(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்-தொடர்ச்சி)

அறிவியல் என்பது ஒரு பொதுத்துறை. பொறியியல், உளவியல், உயிரியல், கணக்கியல், உடலியல், உளவியல் எனவெல்லாம் பல துறைகளில் கண்டுபிடிப்புகள் நேர்கின்றன. எப்பெயர் பெரினும் அவ்வொவ்வொன்றும் அறிவின் நுண்ணிய செயற்பாட்டால்தான் விளைகின்றது. எனவே. பொறி அறிவியல், உள அறிவியல், வான அறிவியல் என்றெல்லாம் அறிவியல் துறையாகவே கொள்ளப்படும்.


இவற்றுள் வான அறிவியலைச் சற்று விளக்கமாகக் கண்டு அதன் திருக்குறள் அடையாளத்தைக் காணலாம்.


வானம் என்பது எல்லையற்றுப் பரவியுள்ளது. நிறமற்றது; இடமற்றது. எண்ணற்ற விண்மீன்கள், உடுக்கள், கோள்கள் பரவிச் சிதறி இயங்கும் வெட்டவெளி கொண்டது.


ஞாயிற்றிலிருந்து கோள்கள் சிதறித் தனித்தனிக் கோள்களாக இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று நாம் வாழும் நிலம் என்னும் பூவுலகம். இதற்கொரு தனிச் சிறப்பு உண்டு. உயிரினங்களைப் பெற்றிருக்கும் ஒரு கோள் இப்பூவுலகம். பிற கோள்கள் சிலவற்றில் உயிரினம் இருக்கலாம் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து வருகின்றனர் வானியலார்.
பூவுலகில் மட்டும் உயிரினம் உள்ளமைக்கு மூலக் காரணம் எது? நெருப்பு, நீர், காற்று. மண் என்பவை காரணங்களே. ஆனால், உயிரினம் மூச்சுவிட்டு உயிர்வாழ இன்றியமையாத துணை மூலமாக இருப்பது காற்றுதான். இக்காற்று ஏது? எங்கிருந்து வந்தது: பூவுலகைச் சுற்றியுள்ள சூழல் இக்காற்றுக்குத் துணைக் காரணம். வளி என்னும் காற்றை வழங்கிய தாய் பூவுலகம் என்னும் நம் ஞாலம். பூவுலகைச் சுற்றிதான் காற்று உலவி இயங்குகிறது ஞாயிறு என்னும் வெப்ப ஆவியிலிருந்து சிதறிய உருண்டையாம் பூவுலகம் காலப்போக்கில் ஆறி, ஆறி இன்றைய நிலைக்கு வந்துள்ளது. ஏறத்தாழ ஒர் இயல்பமைந்த சூழல் அமைந்தபோது இயற்கைத் தோற்றமாக உயிரினம் முளைத்தது. உயிரினம் பிறப்பதற்குப் பிறப்பு அணுக்களே மூலகாரணம். கதிரவன் பூவுலகின் தாய், பூவுலகம் உயிரினங்களின் தாய். இந்தத் தாய் உயிரினங்களை ஈன்றெடுக்கும் கருவாகப் பிறப்பு அணுக்களைக் கொண்டிருந்தது. இது தாய்க் கருப்பையில் உள்ள பெண் கரு முட்டையைப் போன்றதே. கருத்தரிக்க ஆண் கரு வேண்டுமன்றோ, வானத்தில் இயங்கும் பிற கோள்களிலிருந்து சில பிறப்பணுக்கள் பூவுலகில் புகுந்தன. இவற்றின் அறிய இயலாத புணர்ச்சியால் பூவுலகத்தாய் சுருக்கொண்டாள். முதலில் முதற்கணியம் (Protoplasm) தோன்றியது. பின் ‘கூழ்மம்’ (Collide) உருப்பெற்றது. அது ஊன் வடிவுற்று ‘ஊன்மம்‘ ஆயிற்று. ஊன்மத்திலிருந்து புழு தோன்றிப் படிப்படியாக உடலுருவம் வளர்ந்து வளர்ந்து படிப்படியாக மலர்ந்தது. இந்தப் படிமலர்ச்சி (Evolution பரிணாம வளர்ச்சி)யில் மாந்தன் தோன்றினான். எவ்வகை உயிராயினும் அதற்கு மூலம் ஐம்பெரும் பூதங்கள். அவற்றில் காற்று ஒன்று. அது பல வகையில் இன்றியமையாதது.

(தொடரும்)