(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி)

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்

(7.)

2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)

மேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும்.

முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்!

முத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள்

 கற்றவர்கள் இன்றெழுத வேண்டும்! நல்ல

கருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்

 

நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த

 நாடாள வேண்டும்;ஆம்! வேண்டும்! வேண்டும்

 பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும்

பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்!’

இன்று தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு ஏற்றம் இல்லை. ஆட்சியில், நீதித் துறையில், கல்வி நிலையங்களில் சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற்றிருக்கவில்லை. கடைத்தெருவில் பலகை களில் தமிழ் இல்லை. இந்த இழிநிலையால் கவிஞர் உளம் கொதிப்பதில் வியப்பெதுவும் இல்லை.

விழாக்களுக்குக் குறைவுண்டா? தமிழின்பத்தை

விள்ளுதற்குக் குறைவுண்டா? தமிழாம் அன்னை

அழாக் குறையாய் வாழ்வது தான் வாழ்க்கை எனற

அவலநிலை தமிழ் நாட்டில் இனும் நீடித்தால்

பலாப்பழமாய் ஆட்சிபெற்றுப் பயன்தான் என்ன?

பயனின்றிச் சுற்றுகின்ற ஈக்களா நாம்

 இலாக்குறையை நாம் நீக்கவேண்டும் என்றால்

இவ்வாட்சி தமிழாட்சிப் பழம் அறுப்போம்”

  இம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ ‘தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை, திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல்லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக அமைந்துள்ளது. இது, ‘தமிழா, சாதியை மற, தமிழை நினை. மதத்தை மற, தமிழை நினை. கட்சியை மற, தமிழை நினை’ என்று: முழக்கமிட்டுத் தமிழுக்கு மாண்பு தேட முயன்ற நடைப் பயணத்தின் நோக்கங்கள், உதவிய பெருமக்களின் பங்களிப்புகள், நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட பட்டறிவுகளை எல்லாம் இந்தப் பாவை நூல் விவரிக் கிறது.

 இதை வலியுறுத்தும் வகையில், தமிழ் மக்களிடையே தமிழ்த் தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பெருங் கவிக்கோ தமிழ் நடை மறுமலர்ச்சி இயக்கத்தை நடத்தியது முக்கியமான தமிழ்ப் பணி ஆகும்.

  எண்ணற்ற தமிழ் அறிஞர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொள்ள இந்த இயக்கம் கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்குத் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்டது.

. பின்னர் தமிழ் ஊர்திப் பயணம் நடத்தியது. வழி நெடுகிலும் உள்ள முக்கிய ஊர்களில் மக்களிடையே தமிழ் முழக்கம் செய்து, தனது கொள்கைகளை எடுத்துக் கூறி, மக்களைத் தமிழ் உணர்வு கொள்ளும்படித் தூண்டியது. தமிழ் நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டும். அனைத்து ஆட்சித் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கண்டிப்பாகச் செயலாக்கம் பெற வேண்டும். அனைத்துக் கல்வியும் தமிழ் வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் வணிக நிலையங்கள், தொழில் நிறுவனங்கள். அரசு நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்ப் பலகையும் தமிழில் எழுதப்பட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ்தான் நிருவாக மொழியாக இருக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்இவற்றைக் கோரிக்கைகளாகக் கொண்டு இவ் எழுச்சிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருங்கவிக்கோ

  தமிழா ஒன்று சேர்! தமிழால் ஒன்று சேர்! தமிழுக்காக ஒன்று சேர்! இம்முழக்கங்களை ஒலித்தவாறு முன்னேறிய தமிழ்நடைப் பயணம் தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவைப் பெற்றது.

 தமிழகத்தில் தமிழ்த்தாயின் இன்றைய அவலநிலையை மாற்றித் தமிழுக்கு முதன்மை பெற்றுத்தரும் முயற்சியில், நற்கருத்துக்களை உயிரும் உணர்வும் நிறைந்த கவிதைகளாக இயற்றியுள்ள கவிஞர், ஏறத்தாழ ஐம்பது நாட்கள் தமிழகம் முழுதும் நடந்து நடந்து கொள்கை முழக்கம் செய்தது அரும்பெரும் சாதனையே ஆகும். இதன் மூலம் தான் வெறுமனே எழுதிக் கொண்டிருக்கும் கவிஞரல்ல, எழுத்தில் வடித்துத்தரும் உயர் கருத்துகளுக்குச் செயல் வடிவமும் கொடுக்கிற வீரமறவரும்கூட என்பதை நாடு உணரும்படி செய்த சாதனையாளரும் ஆகிறார் பெருங்கவிக்கோ.

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்