(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஈ. வான அறிவியல் பொதிவு-தொடர்ச்சி)

அறிவியல் ஆய்வும், கண்டுபிடிப்புகளும், பயன்களும் நாட்டு நலனை நோக்கமாகக் கொண்டவை. நாடு என்றால் மலை முதலிய அசையாப் பொருள்களும் ஓரறி உயிர் முதல் ஆறறி உயிர் வரையான உயிர்களும் அடங்கும். எனவே அறிவியல் நலனும் இவைகட்கே உரியது. இவற்றிலும் சிறப்பாக மாந்தருக்கே உரியது.

திருவள்ளுவர் மாந்தரின் செம்மையான வாழ்விற் கென்றே திருக்குறளைப் படைத்தார். அதில் மாந்தருக்குப் பல்வகை நெறிகளையும் வடித்தார். பல்வகைப் பற்றுக்கோடுகளையும் கொடுத்தார். நலமும் வளமும் தரும் அறிவார்ந்த கருத்துக்களையும் வழங்கினார். அவற்றுள் அறிவியல் பாங்கான கருத்துக்கள் என்றும் துணைகளாக நின்று என்றும் நலனளிப்பவை.

எனவே, மாந்தரைக் கொண்ட நாட்டை வைத்து அவர் வழங்கிய கருத்துக்களில் அறிவியல் உயிரோட்டங்களைக் காணல் ஒரு வழியாகும்.

’’பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணியென்ப காட்டிற்கிவ் வைந்து’’ (738)

என்னும் குறள் அவர்தம் அறிவியற் கருத்துகளைக் காண ஒரு கொளுவாக உள்ளது. ஏரின் உழவு நடப்பதற்கு ஏர் முனையில் ‘கொளு’ அமைவது போன்று செய்யுளில் கருத்துகளைச் சுட்டுவதற்கும் ஒரு நூற்பா உண்டு. அதற்குக் ‘கொளு’ என்று பெயர்.

“பிணியின்மை” என்னும் குறட்பாவைக் கருத்துக் கொளுவாகக் கொண்டு அதன் வழி திருவள்ளுவரின் கருத்துகளைக் காண முடிகின்றது. அவர்தம் அறிவியற் கருத்துகளைக் காண்பதற்கு இக்குறள்தான் வழி என்றில்லை. பிறவழிகளும் உள்ளன. இங்கு இக்குறளை ஒரு பொருத்தமான வாய்ப்பாகக் கொள்ளலாம்.

நாட்டிற்கு அணிகளைக் கூறும் இக்குறளில்,

“நோய் இல்லாமை
செல்வம்
பொருள் விளைச்சல்
உயிர்களின் இன்பம்
உயிர்களின் பாதுகாப்பு”

என ஐந்து இடம் பெற்றுள்ளன. இவை செம்மையாக அமைந்தால் நாடு-அணிபெற்ற அழகில் ஒளிரும். அஃதாவது, வளம் பெற்ற வனப்பில் திகழும். நாட்டு அணிகளாகும் இவ்வைந்திலும் மந்தர்தம் நலங்களே நிறைந்துள்ளன.

ஒரு சங்கிலித் தொடர்

மற்றுமோர் அறிவார்ந்த பொருத்தம் இவ்வைந்தையும் அமைத்த பாங்கில் உள்ளது. ஐந்தைக் குறிக்க வேண்டுமென்று ஒன்று, இரண்டு என எண்ணுவதற்காக மட்டும் இவ்வைந்தின் அமைப்பு இல்லை. ஒன்றை அடுத்த ஒன்று முன்னைய ஒன்றின் தொடர்பாகவே அமைந்துள்ளது. எனவே, ஐந்தும் ஒன்றன் தொடர்புடைய ஒன்றாகச் சங்கிலித் தொடராய் அமைக்கப்பட்டுள்ளன.

நோய் இல்லாமை – பிணியின்மை செல்வத்தின் பயன்பாட்டிற்குத் தடை இல்லாது உதவுவது. எத்துணை செல்வமிருப்பினும் நோய் பிணித்துக் கொண்டிருந்தால் அச்செல்வம் உரிய மகிழ்ச்சியைத் தராது. எனவே, பிணியின்மையை அடுத்துச் செல்வம் வைக்கப்பெற்றது. நாட்டுச் செல்வம் என்பது சிறப்பாக நிலத்து விளைச்சலில்தான் உள்ளமையால் செல்வத்தை அடுத்து விளைவு அமைக்கப் பெற்றது. பல்வகை விளைச்சலால் மக்களின் வாழ்க்கை இன்பம் பெறும். பெறப்பட்ட இன்பம் பறிபோகாமல் நிலைக்கப் பாதுகாப்பு வேண்டும். இவ்வாறாக ஐந்தும் ஒன்றையொன்று தொடரும் சங்கிலித் தொடராக அமைக்கப்பட்டுள்ளன. பிணியின்மை முதலில் மாந்தரின் வளமான வாழ்விற்கு உடல் நலந்தான் அடிப்படை என்பதைக் காட்டுவதாகும்.

இப்பிணியின்மையில் அமைந்துள்ள அறிவியல் திறத்தைக் காணுதல் இக்கால அளவில் ஒரு முதன்மை பெறுவதாகும்.

(தொடரும்)