ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 28: புலவர் கா.கோவிந்தன் : அசோகனும் தமிழ்நாடும்

(ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 27: சந்திரகுப்புதனும் தென் இந்தியாவும்-தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு . . . .
அசோகனும் தமிழ்நாடும்
ஆனால், அசோக வருத்தனன் காலத்திலும், தமிழ்நாடு, மகத ஆட்சி எல்லைக்கு வெளியிலேயே இருந்துவந்துள்ளது. மக்களின் நோய் தீர்க்கவும் மாவினங்களின் நோய் தீர்க்கவும், அவன் நிறுவிய இரு நிறுவனங்கள் குறித்துப் பேசும் , அவனுடைய இரண்டாவது பாறைக்கல்வெட்டில், சோழ, பாண்டிய, சத்திரிய புத்திர, கேரள புத்திரர்களை “அந்த” அஃதாவது அண்டை நாட்டவர் அல்லது எல்லைப் புறத்தில் உள்ளார், என்றே குறிப்பிட்டுள்ளான். அவனுடைய 13ஆவது கல்வெட்டில், தெற்கில் தம்பண்ணி அதாவது தாம்பரபரணி வரையான சோழ பாண்டிய நாடுகளில் தரும விசயத்தில் வெற்றி கொண்டதாகக் கூறுகிறான். உலகிற்கு உபதேசிப்பதில் அவன் பெருமகிழ்வு கண்ட, பிராமண, சமண, பெளத்த சமயப் பேராசிரியர்கள் வழங்கும் அறிவுரைகளின் ஒன்றுபட்ட தொகுப்புத் தருமமாம் பல்வேறு வகையான நன்னெறிகளை, மக்களுக்குப் போதிக்கும் சமயத் தூதுவர்களைப் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைப்பதுதான், தருமவிஜயம் என்பது. இது பண்டைக்கால், இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர் இருதிறத்தவராலும், பல்வேறு நாடுகளுக்குப் பெளத்த சமய போதனையாளர்களை அனுப்பியதாகத் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று, அசோகன், ஒருவர் விடாமல் மக்கள் அனைவர்க்குமான தன் உபதேசங்களைப் ‘பெளத்த சத்தியானி” என்று எக்காலத்தும் பெயரிட்டு அழைத்ததில்லை. மாறாக, எச்சமயத்தோடும் சாராததான “தருமம்” என்றே எப்போதும் பெயரிட்டு அழைத்துள்ளான். இரண்டாவது, பௌத்த மதம் பரப்பும் புத்த சந்நியாசிகளைப் பல நாடுகளுக்கும் அனுப்பிய தன் செயலைப் பலரும் அறியச் செய்ய விரும்பியிருந்தால், உச்சைனியில் தான் ஆளுநராக இருந்த போது மணந்து கொண்ட தேவி வழிப்பிறந்த தன் மகன் மகிந்தனைப் புத்தமதம் பரப்ப ஈழ நாட்டிற்கு அனுப்பியதைக் கல்வெட்டில் பொறித்து இருப்பான். ஆனால், இச்செய்தியை மகாவம்சந் தான் நமக்கு அறிவிக்கிறது. அசோகன், தூதுவர்களைத், தரும விசயத்திற்கே அனுப்பினனாக, பல்வேறு நாடுகளுக்குப் புத்தசமயப் பிரசாரகர்களை, மூன்றாவது புத்தப் பேரவை தான் அனுப்பியது. அசோகன், பிராமண இல்லறத்தார், துறவறத்தார், சமய முனிவர்களை மதித்தது போலவே, பெளத்த முனிவர்களையும், மதித்தான் என்பதில் ஐயம் இல்லை, ஆனால், இது பெளத்த சந்நியாசிகளைச் சமயப் பிரசாரகர்களாக அனுப்பியதாகப் பொருளாகாது. இப்பொருள் குறித்தவரை, பெளத்த வரலாற்று அட்டவணை யாகிய மகாவம்சம், ஒருதலைப்பட்ட சான்றே ஆகும். ஆனால், நம்முடைய ஆய்வு அப்பொருள் பற்றியதன்று. அசோகன் கல்வெட்டுக்களிலிருந்து, அசோகன் காலத்தில், அவனுடைய முந்தையோர் காலத்தைப் போலவே, தமிழ்நாடு, வட இந்தியாவோடு சுறுசுறுப்பான மிகப் பெரிய போக்கு வரவினைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்வது ஒன்றே போதும்.
இன்றைய வரலாற்றுத் திறனாய்வாளர்கள், மெளரியப் பேரரசு பற்றியும், பிற்காலத்தே குப்புதர்களில் முடியாட்சி பற்றியும் பரவலாகப் பேசுகின்றனர். பேரரசு, பேரரசைச் சார்ந்த எனப் பொருள்படும் (Empire: Imperial) என்ற இவ்வாங்கிலச் சொற்கள், பண்டைக்காலத்தில், இந்திய நாடுகள் ஒன்றோடொன்று கொண்டிருந்த அரசியல் உறவு பற்றி மிகப் பெரிய தவறான கருத்தினையே உணர்த்துகின்றன. இந்திய வரலாற்றில், இவ்வரலாற்றின் போக்கில், தவறான கொள்கையினை ஏற்படுத்தாமல், “எம்பயர்’ (Empire) என்ற சொல்லை ஆள்வது இயலாது. பேரரசு (Empire) என்ற அச்சொல் உணர்த்தும் உள்ளார்ந்த பொருள் அத்தகைத்து. தன் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் அமைதி நிலைநாட்டல், உரோம் நாட்டுக் குடியுரிமை உரோம் நாட்டுச் சட்டம் ஒழுங்கு முறைகளை மெல்ல மெல்ல விரிவாக்கல், இலத்தீன் மொழியைப் பரப்புதல் ஆகிய இவையே உரோமப் பேரரசு என்பதன் பொருளாம். சட்டம் ஒழுங்கு நிலையில் பிரித்தானியர் முறைகளை நிறுவுதல், நிருவாகத்தில் ஆங்கிலத்தைப் பயன் கொள்ளுதல், ஆங்கிலமுறைப் பள்ளிகளையும், பல்கலைக்கழகங்களையும் பரப்புதல், ஆங்கிலேயர் வருத்தக முறையின் மிகப் பெரிய விரிவாக்கம், கிறித்துவ சமயப் போதனைகளை மெல்ல மெல்லத் தொடங்கல், பிரித்தானிய நாட்டு மக்களாட்சி முறையின் மெதுவான வளர்ச்சி ஆகிய இவையே பிரித்தானியப் பேரரசு என்பதன் பொருளாம். பண்டை நாட்களில், இந்தியாவில் பேரரசு நிறுவல் என்பது, இவற்றில் எதுவும் அன்று. மரபு வழிபட்ட 56 இந்திய சிறுநாடுகளும், பிராமண ஆசிரியர்கள், அவ்வப்போது எடுத்து விளக்கிக் கூறும் தரும சாத்திரப்படியே பெரும் பாலும் ஆளப்பட்டு வந்தன. பேராற்றல் வாய்ந்த பேரரசன் ஒருவன், ஒருதனி ஆழி உருட்டுவோன், உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆள்வோன் , உலகெலாம் ஆள்வோன்” , எனக் கூறப்படும் நிலையிலும், அவன் ஆட்சிக் கீழ் அடங்கிய நாடுகளில் ஆட்சி நிருவாக முறைகளில், அமைச்சர் புரோகிதர் உள்ளிட்ட அரசவை ஐம்பெருங்குழுக்களில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை. போர்க்காலனிகள் எதுவும் ஆங்கு ஏற்படுத்தப்படுவதில்லை. வெற்றி கொண்ட பேரரசனின் சிறுபடைப் பிரிவும் ஆங்கு நிறுத்தப்படுவதில்லை. பெருவீரன் ஒருவன், எண்ணற்ற நாடுகளுக்கும், தன்னைத் தலைவனாகக் கூறிக் கொள்வதும் ஆகிய இவையே; அச்சொற்றொடர்களுக்குப் பொருளாம். தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வது அசுவமேதயாகம் இயற்றுவதன் மூலமே பொதுவாக மேற்கொள்ளப்படும். பொதுவாக, யாகத்திற்கு முன்பாகப் படையெடுப்பு எதுவும் நிகழ்வதில்லை. ஆனால், யாகத்தில் பலி கொள்ள இருக்கும் குதிரையை, அவ்வரசனின் மகன், அல்லது மகள் வயிற்று மகன் பொறுப்பில் கட்ட விழ்த்து விடுவதும், அவ்வேள்வி செய்யும் அரசனின் மேலா திக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அரசன் நாட்டிற்குச் சென்ற அக்குதிரை ஆங்கு அவனால் கட்டப்பட்டு விடுமாயின், அது மீட்பதற்குப் போர் நிகழ்வதும் மட்டுமே வேள்விக்கு முன்பாக நிகழும். ஆனால் பேரரசு ஆட்சி என்பது தனி அரசன் ஒருவனின் தனிப்பட்ட இயல்புகளைப் பொறுத்ததே அல்லது, ஓர் அரச இனத்தின் செயலே அன்று. ஆகவே, இந்தியப் பேரரசுகள் குறித்துக் கூறப்படும் பொதுவான கருத்துக்கள் எல்லாம், குறுகிய காலகட்டத்தில் நிற்பன; பொருள் அற்றன.
அசோகனுக்குப் பின்னர் அரியணை ஏறியவரெல்லாம், அரசியல் நெறியாலும், ஒழுக்க நெறியாலும் வலுவிழந்தவர்கள்!. ஆகவே அவன் மறைவினை, மகதம் போன்ற பிற நாட்டு மன்னர்களின் புகழேற்றம் இடங் கொண்டுவிட்டது. அத்தகைய அரசர்களுள் ஒருவன், கலிங்க நாட்டுக் கார்வேலன். அவனுடைய கல்வெட்டுக்கள், அவன் நாட்டிற்கும் மதுரைக் கும் இடையில் நடைபெற்ற வாணிகத்திற்குச் சான்று பகர்கின்றன.
கலிங்கமும் தென் இந்தியாவும்
விதி, எப்போதும் போல விளையாடிவிடவே, அசோகன் கடைப்பிடித்த தருமம், அவன் இறப்பிற்குப் பின்னர், அவன் பேரரசைச் சிதறுறச் செய்துவிட்டது. அவ்வகையில் தன்னாட்சி பெற்ற நாடுகளில் கலிங்கமும் ஒன்று. அதன் அரசன் காரவேலன் (கி.மு. 200) பாண்டி நாடுவரையும் சென்று பரவிய பெரும் புகழ்ச்சிக்கு உரியவனாகிவிட்டான். அங்கிருந்து குதிரைகள், இரத்தினங்கள், முத்துக்கள், நீலக்கல் மட்டுமல்லாமல், அவற்றைச் சுமந்து வந்த யானைகளும் கப்பல்களும் அவனுக்குப் பரிசுப் பொருட்களாகக் கிடைத்தன். குதிரைகளையும், யானைகளையும், மாணிக்கங்களையும் ஏற்றிக் கொண்டு, வியத்தகு யானைக் கப்பல்களும் கொண்டு வரப்பட்டன. முத்துக்கள், நீலமணிகளோடு இவற்றையும் பாண்டிய அரசன் அனுப்பிவைத்தான். (அப்ஃகூத அசரியம் அத்தினாவன் பாரிபுரம் யு(ப்) தென்ஃக ஃகதி. ரத்ன (மா) நிகம். பண்டராசா எதானி அனெகானி முதமணிரத்னாளி ஃகராபயதி இத்துஃக சத் ச) (ஃகதிகும்பா கல்வெட்டுகள் ; J.B. 0. R. S. iv. 401)
Leave a Reply