசித்துத்தான் நமது புரட்சிக் கவிஞர், இன்று உலகம் பொதுவுடமை பேசுவதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்; இனம் கலந்தால் இடரறும் என்கிறார், சனாதன ஊற்றைத் தூர்க்க வேண்டும் என்கிறார். வருணாசிரமத்தின் வாயிற்படியை அடை என்கிறார். வேதாந்தம் சித்தாந்தம் எல்லாம் வேலை ஒழிந்த நேரத்தில், ஆண்டிகள் விவாதிக்க வேண்டிய பொருள். கொலை வாளை எடு. முதலில் கொடியோர் செயலை அறவே ஒழிப்போம் என்றும், மகாராசர்கள் உலகாளுவதா என்றும் கேட்கிறார்.

(தொடரும்)

ஏ, தாழ்ந்த தமிழகமே!

பேரறிஞர் அண்ணா