(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 30 தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 31 

அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து

பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள்

என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கினால், ‘தவம் வென்றது போல்தான் வரும் நலமே’ என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

  பொதுவாக, மேடை மீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தாம் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக் கரவொலி பேச்சாளர்களைக் கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன் காட்டுவதில்லை. இந்த நிலையைப் பெருங்கவிக்கோவின் பாட்டு சூடாகச் சுட்டுகிறது.

நின்று தலைநிமிர்த்தி நெடும் பேச்சுப் பேசிவிட்டுக்

கூட்டத்தின் கரவோசைச் குளிர்ச்சியிலே – மெய்மறந்து

நீட்டிப் படுத்தலன்றி நேர்மையாய் யான் என்று

திறமை காட்டிச் செயலாக்கம் செய்தவர் யார்?

“சிறுமைத்தனத்தில் திறமை கொன்று சீரழிந் தேகுவதோ! வறுமை வாழ்வைப் பெரிதாய்க் கண்டு மனம் இழப்பதுவோ?” என்று கேட்கும் கவிஞர், மனிதனாக நடப்பது எவ்விதம் என்று கூறுவது சிந்திக்கத் தூண்டுவதாகும்.

மனிதன் என்பது பொதுச் சொல் எனினும்

மலரும் முகங்கள் பலவிதம் – இந்த

தனித்தனி மனிதர் நடக்கும் வழிகளும்

தனித் தனியாகப் பலவிதம்!

போனவன் போக்கில் போவேன் என்பது

புரியாத் தனத்தின் வித்தாகும் – நெஞ்ச

மானத் தன்மை வகுக்கும் வழிமுறை

மதித்து நடப்பதே சொத்தாகும்

அறிஞரைப் போற்றி, அவர்களை வழிகாட்டியாக ஏற்று, அவர்கள் காட்டிய பாதையில் நடக்க வேண்டும் என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. பெருங்கவிக்கோவின் புதிய பார்வை அதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இல்லை. அதற்கான காரணத்தை அவர் தெளிவாகச் சொல்லுகிறார்.

முன்னே தோன்றிய அறிஞனைப் போற்றினும்

முழு அடிமை நீ ஆகாதே – அடடே

பின்னே அவனை நீ வெல்வது உண்மை

பேரறிவாளன் நீ மறவாதே

நெஞ்சம் இருப்பதோ கையளவில் தான்

நினைவோ உலகை வெல்லும் – எந்த

வஞ்சம் வரினும் வாழ்வோ தாழ்வோ

வாகை உறுதி கொள்ளும்

மற்றவர் தீய குற்றம் தனை மிதி! மனிதத் தன்மை ஊட்டு! இவ்வாறு மனத்தை வீறு கொள்ளும்படி தூண்டும் கவிஞர்,

ஊட்டி வளர்த்தவர் காட்டிக் கொடுப்பாரேல்

உந்திப் பழித் தொதுக்கு! – மனமே

நாட்டில் பிழைக்கத் தெரிந்த மனிதரவர்

நம்பிப்பின் செல்லாதே!

என்று விழிப்புணர்வு ஊட்டுகிறார். சோர்வு அடையாதபடி ஊக்கத்தோடு உழைக்க வேண்டும் என்றும் அவர் ஊக்கப்படுத்துகிறார்.

ஏற்ற அறக்கொள்கை எவரும் மதிக்காமல்

இன்னல் தருவதாயிருந்தால் – மனமே

போற்றலிலாத தென்றெண்ணிச் சோராதே நீ

பொங்கி நல முடிப்பாய்!

மான வாழ்வி லொரு மாசு புகுந்திடில்

வாய்மை நெருப்பாலே – மனமே

ஆனமுறையில் பொசுக்கி முன்னேறு நீ

ஆக்கம் தனைத் தேடு!

என்றும் நல்வழி புகட்டுகிறார்.

(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்