thamizh-hindi01

இந்தியை விரும்பும் செந்தமிழ் நண்பரே ஐயம் தெளிமின்

–    பரணி பாடிய கவிஞர் அரங்கசாமி, இராசிபுரம்

ஒருவன் பிறப்பால் தமிழனாயும், மொழியால் தமிழனாயும் இருப்பானாகில் அவன் நாடு எப்பெயரால் வளரும்? தேசியப் பற்றினால் அந்தந்த நாடு வளம் பெற வேண்டுமே தவிர பல கண்டத்தை இணைக்க முடியுமா?

இந்தியா என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று இலக்கியச்சான்று உண்டா?

நேருவைத் தலைவராகக் கொள்வதும் காமராசரைத் தலைவராகக் கொள்வதும் அவரவர் விருப்பம், அதனால் எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதன்று.

மொழியால் தமிழைப்பெற்று, நாட்டை இந்தியா என்றால், இந்தி மொழி ஆட்சி மொழி மன்றமேறி, தமிழை வீட்டுமொழியாகக் கூட இருக்க வொட்டாமல் அழிக்கும்.

1. இந்தி எனும் வடமொழி தமிழகத்தே சுமார் ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே வகுத்து மொழியாக நுழைந்து, செந்தமிழைக்கலவைத் தமிழாக்கி தமிழன் 100க்கு 7 பேர் கூடப்படித்தவனாக இல்லாத அளவு கெடுத்தது.

இன்று இந்தி ஆட்சி மொழியாக வருகிறது என்ற உணர்ச்சியை ஊட்டி, தமிழ்ப் படிக்க விரும்பும் இளைஞர்களை இந்தி படிக்கத் தூண்டுகிறது, இனி இந்தி ஆட்சியேறினால் தமிழுக்கு இடம் இன்றி வீட்டு மொழியாகக் கூட இல்லாமல், ஆங்கிலேர் இந்தியர் மாதிரி, குரம்பர் தமிழ் மாதிரி சீரழிந்து விடும் என்பது உறுதி.

2. இந்திய நாட்டிலுள்ள மாநிலங்களின் தொடர்புக்கு ஏற்ற மொழி தமிழ்தான்; இந்தியன்று. பண்டைக்காலத்தில் நாவலந்தீவு என்ற நிலையில் தமிழ் -, தாய் மொழியாக எல்லா நாட்டினரும் ஏற்க தமிழாட்சி நடந்ததை மறக்க முடியாது. இன்று இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட நாடு இல்லை. இந்தி பேசும் நாடு நானகு என்றாலும் அங்கும் பல மொழி பேசுவோரும் உண்டு.

3. தமிழ் நாட்டில் உயர்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமன்று; திண்ணைப் பள்ளிகளிலும் தனிவகுப்பு முறையிலும் இந்தி நுழைந்து வளருகிறது அது வளர்ந்து ஆட்சி ஏறினால் இன்று படித்துப்பட்டம் பெற்று நீதி செலுத்தும் அத்தனை பேர் வாழ்வும் பாதிக்கத்தான் செய்யும் என்பதை மறுக்க முடியுமா?

4. கோவில்களில் ஆரிய மந்திரம் நுழைந்து தமிழைக் கெடுத்தது.
திருமணங்களில் ஆரிய மந்திரம் நுழைந்து தமிழ் அறவுரையைக் கெடுத்தது.
இலக்கியங்களில் தமிழ் நடைகளில், தமிழ்ச்சொல் எதுபிற சொல் எது எனக்கான முடியாத அளவு நுழைந்து தமிழ் உணர்வைக் கெடுத்தது ஆரியம்.
கீதைபோன்ற ஆரியச்சுலோகம் எளிதென்றும், தமிழ் செய்யுள் நடை கடினமென்றும் தமிழர்களுக்கு அச்சம் பிறந்தது.
தமிழர்களின் வாழ்வு முறை எது என அறிய முடியாதபடி வட மொழிச் சடங்குகள் மறைத்து விட்டன.
ஊர்ப்பெயர், ஆட்பெயர், பொருட்களின் பெயர் இறைவனின் பெயர், ஆண்டு திங்கள் நாள், முதலிய பெயர்கள் தமிழாக இல்லாமல் ஆரியம் மறைத்தது.
இவற்றை மறுக்கிறீர்களா?

5. பிற மொழிகள் எனப்படும் ஆங்கிலம், இந்தி என்ற இவற்றால் தாய் மொழிக்குச் சிறப்பு அமையாது. எனினும், இந்திப் பயிற்சி சில மாநிலங்கட்கு மட்டுமே பயன்படும். ஆங்கிலப் பயிற்சி உலகம் முழுவதுக்கும் பயன்படும்.
திருக்குறள் இரண்டாயிரமாண்டு தமிழில் இருந்தும் ஆங்கிலேயர்கள் கண்டபிறகே உலகம் முழுதும் பரவ முடிந்தது. இதை மறுக்க முடியுமா? ஆயினும் குறளுக்காகத் தமிழ் படிக்க பெரும்பாலோர் முன் வரவில்லை.

6. இந்தி நுழைவால் தமிழ் அழியும் என உறுதி கூறலாம். எப்படியெனில், இங்குள்ள தமிழரிடை மகமது நபிநாயகத்தின் கொள்கை பரவத் தொடங்கிய காலத்து உருதுவும் உடன் நுழைந்தது. இன்று அத் தமிழர்களின் தாய்மொழி உருதுவாகி, தமிழைப் படித்துணரும் நிலை அமைந்துள்ளதைக் காணும்போது இந்தி நுழைவால் தமிழ் கெடும் என்ற உண்மை எவருள்ளத்தும் பசுமரத்தாணிபோல் பதியத்தானே செய்யும். இதில் போலி மனச்சான்றுக்கு இடமுண்டா?

7. பொதுவாகத் தாங்களும் பிறரும் வேண்டாத இந்தியை, ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற ஒரு சிலர் விருப்பத்தின் காரணம் தெளியாத ஒரு கட்சியினர், இந்தி வேண்டுமென்பதைப் பிரிவு எண்ணம் எனக் காணாமல், இந்தியால் தமிழ் கெடும் எனக் கண்டுணர்ந்து கூறுவோர்களை, ஒரு கட்சியினர் வளர்ச்சி எனக் கூறுவது, மொழியால், மரபால் நாட்டின் உரிமையால் விழிப்படைந்து வாழுவோர்களை வெளியேற்றுவதாகக் கூறி மிரட்டுவது புறக் கூற்று என்பதை இப்போதாவது உணருகிறீர்களா?

அன்பு நிறைந்த பாரதம், எம்.சி. இலிங்கம் அவர்களே, என் கருத்தைச் சற்று சிந்தித்துப் பார்த்து கண்டிக்க வேண்டிய பகுதி இருப்பின் கண்டித்து உடனே மறுமொழி கூற எதிர்பார்க்கிறேன். உங்கள் பெயர் முன் ஏன் பாரதம் எனச் சேர்த்துக் கொண்டீர்?

பாரதம் என்பது இந்நாட்டின் பொதுப்பெயர் என்று எங்குக் கண்டீர்? தமிழ் இலக்கியங்களிலா? மரபு வழக்குகளிலா? பார் – அதம் என்ற சண்டை நூல் பெயரிலா? ‘எம்-சி’ என்றது உங்கள் தந்தையின் பெயர் முதலெழுத்துதானே? அது ஏன் தமிழாக இல்லாமல் பிற மொழியால் மறைந்தது?

உங்கள் ஒரு பெயருள், ஆங்கிலமும், இந்தியும் நுழைய இடம் பெற்றதென்றால் ஏன் தமிழைக் கெடுக்காது? சிந்தியும்.

– குறள்நெறி : பங்குனி 19, தி.பி.1995 / 01.04.1964 : பக்கம் 5

thamizh-hindi02