(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 6/9 தொடர்ச்சி)

தலைப்பு-ஆரியச்சூழ்ச்சி, பெரியார், முத்துச்செல்வன் ;thalaippu_aariya-chuuzhchi_muthuchelvzn

ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும்

7/9

  2014 இல் பா.ச.க. பதவியேற்றபோது அதன் உறுப்பினர்கள் இந்தியில் உறுதிமொழி கூறியதையும் சிலர் சமற்கிருதத்தில் உறுதிமொழி கூறியதையும் காணமுடிந்தது. அப்போது மோடி, தான் பிற நாட்டுத் தலைவர்களுடன் உரையாடும்போதும் இந்தியிலேயே உரையாடப்போவதாக அறிவித்ததையும் அறிவோம். அரசு இயக்கும் சமூக வலைத்தளங்களில் இந்தியே இடம் பெற வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் (CBSE) பள்ளிகளில் சமற்கிருதக் கிழமை(வாரம்) கொண்டாடப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அரசு விளம்பரங்கள் ஆங்கில ஊடகங்களிலும் இந்தியிலேயே அளிக்கப்பட்டன. சவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட படிவங்கள் இந்தியில் மட்டுமே இருந்தன. ஆசிரியர் நாள் ‘குரு உத்சவ்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. அந்த நாளில் மோடி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தியில் உரையாற்றி அது நாடெங்கும் பள்ளிகளில் காணொலிக் காட்சியாகப் பரப்ப[ப்பட்டது. நடுவண் கல்வியகங்களில் (கேந்திரிய வித்யாலயா) செருமானிய மொழியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சமற்கிருதம் கற்பிக்கப்பட வேண்டுமென்று ஆணியிடப்பட்டது. நடுவண் அரசின் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றம் பெற்று சமற்கிருதமயமாக்கப்பட்டன. இந்துத்துவ வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே இது.

  தந்தை பெரியார் மேலும் கூறுகிறார் கேளுங்கள்” “சமசுகிருத ஆணையம்; பரிந்துரைப்படி மத்திய அரசாலேயே ‘மத்திய சமசுகிருத வாரியம் (Central Sanskrit Board)  என்ற ஓர் அமைப்பு 1957 ஆகத்து  முதல் நாளிலிருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு, முன்னள் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி, திரு பதஞ்சலி சாத்திரி தலைவர்; மற்றும் 8 பேர் உறுப்பினர்கள். மூன்று வருடங்களுக்கு இவர்கள் பதவியில் இருப்பார்கள்” என்று மெயில் நாள் 1.7.1959 இதழில் வந்ததைச் சுட்டிக்காட்டி. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதைத் தந்தை பெரியார், “இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன? இவ்வளவு ஆர்வம் செலுத்துவதன் உள்நோக்கம் என்ன? என்று ஆராய்ந்தால்தான் பார்ப்பான் தனது ஆதிக்கத்தையும் ஏகபோக உரிமையையும் பாதுகாப்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறான் என்பது விளங்கும். சமசுகிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும்; சுரண்டமுடியும்; நம்மைக் கீழ்ச்சாதி மகனாக ஆக்க முடியும்; அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ சாக்கிரதையாக, விழிப்போடு காரியம் செய்து வருகிறார்கள்.

 இல்லாவிட்டால் உலகம் பூராவும் சுற்றிவருகிற ‘சர்வோத்தம’ சர்.சி.பி. இராமசாமி ஐயர், “சமசுகிருதந்தான் இந்தியாவின் அரசாங்க மொழியாக இருக்க வேண்டும்” என்று பேசி வருவாரா? அது மட்டுமா? தமிழைத் தாய்மொழி என்று கூறும் பார்ப்பனரைக் காணமுடிவதில்லையே. தப்பித்தவறி ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டுவீர்களாயின் அது வயிற்றுப்பிழைப்பைக் கருதி அப்படி உதட்டளவில் கூறிய பார்ப்பானாக இருக்கும், அவ்வளவுதான்” என்று உண்மையை உடைத்துக் கூறுகிறார்.

 இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பிராமணரும் அவர்க்கு ஆதரவான ஊடகங்களும் சமற்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பதன் காரணத்தை அன்றே விளக்கிவிட்டார் பெரியார். இன்றைக்கு ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திடத் தமிழக அரசு நல்கை அளித்து உதவிட வேண்டும் என்று குரல் எழுப்பப்படும்போது ஞாநி போன்றோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைக் காணும்போதும் தமிழகத்துச் சங்(கப்) பரிவாரப் பார்ப்பனர் சமற்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பதைக் காணும்போதும் தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வை புரிகிறதல்லவா? பிராமணர்கள் அனைவரும் எந்தவித வேறுபாடுமில்லாமல் சமற்கிருதக் கொடியைத் தாங்கிப் பிடிக்கையில் தமிழறிஞர்கள், தமிழ்நலன் நாடும் அரசியலார் அனைவரும் ஓரணியில் திரண்டு சமற்கிருதத் திணிப்பை எதிர்க்க வேண்டாமா? அல்லது பெரியார்  “நம்முடைய புலவர்கள், அறிஞர்கள் எல்லோரும் இதைப்பற்றியே நினைக்க நேரமில்லாதது மாதிரி காட்டிக்கொண்டு, பார்ப்பானின் காலைக் கழுவி ‘கதி மோட்சம்’ பெறப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் – வாக்கு – பதவி வேட்டைக்காரர்களோ, ‘நாய் விற்ற காசு குரைக்காது’. ‘கருவாடு விற்ற காசு நாறாது’ என்கிற தன்மையில் – ‘எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்’ என்று எண்ணித் தமிழ் மக்களது மானத்தைப் பார்ப்பனரிடம் அடகு வைத்துக் கூலி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்” என்று அன்று வருந்திய நிலை நீடிக்கப்போகிறதா?

(தொடரும்)

பெங்களூரு முத்துச்செல்வன்