ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (23) தொடர்ச்சி)]
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்
(24)
இருள் மூடும் தமிழகத்தில் அருட்கதிராய் வந்து, மண்ணிலே மனிதகுலம் ஒன்றே என்று நல்மார்க்கத்தை அறிமுகம் செய்த வள்ளலாரை விதவிதமாய்ப் போற்றி இசைக்க பெருங்கவிக்கோ அலுக்கவில்லை. வேறொரு இடத்தில் வள்ளலார் பெருமையை அவர் இவ்வாறு பாடுகிறார்: –
இருட்சாதி மதத்தொழுநோய் இவ்வுலகம் முற்றும்
இவன்பெரியன் நான்பெரியன் என்பதன்றிவேறு
அருட்தன்மை எல்லேரர்க்கும்.காட்டுவதாய் இல்லை
அவரவர்கள் தம்பெயர்க்கே அதர்மங்கள் கண்டார்
பொருட்தன்மை பெரிதல்ல புண்ணியங்கள் அல்ல
பூமியுள்ள மனிதரெல்லாம் மதங்களாலே பிரிந்தே
மருட்தன்மை அடையாமல் சமரசத்தைக் கொண்டே
மன்பதையில் உய்வழியை வள்ளலாரே கண்டார்!
இன்னொரு இடத்தில் இவ்விதம் இசைத்திருக் கிறார்:
வன்மனம் தன்னலம் பல்கிடும் மதங்களை
வாய்மை யென்றே நம்பியே
மனிதர்கள் தமக்குள்ளே வேற்றுமை கற்பித்தே
வழக்காடும் தன்மை யன்றோ?
உன்மதம் என்மதம் ஒன்றாகி மனிதர்கள்
ஒரு மதம் சமரச மாகி
உள்ளொளி வள்ளலார் உயிராசை வென்றால்
உலகமே ஒர்குடும்பம் அன்றோ?
பெருங்கவிக்கோ தனக்குச் சரி என்று படுவதைத் தனது உள்ளத்தில் தோன்றும் உண்மையை, அப்படி அப்படியே வெளிப்படுத்தும் இயல்பு பெற்றிருக்கிறார்.
ஆண்ட வன்தாள் போற்றுவதில்
ஆன்றோரே மகிமையிலை,
பூண்ட இறைமைப் பணியாம்
புரிசேவை செய்பவர்கள்
நற்பணி தொழ யானும்
நாணவில்லை! இந்நாட்டில்
புற்றரவுக் கூட்டம்போலப்
பொல்லாத செய்துவிட்டு
இறைவனின் பெயராலே
ஏமாற்றம் நடத்துகின்றார்
குறைமதியர் இவரைவிடக்
கோடிமேல் தொண்டரென்பேன்!
இவ்வாறெல்லாம் அவர் கருத்துகளை ஒளிபரப்புவதனால் அவர் ஒரு நாத்திகர் என்று பலர் எண்ண இடம் ஏற்படுகிறது. கவிஞர் ஆணித்தரமாக அறிவிக்கிறார்
ஆத்திகம் என்பதும் நாத்திகம் என்பதும்
அவரவர் மனப்போக்கு
தீத்திறம் இரண்டிலும் உண்டென்றே உண்மை
தெளிவதே நன்னோக்கு!
மதங்கள் பலவாறு மல்கியதே
வையம் மடமையை மாய்த்ததுவா?
விதவிதமாகவே வேதங்கள் காட்டலால்
வேதனை மாறியதா?
உதவிகள் நன்மை உண்மை யென்பதும்
ஒருமத உடைமையல்ல
அதருமமும் தருமமும் ஆத்திகம் நாத்திகம்
அறைவதில் மட்டுமில்லை.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply