(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 –தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38

பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார், அதனால் கொதிப்புற்ற கவிஞர் உணர்ச்சி வேகத்தோடு கவிதையில் சாடினார்

தவிப்புடைய நெஞ்சன் நான்

சார்வதோ தெய்வ நெறி!

சாமியே சரணமெனச்

சார்வாசல் அவ்வாசல்

நேமித்த ஒழுக்கமுறை

நேர்மை நிலைஉணர்ந்தே

இக்கோலம் பூண்டுள்ளேன்

இதனைத் தலைமைகொள்

தக்கோன் அறியாமல

தவக்கோலம் பழிக்கின்றான்!

ஆமாமாம். சாமிகளாய்

அரைவயிற்றுக் கஞ்சிக்காய்

சீமான்கள் தாள்பற்றித்

திருடரைப் போய்ப்புகழ்ந்து

தாமிங்கே வாழ்கின்ற

சதிகாரர் தம்மைவிட

நாமிங்கே என்றேனும்

நன்முறை கெட்டோமா?

தலைமை தாங்குகின்ற

தனிப்பெரும் பித்தரேநீர்

நிலைமை புரியாமல்

நெஞ்சார எனைப்பழித்தீர்!

போதை இல்லாத

நீதிக் கவிஞன் நான்

பாதை என்பாதை

பண்பான சீர்பாதை

கைக்கூலி கட்குக்

கைகட்டி வாய்பொத்தி

பைக்கூலி பெறுகின்ற

பாதையென் பாதையல்ல!

மெய்க்கூலி பெறுதற்காய்

மேன்மையாம் ஆன்மீகத்

தெய்வத்தாள் பற்றித்

திசையெல்லாம் தமிழ்வளர்ப்பேன்

சாமியே சரணமெனத்

தான் நினைத்துப் பற்ற்ற்று

யாமிங்கே வாழ்கின்றோம்

யாருக்கும் அச்சமில்லை.

தெய்வீக வழிப்பாதை

சிற்றளவும் அறியா நீ!

செய்கைஎனைப் பழிக்கும்

சிறுமையை விட்டுவிடு!

வான்தவ மோனத்தின்

வாகைபெறச் செல்பவன்யான்

நான்என தென்கின்ற

நாத்தீகப் பேர்வழிநீர்!

என்பாதை நீபுரியாய்,

இருவருக்கும் பாதைவேறு:

இப்படி மேடையிலேயே சுடச்சுடச் சொற்களால் பாய்ச்சினார் பெருங்கவிக்கோ. இது போன்ற வேறு நிகழ்ச்சிகளும் கவிஞரின் கவி அரங்க அனுபவங்களில் உண்டு.

(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்