ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
சிறப்புக் கட்டுரை: ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக!
இலக்குவனார் திருவள்ளுவன்
முன்பெல்லாம் திமுகவும் அதிமுகவும் ஆட்சிக்கு வரும் வரை “தமிழ்! தமிழ்!” என முழங்குவார்கள். வந்த பின் தமிழை மறந்துவிடுவார்கள். இப்பொழுதோ ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள். திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள ஒற்றுமை இதுதான்.
முதிய தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை தருதல், தமிழறிஞர்கள் பெயர்களில் விருதுகள் வழங்கல் போன்று தமிழ் வளர்ச்சிக்கெனச் சில திட்டங்களைச் செயல்படுத்துவது உண்மைதான். ஆனால், கல்வி நிலையங்களில் தமிழைத் துரத்திவிட்டு என்ன செய்து என்ன பயன்?
5.06.2018 அன்று சட்டமன்றத்தில், திமுக ச.ம.உ. (முன்னாள் அமைச்சர்) பூங்கோதை ஆலடி அருணா, “தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார். தமிழ்வழிக் கல்விக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர் ஆங்கிலவழிக் கல்வியை வலியுறுத்துவது வெட்கக்கேடானது. பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி உள்ளமை போல் கல்லூரிகளிலும் கொண்டுவர வேண்டும் என்று பேராசிரியர் சி.இலக்குவனார் போராடினார். இதற்காகத் தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொண்டபோது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டார். அப்போது கலைஞர் கருணாநிதி ‘தமிழ்த்தாய் சிறையில்’ என ஊரெங்கும் பேசித் தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தினார். இன்றைக்கு அவர் தலைவராக உள்ள திமுக, கல்வி வணிகம் மூலம் கொள்ளையடிப்பதால் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டுவர வேண்டுகிறது. என்ன கொடுமை இது!
ஆங்கிலத்துக்கு ஆதரவான கூட்டணி
“தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்க ஆய்வு நடைபெற்று வருகிறது” என்று பூங்கோதைக்குப் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மறுமொழி அளித்துள்ளார். ஏறத்தாழ 900 தமிழ்வழிப் பள்ளிகளை மூடும் திட்டத்தில் அதிமுக அரசு உள்ளது. எனவே, இவற்றை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்ற எண்ணியுள்ள அதிமுகவிற்குத் திமுகவும் துணைபோவதால் சட்டமன்றத்தில் எதிர்ப்பு இருக்காது அல்லவா?
திமுக சட்டமன்ற உறுப்பினர் பொ.தி.இரா.(பி.டி.ஆர்.) பழனிவேல் தியாகராசன் தன்னை ஆங்கிலேயராகவும் தான் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசுவதுபோலும் எண்ணிக்கொண்டு ஆங்கிலத்திலேயே சட்டமன்றத்தில் பேசுபவர். மாதிரிச் சட்டமன்றத்திலும் அவ்வாறுதான் ஆங்கிலத்தில்தான் பேசினார். இவரைத் தட்டிக் கேட்காத திமுகவிற்குத் தமிழைப் பற்றிப் பேச என்ன தகுதி உள்ளது? எனவே, அரசியல் கட்சிகளின் தமிழ் முழக்கங்கள் கண்டு ஏமாறாமல் மக்களே முன்னின்று தமிழ்வழிக் கல்விக்கு வழி காண வேண்டும்.
ஆங்கிலவழிக் கல்வியின் மாயையைப் பின்வரும் புள்ளிவிவரங்கள் உடைக்கின்றன.
ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில் நுட்பப் பயிலகத்தில் 2015இல் சேர்க்கப்பட்ட 9,974 மாணாக்கர்களில் 188 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 9 பேர் தவிரப் பிறர் ஆங்கில வழியில் படித்தவர்கள்.
அனைத்திந்திய மருத்துவத் தேர்வில் 2011இல் தமிழ்நாட்டிலிருந்து 9,514 பேர் பங்கேற்றனர். ஆனால், 207 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். எனவே, ஆங்கிலத்தில் படித்தால்தான் உயரலாம் என்பது தவறு என்றாகிறது.
தமிழ்வழிக் கல்வி 1952ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலகட்டமான 1954ஆம் ஆண்டு முதல், உயர்நிலைப் பள்ளிவரை தமிழே பயிற்சி மொழியாக இருந்தது. இதனை மாற்றி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு ஆங்கில வழிப் பாடமொழியாக இருக்கும் என 1965இல் முதல்வர் பக்தவத்சலம் ஆணை பிறப்பித்தார். தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தும் இவ்வாணையைத்தான் செயலலிதா பின்பற்றினார். இப்போதைய அரசும் பின்பற்றுகிறது.
2012-13 இல் செயலலிதா அரசு, அரசின் தொடக்க – நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்தது. 320 பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2013-14 கல்வியாண்டில் மேலும் 3200 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு ஆண்டுதோறும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டதால், 4,84,498 பேர் தமிழ்வழிக் கல்வியை இழந்தனர். இதைத் தொடர்ந்து 2017-2018 இல் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு அரங்கேறியுள்ள அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 3,916.
சென்னை, மதுரைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்பாட்டில் பதின்நிலைப் பள்ளிகள் (மெட்ரிகுலேசன் பள்ளிகள்) இருந்தன. இவை 1978 இல் பள்ளிக்கல்வி இயக்ககக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அப்போது ஏறத்தாழ 20 பதின்நிலைப் பள்ளிகள் மட்டுமே இருந்தன. தமிழக அரசு 2011இல் பதின்நிலைப் பள்ளி இயக்ககம் எனத் தனியாகத் தோற்றுவித்தது. இப்பள்ளிகள் இதன் கட்டுப்பாட்டில் வந்தன. இப்போது 4,268 பதின்நிலைப் பள்ளிகள் உள்ளன. 39,18,221 மாணாக்கர்கள் இவற்றில் பயில்கின்றனர். இது வளர்ச்சியின் அடையாளம் அல்ல. வணிகமயமான கல்விக்கு மக்கள் இரையானதைக் காட்டும் அவலம். இதனால் இவர்கள் தாய்மொழி வாயிலான கல்வியை இழந்து சிந்தனை ஆற்றல் இழக்கின்றனர். ஒப்பித்து எழுதும் பாட முறையால் தமிழகச் சிறுவர்கள் இயந்திரமயமாகி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 37,211 அரசுப் பள்ளிகளும் 8,403 அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளும் 12,419 அரசு நிதியுதவி பெறாத் தனியார் பள்ளிகளும் உள்ளன.
தமிழ்நாட்டில் மாணாக்கர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் 54,71,544. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் 28,44,693. அரசு நிதியுதவி பெறாத் தனியார் பள்ளிகளில் 48,69,289 என்னும் எண்ணிக்கையில் உள்ளன. தனியார் பள்ளிகள் பெருகிவருகின்றன. தனியார் பள்ளிகள் ஆங்கிலவழிக் கல்வியே வழங்குவதால் ஆங்கிலவழிக் கல்வியும் பெருகுகிறது.
இவற்றை மாற்ற அரசு என்னென்ன செய்யலாம்?
கோயம்புத்தூர், கிருட்டிணகிரி, நீலகிரி மாவட்டங்களில் மொத்தம் எட்டு உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. இவற்றைப்போன்று அனைத்து மாவட்டங்களிலும் தரமான தமிழ்வழியிலான உண்டு உறைவிடப் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும். இதனால் தமிழ்வழிக் கல்வியில் பயில்வோர் எண்ணிக்கை உயரும்.
ஆந்திராவில் கூட்டுறவுக் கல்விச் சங்கங்கள் (The Cooperative Educational Societies), கேரளாவில் தொழிற்கல்விக் கூட்டுறவுக் கழகம் (The Co-operative Academy of Professional Education (CAPE) of Kerala) ஆகியன மூலம் கூட்டுறவு அமைப்புகள் மேனிலைக் கல்விக் கூடங்கள், தொழிற்கல்விக் கூடங்கள் ஆகியவற்றை நடத்துகின்றன. இவை குறித்து அரசு முழுமையாக அறிய வேண்டும். இவைபோல் தமிழ்நாட்டில் தமிழ் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசிரியர்களைக் கொண்ட கூட்டுறவுச் சங்கம் அமைத்து மூடக் கருதும் பள்ளிகளை நடத்த வேண்டும். இதனால் அரசிற்கும் சுமை குறையும். தமிழ்வழிப் பள்ளிகளும் காப்பாற்றப்படும்.
இவற்றையெல்லாம் விட ஒரே ஓர் எளிய வழியில் இச்சிக்கலைத் தீர்க்கலாம். தமிழ்வழியில் படிப்போருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதுதான் அது. இது தொடர்பில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசாணை சரியானதல்ல. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முதல் 80% இடங்களை ஒதுக்கிய பின்னரே பிற வகையினருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இதேபோல் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசின் உதவிகளும் சலுகைகளும் கிடைக்கும் என்றும் ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதிர்கால நம்பிக்கையின்மையால் இதுவரை தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கும் மக்கள் தமிழ்வழிக் கல்வியைத் தேடி நாடி ஓடி வருவார்கள்.
தமிழைக் காத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த முன்வருமா அரசு?
(கட்டுரையாளர் குறிப்பு: இலக்குவனார் திருவள்ளுவன்… தமிழ் காப்புக் கழகத்தின் தலைவர், ‘அகர முதல’ என்னும் தமிழ் இணைய இதழின் ஆசிரியர். தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். அப்போது தமிழ் காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். குறிப்பாக, இலவசம் என்ற சொல்லுக்கு விலையில்லா என்றும், அரவாணி என்பதற்கு திருநங்கை என்றும் அரசுத் துறைகளில் புதிய சொல்லாடல்களைப் பயன்பாட்டுக் கொண்டுவந்தமைக்குக் காரணமானவர். இவரைத் தொடர்புகொள்ள: thiru2050@gmail )
Leave a Reply