ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) – வல்லிக்கண்ணன்
[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (27) தொடர்ச்சி]
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28)
அறந்தவறாமல் வாழ்ந்தால்
அகத்தினிய வலிமை ஓங்கும்
திறந்தவறாமல் வாழ்ந்தால்
செம்மைசால் நலங்கள் தேங்கும்
சிறந்தபேர் பணிகள் செய்தால்
செய்தவக் கனிபழுக்கும்
உறவெனக் கவிதை கண்டால்
உளமூன்றும் வாழ்க்கை சூடும்!”
மனிதர்களுக்குள் காணப்படும் மாறுபாடுகள் புற்றியும், அவை நீங்குவதற்கான வழிகள் குறித்தும் பெருங்கவிக்கோ சிந்தனைகள் வளர்த்துள்ளார்.
மன்பதை அல்லலில் மனவேறு பாட்டினில்
மதி கெடத் துடித்தலும் ஏன்? ஏன்?
மனிதர்கள் மனிதர்க்குள் மாவேறு பாடுகள்
மல்கிடப் பிழிந்ததும் ஏன்? ஏன்?
துன்பமும் துயரமும் மாந்தர் சுயநலமும்
தோளினில் ஏறிய(து) ஏன்? ஏன்?
துரோகமும் வஞ்சமும் பஞ்சமும் வதைத்திடத்
துன்மார்க்கம் ஓங்கலும் ஏன்? ஏன்?
வன்மனம் தன்னலம் பல்கிடும் மதங்களை
வாய்மை யென்றே நம்பியே
மனிதர்கள் தமக்குள்ளே வேற்றுமை கற்பித்தே
வழக்காடும் தன்மை யன்றோ?
உன் மதம் என் மதம் என்று பேதங்கள் வளர்க்காமல் எல்லோரும் ஒன்றாகி, மனிதர்கள் அனைவரும் சமம். என்ற உணர்வோடு ஒரு மதம் சமரசமாகி, உள்ளொளி பெற்ற வள்ளலார் காட்டிய வழியில் சென்றால் ஒரே உலகமாய் ஒரு குடும்பம் போல், வாழலாமே என்று. கவிஞர் கருதுகிறார்.
பெருங்கவிக்கோவின் சீற்றத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாக இவற்றைக் குறிக்கலாம்
வீரம் எங்கடா விவேகம் எங்கடா மானமின்றிச்
சோரம் போகிறாய் தூ! தூ! தூ! நீயொரு சொரணையிலா
பேரம் பேசிடும் பேடித் தமிழனே! உன்னையும் ஓர்
சேர சோழநற் பாண்டிய மறத்தியா பெற்றிட்டாள்?
கட்சிப் பெயராலே வெட்டித்தனத் திமிர் வீம்பாலே
குட்டிச் சுவராகக் கெட்டுப் போவதில் பயனென்ன?
பெட்டிப் பாம்பு போல் முட்டிப்போட்டுநீ தில்லியிலே
மட்டியான பின் கிட்டே வந்து ஏன் கதைக்கிறாய்?
என்று சாடுகிறார்.
தமிழரின் தற்கால நிலை கவிஞரின் கோபத்தை அதிகப்படுத்தக் கூடியதாகவே இருக்கிறது.
விரிந்த சிந்தையும் வெற்றித் திருநோக்கும்
புரிந்த பேரறமும் புடம்போட்ட கொள்கைகளும்
ஞாலத்தில் ஓங்க நனிபெற்ற நம்மினத்தார்
ஏலத்துப் பொருளாகி எடுப்பார் கைப்பிள்ளையாகி
தமிழ்ப் பண் பாட்டுத் தலைமையைத் தான்மறந்து
இமிழ்கடல் சூழ்வையம் இறுமாப்பாய்ப்படை யெடுத்த
அவனவனுக்கேஆம் ஆள்தோதாய் ஆளாகி
புவனத்தில் கேவலப் பொழுதுபோக்குக் கடிமையாய்
மாற்றார் தமக்கு மருக்கொழுந்து வாடையாய்
கூற்றுவன் போல் கொடியர் கொடுமைக்குக் காவலாய்
வாயடங்கி வயிற்றை வளர்த்தால் போதுமெனும்
மாயத்தில் கட்டுண்டார் மதிமறந்தார்! விதி மறந்தார்!
இச்சைத் துரோகியர்க்குப் பாய்விரித்துப் பயந்து ஒடுங்கியிங்கே
பிச்சைக்காரர் போல் பேயடிமை ஆகிவிட்டார்
வந்தவனெல்லாம். தமிழன் வாகான பிடரியிலே
குந்தினான் அவனை குப்புறத் தள்ளுகின்ற
அறிவின்றி அமர்ந்தார் நம் அறம் மறந்தார் மறம்துறந்தார்!
நெறியதுவே என்று நெடிதுநாள் கழித்து விட்டார்.
வேறொரு இடத்தில், இன்றைய இழிநிலையை இவ்விதம் விவரிக்கிறார்
கிடைத்ததைச் சுருட்டித் தம்தம்
கிழமையே வளர்க்க எண்ணும்
உடைப்பெரும் சுயநலத்தார்
உயிர்த்தமிழ் நாட்டில் இன்றோ
நடைபோடப் பெருகி விட்டார்
நானிலப் பொதுந லத்தை
விடைகூறி அனுப்பி விட்டார்,
விடிவெள்ளி மறைத்தார் அம்மா!
புரிந்தவர் கூட இந்நாள்
புரியாமல் நடிக்கின் றார்கள்.
சரியான கொள்கை நெஞ்சம்
தானேற்கும் கொள்கை கூறத்
தெரியாமல் அல்ல!
சொன்னால் தினக்கூலி கிடைக்கா (து) என்றே
உரிமையை அடகு வைத்தார்
உயிர்ப்பெரும் அறிஞர் இந்நாள்’
நாட்டைக் கெடுப்பவர்களில் அரசியல் வாதிகள் முதன்மையானவர்கள். மொத்தமாய் நாட்டின் மோசம் நீக்கிட அவர்கள் சித்தம் வைப்பதில்லை. அவரவர் கட்சிக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதிலேயே அவர்கள் கருத்தாக இருக்கிறார்கள். அதற்காக அவரவர் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு கூட்டு சேர்கிறார்கள்
(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்
Leave a Reply