[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (18)  தொடர்ச்சி]

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(19)

5. குருபக்தியும் ஐயப்பன் அருளும்

காலம் கடந்த கனி அருள் நிலமே

ஞாலம் கடந்த நடைதரும் அறமே

நீல விண்ணின் நிலைகளின் திறமே

சாலப் பண்பார் தவமே குருவே

இப்படிப் பாடல்கள் தமிழ் இனிமையை உணர்த்துவதாகவும் ஒலிக்கின்றன.

மணியின் ஒசை வாழ்த்தும் ஒளியே

அணியின் எழிலே ஆர்வ மொழியே

பணியின் செயலே பார்வை வழியே

வணங்கும் நுதலே வாழிய குருவே!

என்று போற்றிப்பரவும் பாடல்களைக் கவிதை ஒட்டத்துக்காகவும் செஞ்சொல் நயத்துக்காகவும் பலமுறை படித்து மகிழலாம் அதே போல ஐயப்பனைப் போற்றித் துதிக்கும் பாடல்களும் இயற்கை வளங்களை வியக்கும் இனிய கவிதைகளாகவும், பக்திக் கனலும் உள்ளத்தின் உணர் வலைகளாகவும் வெளிப்பட்டு, இரசனைக்கும் விருந்தாகத் திகழ்வதைக் காணலாம். மேகம் வந்து கூடி நின்று வேகமாக ஓடும் மின்னலோடு இடி இடித்துப் பொன்மழை யாக்கூடும் வேகமாகத் தாவும் நதி மேலும் மேலும் வீழும் விண்ணை முட்டும் நன்மரங்கள் மண்ணைத் தொட்டு ஆளும்

நாகமணிச் சோதிஒளி ஏகஒளி வீசும்

நாடும் வளம் கூடிமகிழ்வோடு கொஞ்சிப்பேசும்

தாகமொடு ஈகைஅருள் ஈயுமணிகண்டர்

சபரிமலை அய்யப்பன் வாழும் அருள்மலையே!

போன்ற சபரிமலை வளம் பாடும் பக்திப் பாடல் களைச் சான்றாகக் கூறலாம்.

 ஐயப்பனை எண்ணிப் பாடும் பக்தி உணர்வு நிறைந்த பாடல்கள் அடியார்கள் மரபில் வந்த மெய்யான பக்தரின் இதயக் கனிவாகத் திகழ்வதைக் காண முடியும்.  எடுத்துக்காட்டாக ஒன்று

 

வேரிலே பழுத்த விரியலாக் கனியே

வெற்றிக்கு வித்தாகும் முத்தே!

வேதனை ஆற்றிட இன்பமாய் வந்து

விளைஅருள் மாமருந்தே! நெஞ்சத்

தேரிலே இருக்கும் தேன்சுவை அணியே!

தித்திக்கும் முக்கனி அமுதே!

தேவர்கள் துயரம் தீர்த்திட உலகில்

தெய்வமாய் வந்த அய்யா!

நேரிலே காண நீள்தவம் செய்தோம்

நெஞ்சகம் உருகிட வந்தோம்!

நேர்மையே! வாய்மையே! நீதியே! ஒளியே!

நிலைப்பொருள் ஆகிய மதியே!

பாரிலே, ஊரிலே, உலகிலே அறம்செய்

பக்தர்கள் உய்ந்திட வந்தோம்!

பரமனின் புதல்வா! சிரம்மிகத் தாழ்ந்தோம்

பார்த்தருள் செய்க அய்யப்பா!

  ஐயப்பனைப் போற்றித் துதிக்கும் பாடல்களிலும் கவிஞரின் முற்போக்குச் சிந்தனை சுடர் தெறிப்பதை உணரமுடியும்.

மதமென்ன, குலமென்ன, மார்க்கங்கள்தான் என்ன?

மனமொன்றிச் சேர்வதில் மனிதர்கள் ஓரினம்!

இதையறிந்தோ யெனில் எல்லோரும் ஒர்மதம்!

என்பதைக் காட்டினாய்! மன்பதை ஊட்டினாய்!

என்றும்,

பலப்பல மதங்கள் ஏன்? பாரினில் சண்டை ஏன்?

பயன்பெற ஒரிறை பார்ப்பதில் பேதம் ஏன்?

என்றும் அவர் உள்ளம் கேட்கிறது.

ஐயப்பனிடம் வேண்டுதல் செய்வதிலும் கவிஞரின் பேருள்ளம், அன்புள்ளம், மனித நேய உள்ளம் பளிச்சிடுவதைப் பாடல்மூலம் அறியலாம்.

அருளாயோ

உடைமைப் பெருஞ்செல்வம், ஒழுக்க நெறி வாழ்வு!

கடமைதனைப் போற்றும் கல்வி ஊக்கத்தால்

திடம் கொள் சிந்தை, திறத்தோடு கோடிப்பொருள்!

தேடிப் பிறர்க்களிக்கும் தெளிவு, உலகத்தை

ஈடில் பெருவாழ்வில் இணைக்கும் அறிவோடு

கூடும் நலமெல்லாம் கூட்டுவிப்பாய் ஐயப்பா!

என்று கோரிக்கை விடுக்கிறார் கவிஞர்.

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்