[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (21)   தொடர்ச்சி]

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (22)

மதங்கள் சாதி மடமை இன்றி

மார்க்கம் கண்ட தமிழர்கள்-பின்னே

விதந்து பிறரின் மதத்தில் சென்ற,

வினைகள் மாற்றப் புறப்பட்டேன்

என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ.

  அறமும் மறமும் ஆன்ற ஒழுக்கமும், உண்மை ஆக்க நெறியும், ஆண் பெண் சமமும், திறமுடன் சங்கக் காலத்தின் முன்பே தமிழர் தேர்ந்த வாழ்க்கை முறையாகும். என்று கவிஞர் அறிவுறுத்துகிறார்.

இம்மதம் அம்மதம் எம்மதம் சேரினும்-நம்மின்

இனம்தமிழ் மொழி தமிழ் என்றே பாடு:

தம்மதம் பெரிதெனச் சாற்றிப் பிரியாதே-தமிழா

தமிழால் ஒன்றுசேர் தமிழினம் கூடு

என்றும் பெருங்கவிக்கோ கூறுகிறார்.

  மனித நேயக் கருத்தையும் எடுத்துக்கூற அவர் தவறவில்லை. நடமாடும் மனிதர்களே நம் கோயில் என்று: சொன்ன சித்தர்களின் சிந்தனை வீச்சு பெருங்கவிக்கேன் கவிதைகளிலும் பொறி தெறிக்கிறது. –

மதமென்ன சாதியென்ன இந்த நாட்டில்

மார்க்கங்கள் தான் என்ன? உலகில் உள்ள

அதர்மங்கள் தானொழிய வேண்டுமென்றால்

அறமொன்றால் தானியலும் இதனை விட்டு

விதவிதமாய்ப் பூசனைகள் செய்வோரெல்லாம்

வீட்டுக்கு விளக்கேற்ற மறந்தார் நல்ல

பதமெல்லாம் பார்க்கின்ற மோட்ச மெல்லாம்

பக்தர்களே பசித்தோரின் வயிறொன் றேதான்!

 

வீணாக அலைகின்றார் துறவி என்றே

வீம்புக்கே நடக்கின்றார் அந்தோ வெட்கம்!!

சாணாக ஒடுங்கிவிட நினைத்தே அன்புச்

சம்சாரம் வெறுக்கின்றர் இவைஎல்லாம்.

பூணாத சடங்கன்றோ ஆசை தன்னைப்

பூட்டுகின்ற திறவுகோல் நீர் தவறவிட்டு

ஏனிங்கே மயங்குகிறீர் இனியே னும் நீர்

ஏழையர்க்குத் தொண்டுசெய முன்வாருங்கள்

என்ற நல்ல கருத்தை வலியுறுத்துகிறார்.

மனிதர்கள் நல்வாழ்வு பெறுவதற்கு வகை செய்யக் கூடிய உயர் எண்ணங்களைச் சொன்ன வள்ளலாரின் கருத்துகள் பெருங்கவிக்கோவை ஈர்த்துள்ளது. அவற்றை அவர் பரிந்துரை செய்யும் தன்மை போற்றுதலுக்கு உரியது.

(தொடரும்)
வல்லிக்கண்ணன்: 
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்