அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு) – பாத்திமா மைந்தன்
அறிவோம் இசுலாம் : மணவிலக்கு(தலாக்கு)
மணமுறிவு / மணவிலக்கு என்பதைக் குறிக்க ‘தலாக்கு’ என்னும் அரபுச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ‘தலாக்கு’ எனும் சொல்லுக்கு, விடுவித்தல், அவிழ்த்தல், கைவிடுதல் என்பது பொருளாகும். இதை ‘விவாகரத்து’ என்ற வடமொழி சொல்லாலும் சுட்டுகிறோம். இச்சொல், திருமண ஒப்பந்தத்தை முறித்தல், இல்லற வாழ்வை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றைக் குறிக்கும்.
இசுலாத்தின் பார்வையில் இல்லறம் ஒரு நல்லறமாகவும், ஓர் ஒப்பந்தமாகவும் உள்ளது. இல்லற வாழ்வு நீடித்து நிலை பெற வேண்டும் என்பதால்தான் திருமணம் செய்வதை இசுலாம் ஊக்குவிக்கிறது. வாணாள் காலம் வரை நீடித்து நிற்பதற்காகவே திருமண ஒப்பந்தம் பலர் முன்னிலையில் நிறைவேற்றப்படுகிறது. எனவேதான் இணையருக்கு இடையே இருக்கும் உறவு, தூய்மையானதாகப்(புனிதமாகப்) போற்றப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் கணவன்&மனைவி இடையே கசப்பு ஏற்பட்டு உறவில் விரிசல் உண்டாகி, இருவரும் இனிமேல் இணைந்து வாழவே முடியாது என்ற நெருக்கடி தோன்றுகிற நெருப்பு வேளைகளில் பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை. அவர்கள் இருவரும் பெயரளவில் கணவன்&மனைவியாக வாழ்வதைவிடப் பிரிந்து தமக்கு ஏற்ற துணையைத் தேடிக்கொள்வதே இருவருக்கும் நல்லது. இதன் அடிப்படையிலேயே ‘தலாக்கு’ என்னும் மணவிலக்கிற்கு இசுலாம் இசைவு அளித்துள்ளது.
மணமுறிவைத் தடுக்க இசுலாம் பல வழிமுறைகளைக் கையாளுகிறது. இன்னும் சொல்லப்போனால், மணமுறிவை இசுலாம் கடுமையாக வெறுக்கிறது.
‘ ஏற்கப்பெற்ற செய்திகளில் அல்லா அதிகம் வெறுக்கும் செயல் மணவிலக்கு(தலாக்கு) ஆகும்’. ‘இறைவன் மிகவும் விரும்புவது ஓர் அடிமையை விடுதலை செய்வது; மிகவும் வெறுப்பது மணவிலக்கு’. ‘ஒரு பெண்ணுக்கும் அவள் கணவனுக்கும் இடையே உறவை நாசம் செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்’. ‘ நலம் துய்ப்பதை(சுகம் அனுபவிப்பதை) மட்டுமே நோக்கமாகக் கொண்டு திருமணம் செய்பவர்களையும், மண விலக்குக் கோருபவர்களையும் அல்லா சபிக்கிறான்’ என்பன போன்ற நபிமொழிகள் இதை உறுதிப்படுத்துகின்றன.
பிற மதங்களில் இருப்பதைப்போல, மணமுறிவுச் சட்டங்களைக் கடுமையாக ஆக்கினால் இனிதான இல்லறமும் இல்லாமல், பிரியவும் முடியாமல் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் இருவரும் ஆளாக நேரிடும். அதே வேளையில் மண முறிவுச் சட்டங்களை எளிதாக ஆக்கினால் இல்லற வாழ்வு, விளையாட்டுக் களமாகி விடும். எனவே இசுலாம் இதில் ஒரு நடுநிலையான போக்கைப் பின்பற்றுகிறது.
மேலும் மணமுறிவைத் தடுக்க இசுலாம் பல வழிமுறைகளைக் கையாளுகிறது. கணவன்&மனைவிக்கு இடையே பிணக்குகள், சண்டை சச்சரவுகள் உருவாகும்போது தமது உரிமைகள் சிலவற்றை விட்டுக் கொடுத்து திருமண உறவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இசுலாம் வேண்டுகிறது.
‘ஒரு பெண் தன் கணவனிடம் இருந்து வெறுப்பையோ புறக்கணிப்பையோ பயந்தால் அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஏதேனும் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவ்விருவர் மீதும் குற்றமில்லை. (அத்தகைய) இணக்கமே மேலானது’ (திருக்குர்ஆன் 4:128) என்று இறைவன் கட்டளையிடுகிறான்.
இணக்கம்(சமாதானம்) ஏற்படாதபோது ஒரு நல்லிணக்கக் குழுவை நியமித்து அவர்கள் மூலம் இணக்கத்தை ஏற்படுத்துமாறு இறைக் கட்டளை வருகிறது.
‘(கணவன்&மனைவி ஆகிய) அவ்விருவர் இடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டு விடும் என்று அஞ்சினால், அவனது குடும்பத்தாரில் இருந்து ஒரு நடுவரையும், அவளது குடும்பத்தாரில் இருந்து ஒரு நடுவரையும் நீங்கள் அனுப்புங்கள். அவ்விருவரும் இணக்கத்தை விரும்பினால் அல்லா அவ்விருவரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி விடுவான்’ (திருக்குர்ஆன் 4:35).
நல்லிணக்க முயற்சி தோல்வி அடைந்து விட்டால், மணவிலக்கு செய்ய விரும்பும் ஆண், மனைவி மாதவிலக்கில் இருந்து தூய்மை அடைந்த பிறகு, ‘உன்னை நான் மணவிலக்கு செய்கிறேன்’ என்று ஒருமுறை கூற வேண்டும். இது முதலாவது ‘தலாக்கு’ ஆகும். இவ்வாறு கூறிய பிறகு குறைந்தது ஒரு மாதம் இடைவெளி விட வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஒரே வீட்டில் இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் இருவரும் இணக்கமாகிச் சேர்ந்து வாழ விரும்பினால் திருமண வாழ்க்கைக்குத் திரும்பலாம்.
ஒருவேளை இணக்கம் ஏற்படவில்லை என்றால், மணவிலக்கு செய்வதாக இரண்டாவது முறையாகக் கணவன், மனைவியிடம் சொல்ல வேண்டும். அதில் இருந்து குறைந்தது மேலும் ஒரு மாதம் இந்த இடைவெளியில் இருவரும் விரும்பினால் இணைந்து வாழலாம். ஒருவேளை இப்போதும் இணக்கம் ஏற்படவில்லை என்றால் கணவன் மணவிலக்கு செய்வதாக மூன்றாவது முறையாக மனைவியிடம் தெரிவிக்க வேண்டும். மூன்றாவது முறையாக மணவிலக்கு செய்வதாக அறிவித்து விட்டால் மணமுறிவு நிலைாயகி விடும்.
மணவிலக்கு என்பது இத்தனைக் கட்டங்களையும் கடந்து வர வேண்டும். முதலில் நல்லிணக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து இடைவெளி விட்டு மணவிலக்கு செய்ய வேண்டும். இதன் மூலம் அவசரப்பட்டு மணவிலக்கு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மணவிலக்கு செய்யும் வேளையில் சான்றுரைஞர்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ‘(தலாக்குகின்போது) உங்களில் நியாயமுடைய இருவரைச் சான்றாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சான்றை அல்லாவிற்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்’ (65: 2) என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
– பாத்திமா மைந்தன்
தரவு: முதுவை இதாயத்து
Leave a Reply