மனமொழியும், கலைத்தன்மையும் கொண்ட பாரதிபாலன் கதைகள்

வல்லிக்கண்ணன்

                சிறுகதைகள் விதம் விதமாக எழுதப்படுகின்றன. கதைகள் எழுதுகிறவர்கள் மனிதர்களையும், அவர்களது இயல்புகளையும், அவர்களுடைய வாழ்க்கை மற்றும் செயல் விசித்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டே சொற்சித்திரம் தீட்டுகிறார்கள். இவற்றில் ஒரு சிலருடைய கதைகள் மட்டுமே தனித்தன்மையும், குறிப்பிடத் தகுந்த சிறப்புகளும் கொண்டதாக அமைகின்றன.

                வாழ்க்கையையும் மனிதர்களையும்பற்றிய தனித்த நோக்கு, வாழ்க்கையும் சூழ்நிலையும் பட்டறிவுகளும், மனசில் ஏற்படுத்துகின்ற சலனங்களும் பதிவுகளும், வாழ்க்கை, மனிதர்கள் இயற்கைச் சூழ்நிலைகள் மரங்கள், மிருகங்கள், பறவைகள் முதலிய அனைத்திலும் ஒருவர் கொள்கிற பற்றுதலும் பாசமும், உள்ளத்தில் ஊற்றெடுக்கிற அன்பும் மனிதநேயமும் சிலர் எழுதுகிற கதைகளுக்கு உயிர்ப்பும் உணர்வும் தனி அழகும் சேர்க்கின்றன. கற்பனையும் எழுத்தாற்றலும் அவற்றுக்கு புதுமெருகு  பூசிவிடுகின்றன.

                பாரதிபாலன் எழுதிய சிறுகதைகள் பதினாறு கொண்ட ‘உயிர்ச்சுழி’ எனும் தொகுப்பைப் படித்ததும் எனக்கு இத்தகைய எண்ணங்கள் உண்டாயின. ஊரையும், ஊரின் அடையாளங்களையும், இயற்கைச் செல்வங்களான ஆறு, மரங்கள், வயல்கள், பறவைகள், மிருகங்களையும் வியந்து இரசிக்கிற அவர், மனிதர்களின் மனசையும் அதன் விசாலத் தன்மையையும் உணர்ந்து போற்றுகிறார். இதை அவரது கதைகள் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

                சிற்றூரின் மனிதர்களையும் அவர்களது மனப்பண்புகள், இயல்புகளையும் சித்திரிக்கும் பல சிறுகதைகளை பாரதிபாலன் எழுதியிருக்கிறார். ‘நம் ஒவ்வொரு சிற்றூருக்கும் இரு நூறு, முந்நூறு ஆணடுக்கால வரலாற்றினையும், சில தனித்த அடையாளங்களையும் கொண்டுள்ளன.  அந்த அடையாளக் குறி ஆறாகவோ, குளமாகவோ, பேராறாகவோ, மரமாகவோ, மரபுகளாகவோ, பண்பாட்டு நெறிகளாகவோ இருக்கலாம். அதுதான் நமது ஊர்களின் ஆன்மாவாகவும்  அந்த ஆன்மாவின் தனி உயிர்ப்பாகவும்(சீவனாகவும்) ஒளியாகவும் திகழ்ந்து வருகின்றது. என்று அவர் குறிப்பிடுகிறார். சிற்றூரின் சில மனிதர்களது உயர்ந்த உள்ளமும், பரந்த மனசும், மனித நேயப் பண்புகளும் போற்றப்பட வேண்டியன என்பதை அவர் தனது கதைகளின் மூலம் உணர்த்துகிறார்.

                ஒரு காலத்தில் சீரோடும் சிறப்போடும் சிற்றூரில் வாழ்ந்து, அவர் நம்பிக்கை வைத்திருந்த கூட்டாளியினாலேயே வஞ்சிக்கப்பட்டு, சொத்து சுகமெல்லாம் இழந்து, பக்கத்து ஊரில் வாழைக்காய் வியாபாரம் செய்து வறுமை நிலையில் வாழ்கிற இராசு செட்டியார், அவர் சந்திக்க நேர்கிற ஊர்க்காரன் பெருமாள்சாமி, இருவர் மனசும் உயர்ந்தது தான் என்பதை விவரிக்கும் ‘உயிர்ச் சுழி’

                இராசு செட்டியாரிடம் “கண்ணியம் நிறைய இருந்தது. ஊரிலே எல்லாரிடமும் ஒரே மாதிரிப் பழகுவார். வடக்குத் தெரு ஆட்கள், தெற்குத் தெரு ஆட்கள் என்று பிரித்துப் பழகமாட்டார்.”  தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெருமாள்சாமியின் தகப்பனுக்கு அவர் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். அவரது வீழ்ச்சி பெருமாள்சாமியின் மனசைச் சங்கடப்படுத்துகிறது. வந்த ஊரிலும் அவனைச் சமமாக மதித்துப் பழகி உபசரிக்கும் செட்டியாரின் செயல்கள் அவன் மனசைத் தொடுகின்றன. விதை நெல் வாங்குவதற்காகக் கொண்டு வந்திருந்த பணத்தை அவருக்கு வேட்டி வாங்கக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறான்.

                “விதை நெல் வாங்க வைத்திருந்த பணம்தான். கூட்டிப் பெருக்கிச் சேர்த்த பணம் தான். ஒரு போகம் தரிசாகக் கிடந்தால் போகிறது. அவர் மனசு நிறையவேண்டும். பச்சைப் பசேலென்று நிறைய வேண்டும். பச்சைப் பசும்புல் காற்றலையில் ஓடுவது போல அவர் கன்னத்துச் சதை மலர்ச்சியில் இடமும் வலமுமாக ஓட வேண்டும். அதைப் பார்த்தால் போதும்” என்று பெருமாள்சாமியின் மனம் சமாதான மடைந்தது. நல்ல சிறுகதை.

                இதே போல மனிதர் அனைவரும் சமம் என மதித்து, வாழ்ந்த அருணாசலம் பிள்ளையின் விசால மனப் பண்பையும் உயர்ந்த செயல்களையும் கூறுகிறது ‘தாய்மண்’ ஊர்விட்டு ஊர்வந்து,  உணவுக்கடை வைத்து வாழ்க்கை நடத்தும் பிள்ளைக்கு “மற்றவர்கள் வயிற்றை நிறைத்தால் மட்டும் போதாது. மனசை நிறைக்க வேண்டும்”. அவர் தனது சாப்பாட்டுக் கடையில் ஆள்காரனாகச் சேர்த்துக் கொண்ட செல்லையா ஊராரால் ஒதுக்கி வைக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன். அவர் அவனைச் சரிசமமாக மதித்துத், தோள் மேல் கைபோட்டு நடந்து, அவனுக்கு உதவியது ஊர்காரர்களுக்குப் பிடிக்கவில்லை. ஒதுங்கி விட்டார்கள். அவர் வியாபாரம் படுத்துவிட்டது. அவர் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்.  செல்லையா செத்துப் போனான் என்ற செய்தி கிடைத்ததும், அவர் இறுதி மரியாதை செலுத்தப் புறப்படுகிறார்.  மரபை மீறி, மரக்கால் நெல்லும் கோடித் துணியும் கொண்டு செல்லத் துணிகிறார் அவர்.

                மனிதநேயம் குடியிருக்கும் மாபெரும் மனசின் சொந்தக் காரராக விளங்கும் ஒரு பெரிய மனிதரை ‘ஒருவரும் ஒருவனும்’ கதை அறிமுகம் செய்து வைக்கிறது. வீட்டு ‘ஐயா’ எல்லாரிடமும் சினேகம் கொண்டாடுகிறவர். அவர் இயல்புகளைக் கதை சுவையாக விவரிக்கிறது.

                பூ மனசு  உடைய ஐயாவை, அவரால் சமமாக, அன்போடும் நேசத்தோடும் பிரியத்துடனும், ஆதரிக்கப்பட்ட, ஆள்காரன் செல்லாண்டி, இன்னோருவரின் தூண்டுதலால் அரிவாளால் வெட்டி விடுகிறான். கழுத்தில் பட்டு தலைபோகவில்லை. ஒரு கைபோயிற்று.

                கால ஓட்டத்தில், செல்லாண்டி தன் தவற்றை உணர்ந்து ஐயாவிடம் மன்னிப்பு கேட்க வருகிறான். அஞ்சி அஞ்சி வந்த அவனை வழக்கமான அன்போடும் பிரியத்தோடும் வரவேற்று, சாப்பிடும்படி செய்கிறார் ஐயா. சிறப்பான சிறுகதை.

                இதை மாதிரி அபூர்வ மனசுக்காரர்களைக் ‘காலநதி’ கதையில் சந்திக்க முடிகிறது.

                ஒரு மரம் எத்தனை பேர் மனசை எப்படி எல்லாம் பாதித்து அவர்கள் உள்ளத்தில் நிலையான இடம் பெற முடியும் என்பதை ‘மரம்’ கதை சுட்டுகிறது. அம்மாவுக்கு வீட்டின்  முன் நின்ற மரம் வெறும் மரமில்லை. மருமகளுக்கு அதன் மதிப்பு தெரியாது. வீட்டை விற்றால் கிடைக்கக் கூடிய பணமதிப்புதான் பெரிதாகப்படுகிறது. மரத்தின் உயர்வை புரிந்து வைத்துள்ள ஒருவரே வீட்டை விலைக்கு வாங்கி, மரத்தைப் பாதுகாக்க முன் வருவது அம்மாவுக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது.

                “அது மரமில்லை. மனசோடு சம்பந்தப்பட்டது. இந்தமரம் எத்தனை பேர் மனசுல வேர் விட்டிருக்கும் தெரியுமா? மண்ணுல நிக்கிற இதோ இந்த மரத்தை வெட்டிச்சாய்ச்சுப் போடலாம். ஒவ்வொருத்தர் மனசுலயும் ஒவ்வொரு விதமா இதுகிளை விட்டிருக்கே அதை வெட்டி எடுக்கமுடியுமா?” என்று கேட்கிறார் வீட்டை வாங்கிய இராவுத்தர். உண்மையை உணர்த்தும் நேரிய சிந்தனை.

                தலைமுறை மாற்றமும் கால மாறுதல்களும் மனிதர்களின் நோக்கிலும் போக்கிலும் பல மாறுதல்களைப் புகுத்தியவாறு இருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டும் நல்ல கதைகளைப் பாரதிபாலன் படைத்திருக்கிறார்.

                நியாயமான சிந்தனையைத் தூண்டுகிற வாழ்க்கை யதார்த்தத்தை நன்கு படம் பிடித்திருக்கிறது ‘மாறுதடம்’ என்ற சிறுகதை.

                புதிய தலைமுறையின் மாறுபட்ட போக்கை சிந்திக்கிற மற்றொரு சிறந்த கதை நான் நீ’.

                ஆழமும் அழுத்தமுமான சுபாவம் கொண்ட நேர்மையான மனிதரின் மகள் வாசுகி. அவள் படித்து, உயர்ந்து, மாநகரத்தில் போய்ப் பெரிய வேலை பார்க்கிறாள். ஊர்க்காரர்களின் நம்பிக்கைக்கு மாறாக அவள் தன் மனசுக்குப் பிடித்த ஒருவனுடன் இணைந்து வாழ்கிறாள். திருமணம் செய்து கொள்ளாமல், கட்டு திட்டம் எதுவும் இல்லாமல், விரும்புகிற வரை கூடி வாழ்வது, விருப்பம் இல்லாத போது பிரிந்து விடுவது என்ற அடிப்படையில் சேர்ந்து வாழ்வது. இதை அறிய நேர்கிற ஊரார், உறவினர், அப்பா ஆகியோரின் மனநிலையை விவரிக்கிற சுவையான கதை.

                “போன தலைமுறை கன்றாவி(கண்ணராவி) என்று தலையில் அடித்துக் கொண்டதை எல்லாம் இந்தத் தலைமுறை வசதியானது என்று தடவிக் கொடுக்கிறது” என்று அறிவுறுத்துகிற கதை இது.

                ஒழுங்காக, நேர்மையாக, சிக்கனமாக, நல்ஒழுக்கங்களுடன் தனது காரியங்களைத் தானே கவனித்துக் கொண்டு, பிறருக்குத் தொந்தரவு கொடுக்காமல், பேராசைப் படாமல், பெரிய தனம் பண்ணாது, சகசமாக – இயல்பாகப், பழக முற்படுகிறவர்களைச் சக மனிதர்கள் – உடன் பணிபுரிகிறவர்கள், கீழ்ப்படிந்து நடப்பவர்கள், மேலதிகாரிகள் முதலானவர்கள் – மதிப்பதில்லை. அது மட்டுமல்ல, கேவலமாகக் கருதுவதும், மனம்போன போக்கில் விமரிசிப்பதும் நடைமுறை நிகழ்வுகள். உயர்ந்த இலட்சியங்களோடு வாழ முனைகிறவன் பைத்தியக்காரனாக, பிழைக்கத் தெரியாதவனாக, குறைபாடுகள் உடையவனாக மதிப்பிடப் பெறுகிறான். பையா அண்ணாச்சியின் வாழ்க்கை அனுபவங்கள் இவற்றை வெளிச்சமிடுகின்றன. அவற்றை ‘அண்ணாச்சி’ கதை இரசமாகப் பதிவு செய்திருக்கிறது.

                நாகரிகப் பெருநகரத்தில், புதுசாகத் தொலைபேசி வைக்க ஆசைப்பட்டு அம்முயற்சியில் ஈடுபடுகிறவர்கள் அனுபவிக்க நேர்கிற தொல்லைகளையும் கட்டநட்டங்களையும் விவரிக்கும் ‘சந்திப் பிழைகள்’, பட்டணத்தில் வேலை பார்த்து நிறையச் சம்பாதித்து சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சிற்றூரிலுள்ள உறவினர் நம்புகிற நிலையில், மாதச் சம்பளக்காரர்கள் நகரத்தில் வாழ்கிற முறைகளையும் எதிர் கொள்ளும் சிரமங்களையும் நேரில் கண்டறிகிற ஓர் அம்மாவின் உள்ளத்து உணர்வுகளைக் கூறும் ‘கானல்’.

                நாகரிகப் பெருநகரத்தில் அடுக்கு மாடிக் கட்டடவாசிகளாக வசிக்கிற குடும்பத்தினரின் இயல்புகளையும் செயல் முறைகளையும் மனப் போக்கையும் எடுத்துக் காட்டுகிற ‘வேடிக்கை மனிதர்கள்’, கல்வி எப்படி இலாபம் ஈட்டும் வாணிபமாக மாறி விட்டது, எத்தகைய பொய்மைகளும் எத்து வேலைகளும் கல்வித் துறையில் தன்நல நோக்குடன் ஆளப்படுகின்றன என்பதை விளக்கும் ‘தீ’ போன்றவை வாழ்க்கையின் உண்மைகளைச் சித்திரிக்கும் கதைகளாக விளங்குகின்றன.

                கோடங்கி நாயக்கர் எனும் நல்ல மனம் உடைய ஒரு மனிதரை அறிமுகம் செய்யும் ‘பங்காளிகள்’, நல்லவளாக – பிறருக்கு உதவும் உத்தமியாக – வாழ்ந்து இறந்துவிட்ட ஒரு கிழவியின் உயர்ந்த உள்ளத்தை வெளிப்படுத்தும் ‘ஈரம்’, சாதாரண மனிதன் ஒருவனின் அந்தரங்க ஆசையையும் வாழ்க்கை ஏமாற்றங்களையும் காட்டுகிற ‘வழிப் போக்கன்’ ஆகியவை மனசின் உயர் தன்மைகளை புலப்படுத்துகின்றன.

                ‘வேதவல்லி’ தனித் தன்மை உடைய ஒரு பெண்ணின்  வாழ்க்கை அவலத்தையும், வருடக் கணக்கில் அதை ஏற்று சகித்து மனஉளைச்சல் வளர்த்து வந்த அவள் ஒரு நாள் செய்கிற திடீர் முடிவையும் கூறுகிறது. அதன் நயங்களை படித்துச் சுவைத்து அறிய வேண்டும்.

                பாரதிபாலன் பலவிதமான மனிதர்கள், அவர்களது மன இயல்புகள், குணச் சிறப்புகள் பற்றி கலைத் தன்மையோடு கதைகள் படைத்திருக்கிறார். இனிமையாக எழுதப்பட்டுள்ள அழகிய வாழ்க்கைச் சித்திரங்கள் அவை.

                                                                                                                      நன்றி                                    தாமரை இதழ் , ஆகத்து 2003