(இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? 1/4 இன் தொடர்ச்சி)

இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?

2/4

 மாநில அரசியல் கட்சிகள் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சியும், பஞ்சாப்பு மாகாணத்தில் யூனியனிசுட்டு கட்சியும் 1919 ஆம் ஆண்டு சட்டத்தால் கொடுக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தின் வரம்புக்குள் நின்று ஆட்சி செய்ய முடிந்தது. அப்போது சென்னை மாகாண நிருவாகி, தலைமை அமைச்சர் (PRIME MINISTER) என்றே அழைக்கப் பட்டார்.

அந்தக் காலம் தொட்டு பேசப் பட்ட செய்தியே வலிமையுள்ள மைய அரசா? அல்லது வலிமை கொண்ட மாநிலங்களா? என்பதாகும். இந்த முழக்கங்களின் பின்னணியில் வலிமையான மத்திய அரசு என்ற அணியில் இந்திய தேசியக் காங்கிரசு கட்சியும், முழு உரிமை கொண்ட மாநிலங்களை இணைக்கும் மத்திய அரசு வேண்டும் என்ற அணியில் முசுலீம் லீக்கு உள்ளிட்ட சிறுபான்மை அரசியல் கட்சிகளும் இருந்தன.

காங்கிரசில் வலது இடது என இரண்டு அணிகள் இருந்தன. இரானடே, , மௌலானா அபுல்கலாம் ஆசாத் போன்றவர்கள் இடது சாரிச் சிந்தனையாளர்கள்.

காந்தி, வல்லபபாய் பட்டேல், கோகலே போன்றவர்கள் வலதுசாரிச் சிந்தனையாளர்கள். இவர்கள் வருணாசிரமக் கோட்பாட்டின் காவலர்கள். 

இந்த இரண்டு அணிகளுக்கும் நடுவில் இருந்தவர் பண்டித சவகர்லால் நேரு ஆவார்.

மூன்று வட்ட மேசை மாநாடுகள் நடைபெற்றன. அதன் பின்பு நாடாளுமன்றக் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அன்றிருந்த ஒற்றையாட்சியை மாற்றித் தன்னாட்சி கொண்ட மாநில ஆட்சிகளாகப் பகுத்து, சுதேச மன்னர்களின் அரசுகளையும் இணைத்து அவற்றையெல்லாம் ஒரு கூட்டாட்சியின் கீழ் நிறுவி தன்னாட்சி முறையை நிலை நிறுத்துவது தான் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டமாகும்.

ஆனால் நமக்குக் கிட்டியிருக்கும் அரசமைப்பு விதிகள் கூட்டாட்சி என்ற போர்வையில் அமைந்த ஒற்றையாட்சி முறையாகும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொல்லாட்சியில் ஒற்றுமையில் வேற்றுமை காணும் ஓர் அமைப்பாகும்.

மாநிலங்களின் தன்னாட்சிக் கோட்பாடு அல்லது கூட்டாட்சித் தத்துவத்தை முழுமையாகத் தகர்த்து சனாதனக் கோட்பாட்டை நிலை நிறுத்தச் செய்யப்பட்ட அரசியலில் பெரும்பங்காற்றியவர்கள் தேசப் பிதா என்றழைக்கப் படும் காந்தி முதலான காங்கிரசுத் தலைவர்கள் ஆவர்.

பேராயக் கட்சி (காங்கிரசு) என்ற அமைப்பிலிருந்து 1933 ஆண்டு பிரிந்தது தான் இந்து மகாசபைக் கட்சியாகும். எனவே சனாதனக் கோட்பாட்டை இன்று பா ச க என்ற கட்சி வலிமையாக முன்னெடுத்தாலும் அதற்கு வழி காட்டியவர்கள் காங்கிரசு என்ற கட்சி தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  

இந்திய அரசமைப்புச் சட்டம் 1950க்குப் பின் இந்த இரண்டு கட்சி ஆட்சிக் காலங்களிலும் இதுகாறும் 104 முறை திருத்தப் பட்டுள்ளது. இவற்றில் பெரும் பாலான திருத்தங்கள் மாநில அரசாங்கங்களுக்கு இருந்த ஒரு சில உரிமைகளையும் பறித்துக் கொள்வதற்காகவே அமைந்த ஒன்றாகும். குறிப்பாக நெருக்கடி நிலை கால கட்டத்தில் செய்யப் பட்ட 42 ஆவது சட்ட திருத்தங்கள் பல மாநில  உரிமைகளைப் பறித்தன. நெருக்கடி நிலை காலக் கட்டத்தில் 42 ஆவது திருத்ததின் மூலமாகச் செய்யப் பட்ட அநீதி ஒரு வன்முறையாகும்.

ஒன்றியம், மாநிலம், பொதுப் பட்டியல் எனத் தங்கள் வரம்பு அதிகாரப் பட்டியல் அரசமைப்பின் 7 ஆவது அட்டவணையில் தொகுக்கப்பட்டது. அந்த அட்டவணை அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு இது காறும் 12 முறை நேரடியாகத் திருத்தப்பட்டு மாநில அரசின் பட்டியலில் வகைப் படுத்தப் பட்ட பல அதிகாரங்கள் ஒன்றிய அரசுப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

நேற்று முந்தைய நாள் உச்ச நீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைக் கூட மாநில அரசு அணியமாக்கக் கூடாது. அது மைய அரசின் வரம்புக்குள் 102 ஆவது திருத்தத்திற்குப் பின் வந்து விட்டதாக நயன்மை அரசர்கள் கூறியுள்ளனர். இது எவ்வளவு கேலிக்குரிய ஒன்று. தமிழ் நாட்டில் யார் யார் பிற்படுத்தப் பட்டவர்கள் என்ற அடையாளத்தைத் தமிழ் நாடு அரசு மேற்கொள்ளக் கூடாதாம். இந்தியாவில் நடை பெறும் ஒற்றையாட்சி முறைக்கு இதுவே எடுத்துக் காட்டாகும்.   

இதைப் போலக் கல்வி, வேளாண்மை, நிதி, காடு, இயற்கைப் பாதுகாப்பு, துறைமுகங்கள் எனப் பல துறைகளிலும் மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்பட்டுவருகின்றன.  

இந்திய அரசமைப்பின் பாயிரம், அரசமைப்புச் சட்ட விதிகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளன.

முன்னுரையில் சொல்லப்படும்  அனைத்து மக்களுக்குமான பொதுநலக் கோட்பாடு, மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசாக இயங்கும் இறைமை மிக்க இந்தியா,  ( SOVERIGN SOCIALIST, SECULAR, DEMOCRATIC REPUBLIC)

சமுக, பொருளாதார, அரசியல் நீதி,  ( JUSTICE)

நம்பிக்கை, வழிபாடு, கருத்து உரிமை (LIBERTY)

அனைத்து வாய்ப்புகளிலும் சமன்மை ( EQUALITY)

தனிமனித உரிமைகளைப் பேணும் உடன்(பிறப்பு)மை (FRATERNITY)

உள்ளே இருப்பது என்ன?

பாரத்து என்ற சொல் எந்த அடிப்படையில் இங்கே திணிக்கப் பட்டது?

வழிகாட்டு நெறிமுறைகள் என்ற போர்வையில் ஒன்றிய அரசின் வல்லாண்மை,

சமசுகிருதம், இந்தி மொழிகளுக்கு முன்னுரிமை

பாரம்பரியம் என்ற பெயரில்  இந்து மதம், சாதிப் பாகுபாட்டைப் பேணுதல்.

(தொடரும்)

மும்பை இதழாளர் சு.குமணராசன்

[தமிழ்க்காப்புக்கழகம்  சார்பில் ‘இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா?’ என்னும் தலைப்பில் ஆனி 20, 2052 ஞாயிறு  04.07.2021 அன்று நடைபெற்ற இணைய உரையரங்கத்தில் ஆற்றிய உரை.]