ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் – எழில் இளங்கோவன்
ஆய்வுப் பேரறிஞர்
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்
தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்! யார் இவர்?
‘‘வடஇந்தியாவின் வரலாறே இந்தியாவின் வரலாறு. தென்னாட்டின் சரித்திர உண்மைகளைக் கைவிட்ட காலம். அந்த நாளில் கல்வெட்டுகளின் துணைகொண்டு, (தென்னாட்டு) வரலாறுகளைத் தொடர்ந்து எழுதத் தொடங்கியவர் சதாசிவப்பண்டாரத்தார்’’
அறிஞர் மு.அண்ணாமலையின் அறிமுகம் இது.
அந்தக் காலங்களில் வரலாறுகளை ஆங்கிலத்தில் எழுதுவார்கள். தமிழில் வரலாறுகள் மிகக் குறைவாகவே இருந்தன. அதனை உடைத்துத் தமிழில் வரலாறுகளைத் தொடர்ந்து எழுதியவர்களுள் முதன்மையானவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். குறிப்பாக அவரின் கல்வெட்டுச் சான்றுகளும், செப்பேட்டுச் சான்றுகளும் மிக நுட்பமானவை.
1956ஆம் ஆண்டு மதுரை திருவள்ளுவர் கழகம் அவரை ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ விருது வழங்கிப் பாராட்டியது.
ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவணி 01, 1923 / 1892ஆம் ஆண்டு ஆகத்து 15ஆம் நாள், கும்பகோணம் அருகில் திருப்புறம்பியத்தில் பிறந்தார்.
இவர் குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தார். இவருக்குள் இருந்த தமிழ் வேட்கையால், இவரின் தமிழாசிரியரிடம் முனைந்து தமிழ் பயின்றார்.
தொடக்கத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அதை விடுத்துத் தான் பயின்ற குடந்தை நகர உயர்நிலைப்பள்ளியில் 1 மாதம் தமிழசிரியராகப் பணியாற்றினார்.
1917 முதல் 1942 வரை குடந்தை பானாதுறை உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்.
1942 முதல் 1953 வரையும், 1955 முதல் 1960 வரையும்(தன் மரணம் வரை) அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சித் துறையில் ஆய்வுப் பணிகளைத் திறம்பட ஆற்றியவர் பண்டாரத்தார்.
இவர் தன் ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து ‘சைவ சிகாமணி இருவர்’ என்ற நூலை எழுதியிருந்தாலும், இவர் தனித்து எழுதிய முதல் நூல் ‘முதலாம் குலோத்துங்கன்’. வெளிவந்த ஆண்டு 1930.
இவரின் தமிழ் இலக்கிய-இலக்கணப் புலமையும், பல்வேறு கோயில்கள், மடங்கள் தோறும் சென்று கல்வெட்டுகள், செப்பேடுகள், சுவடிகளை ஆய்வுசெய்த அரும்பணியாலும் பிற்காலச் சோழர் சரித்திரம் (மூன்று பாகங்கள்), பாண்டியர் வரலாறு, காவிரிப் பூம்பட்டினம், திருப்புறம்பியத் தல வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250- 600), தமிழ் இலக்கிய வரலாறு (13, 14, 15ஆம் நூற்றாண்டுகள்), தொல்காப்பியம் பொதுப்பாயிரம் மூலமும் உரையும் போன்ற நூல்களை எழுதியிருக்கிறார்.
அக்காலத்தில் தலை சிறந்த இலக்கிய இதழ்களான செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், செந்தமிழ் போன்ற இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர் சதாசிவப் பண்டாரத்தார்.
‘சோழர் வரலாறு’ ஆங்கில நூலை எழுதிய நீலகண்ட(சாத்திரியா)ர், தேவாரம் பாடியவர்களுள் ஒருவரான சுந்தரரின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்று சொன்னார்.
அதை மறுத்த பண்டாரத்தார் சுந்தரர் 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் எனச் சான்றுகளுடன் கூறினார்.
தேவாரப் பதிகங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி முதலாம் குலோந்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர் என்ற வாதத்தை மறுத்து, அவர் ஆதித்தன் காலத்தை சேர்ந்தவர் என்பதை நிலைநாட்டினார்.
சேக்கிழார் இரண்டாம் குலேத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர் என்பதை ஏற்க மறுத்த பண்டாரத்தார், அவர் மூன்றாம் குலேத்துங்கன் காலத்தைச் சேர்ந்தவர் என்று சான்றுகளை முன் வைத்தார்.
முதலாம் இராசராசனின் அண்ணன் ஆதித்த சோழனைக் கொன்றவர் மதுராந்தகன் என்ற உத்தமச் சோழன் என்ற வாதத்தை முற்றாக மறுத்தார்.
ஆதித்த சோழனை வஞ்சகத்தால் கொன்றவர்கள் பார்ப்பனர்கள் என்பதை உடையார் குடிக் கல்வெட்டு மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.
சோழன் ஒருவன் தன் தந்தை கட்டிய கோயிலுக்காக ஆயிரம் பார்ப்பனர்களுக்கு உணவளித்தான் என்றார் நீலகண்ட(சாத்திரியா)ர்.
அது தவறு, 200 பார்ப்பனர்கள், 300 சிவாச்சாரியார்கள், பல்வேறு சமயமக்கள் 500 பேர்கள் அந்த உணவு விருந்தில் கலந்துகொண்டனர் என்றார் பண்டாரத்தார்.
‘இலக்கியமும் கல்வெட்டும்’ என்ற நூலில் திருப்பாலைப் பந்தல் உலா, இறைசைப் புராணம், ஓங்கு கோயில் புராணம் ஆகிய நூல்கள் இருந்ததாகக் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது என்றும், அந்த நூல்களை இக்காலத்தில் காண முடியவில்லை என்றும் வருந்துகிறார்.
இதில் ‘இறைசைப் புராணம்’ என்ற இறைவாச நல்லூர் பற்றிய புராண வரலாற்று நூலை எழுதியவர் நைனார் சந்திரசேகர புலவர் என்பதை உறுதிப்படுத்த திருக்கோவலூர் எலவானாசூர் கல்வெட்டை முன்வைக்கிறார்.
பல்லவ மன்னன் மகேந்திர வருமன் திருச்சிராப்பள்ளி மலையில் ‘இலலிதாங்குர பல்லவேசுவர கிரகம்’ என்ற ஒரு குடவரையை உருவாக்கியிருந்தான்.
பின் வந்த காலத்தில் இக்குடவரையில் ‘சிராமலை அந்தாதி’ என்ற ஒரு முழு நூல் கல்வெட்டுகளால் வெட்டப்பட்டு இருந்துள்ளது.
இக்கல்வெட்டு நூல் 104 பாடல்களைக் கொண்டது. இவை அனைத்தும் கட்டளைக் கலித்துறையால் ஆனவை. இப்பாக்களை எழுதியவர் வேம்பயர்கோன், காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு.
இந்த அரிய பாடல்களை இந்தியத் தொல்லியல் துறையினர் 1888 ஆம் ஆண்டு நகல் எடுத்து அதை 1923ஆம் ஆண்டு வெளியிட்டனர்.
இதைப் பார்த்த பண்டாரத்தார் திருச்சிராப்பள்ளி குடவரை கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து 1935ஆம் ஆண்டு ‘தமிழ்ப்பொழில்’ இதழில் ஒரு விரிவான கட்டுரை எழுதினார்.
பண்டாரத்தாரின் இக்கட்டுரையை படித்த மு.இராகவையங்கார் அந்நூலின் மூலம், பொழிப்புரை, விளக்க உரை ஆகிய ஒரு சிறப்பான உரையை எழுதினார். தருமபுர ஆதின மடத்தின் வெளியீடாக இந்நூல் அதே 1935ஆம் ஆண்டு வெளிவந்தது.
தந்தை பெரியார், திரு.வி.கல்யாண சுந்தரனார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசியர் வையாபுரியார், பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகியோருடன் செறிந்த நட்புடன் இருந்தார்.
நீதிக்கட்சியால் ஈர்க்கப்பட்டாலும் அக்கட்சியில் இணையாமல், அதன் கருத்துகள், கோட்பாடுகளில் நாட்டமுள்ளவராக இருந்துள்ளார்.
நீதிக்கட்சியின் மாநாடுகள் ஒவ்வொன்றிலும் தவறாமல் இவர் கலந்து கொண்டிருக்கிறார் என்ற ஒரு குறிப்பும் இருக்கிறது.
‘‘தமிழ்நாட்டிற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியவை நிறைய இருக்கின்றன என்று நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்துப் பெரும் துணையாக இருப்பதால் அதில் இருந்து விலகமாட்டேன்’’ என்று தன் இறுதிக் காலத்தில் சொன்னார்.
ஆய்வுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள், மார்கழி 18,, 1991 / 1960ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 2ஆம் நாள் தன் 68ஆம் வயதில் அனைத்து ஆய்வுகளையும் நிறுத்திக் கொண்டு மரணத்தை தழுவிக்கொண்டார்.
– எழில் இளங்கோவன்
கருஞ்சட்டைத்தமிழர் மின்னிதழ் சூலை சூலை 08, 2017
Hi Sir.
I Need this Book இறைவாச நல்லூர்ப் புராணம்