ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (25) – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (24) தொடர்ச்சி)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்
25
பண்பு நலன்களாலேயே ஒருவன் நன்மணி மனிதன் ஆவான் என்றும், பழியிலா வாழ்வே பண்பின் ஒழுக்கமே பயன்தரு உயர்வாகும் என்றும் அவர் உறுதியாய்க் கூறுகிறார்.
எது தெய்வம் என்று கேட்டுப்பெருங்கவிக்கோ தெளிவுபடுத்தியுள்ள கவிதைகள் அவரது உளப்பண்பை, நல்நோக்கை, மனவிரிவைப் புலப்படுத்துகின்றன.
தீதில்லா நெறியினிலே தெய்வம் உண்டு!
திக்கெல்லாம் உறவாடும் இயற்கைத் தாயாள்
மோதிவரும் அழகுருவில் தெய்வம் உண்டு!.
முதிர்கின்ற அனுபவத்தில் தெய்வம் உண்டு!
யாதினிலும் இனிய தெய்வம் நம்மை ஆக்கும்.
நற்தெய்வம் கற்பிக்கும் ஆசானேதான்!
உழைக்கின்ற கரங்களிலே தெய்வம் உண்டு!
உண்மையிலே நன்மையிலே தெய்வம் உண்டு
விழைக்கின்ற தொண்டினிலே தெய்வம் உண்டு
வெற்றியிலே நற்தெய்வம் உண்டு! ஏழை
அழைக்கின்ற குரலினிலே தெய்வம் உண்டு!
அன்னவர்கள் துயர்தீர்ப்பான் உண்மைத் தெய்வம்:
தழைக்கின்ற கொழுந்துறை வாழ் மக்கள் தம்மின்
தமிழ்த் தொண்டில் தனித் தெய்வம் என்றும் உண்டு
தென்னையிளங் கீற்றினிலே தெய்வம் காண்பேன்:
சிறுமையிலா அருமையிலே தெய்வம் காண்பேன்!
புன்னை மரச் சோலையிலே பூக்கும் வையப்
பொழிலெல்லாம் தெய்வத்தைக் காண்பேன்! நன்றாய்
என்னைநான் எண்ணித்தான் பார்க்கும் போதென்
இதயத்தில் தெய்வத்தைக் காண்பேன்! ஒப்பில்
அன்னைமொழி எழுத்தில் நல் எழுது கோலில்
அகிலம் உள் அனைத்திலுமே தெய்வம் காண்பேன்!
உண்மையான ஆன்ம வழி நடை பயிலும் அருளாளர் கவிஞர் சேதுராமன் என்பதை அவரது கவிதைகள் பறை. சாற்றுகின்றன. தன்னைப்பற்றி அவரே கூறியிருப்பது: கவனத்துக்குரியது:
போதை இல்லாத
நீதிக் கவிஞன் நான்.
பாதை என்பாதை
பண்பான சீர்பாதை!
கைக்கூலி கட்குக்
கைகட்டி வாய்பொத்திப்
பைக்கூலி பெறுகின்ற
பாதையென் பாதையல்ல.
மெய்க்கூலி பெறுதற்காய்
மேன்மையாம் ஆன்மீகத்
தெய்வத்தாள் பற்றித்
திசையெல்லாம் தமிழ்வளர்ப்பேன்.
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply