சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 1/5

பேராசிரியர் வெ.அரங்கராசன்

சிற்றினத்தைச் சேர்ந்தால் என்றும் சீரழிவு;

பேரினத்தைச் சேர்ந்தால் தோன்றும் பேரறவு:

அகச்சான்று  – 1:

நிலத்[து]இயல்பால் நீர்திரிந்[து] அற்[று]ஆகும்;

                                                  மார்ந்தர்க்[கு]

இனத்[து]இயல்[பு] ஆகும் அறிவு                         [குறள்.452]

பொருள் விரிவாக்க உரை:

            மழை நீர் நிலத்தில் விழுந்தாலும்,  நம்மிடம் இருக்கும் கிணற்று நீரை நிலத்தில் ஊற்றினாலும் , அவை  தத்தம் தனித்தன்மைகளை இழக்கும். பின்னர் அவை, நிலத்தின் தனித்தன்மைகளாகிய நிறம், சுவை, மணம், நாற்றம் போன்றவற்றைப் பெற்றுவிடும்.

            அதுபோலவே

            மாந்தர் எந்த இனத்தோடு சேர்கின்றார்களோ, அந்த  இனத்தின் அறிவு சார்ந்த தனித்தன்மைகளாகிய சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றைப் பெற்றுவிடுவர்கள்.

விளக்க விரிவாக்க உரை:

            மழை நீர் என்றாலும் நாம் ஊற்றும் எந்த வகை நீர் என்றாலும் அவை சேர்கின்ற நிலம்,

            செம்புலம், களர்நிலம், உப்புப் பொரியும் நிலம், உவர்நிலம்  போன்ற எந்த வகை நிலமாக இருந்தாலும்,

            அந்த அந்த நிலத்தின் தனித்தன்மைகளாகிய நிறங்கள், சுவைகள், நாற்றங்கள் போன்ற தனித்தன்மைகளைப் பெற்றுவிடும்.

            அப்போது, அந்நீர்கள் தத்தம் தனித்தன்மைகளை இழந்துவிடும். நீரும் நிலமும் இரண்டறக் கலந்துவிடும். இரண்டும் பிரியாவாம். இரண்டையும் பிரிக்கவும் முடியாது;

இந்தக் குறளில் அமைந்துள்ள சிறப்பு:

திரிதல் என்பதற்கு வேறுபடுதல், மாறுபடுதல், கெடுதல், பயனற்றுப் போதல் போன்ற பொருள்கள் உண்டு.

இதனைக் கீழ்க்காணும்

பண்[பு]இலான் பெற்ற பெருஞ்செல்வம், நன்பால்

கலம்தீமை யால்திரிந்[து] அற்று                                    [குறள்.1000]

என்னும் குறள்வழி அறியலாம்.

“நிலத்[து]இயல்பால் நீர்திரிந்[து] அற்[று]ஆகும்”  என்னும் 452ஆவது குறளின் முதல் பகுதியை அடிப்படையாகக் கொண்டு, மார்ந்தர்க்[கு] இனத்[து]இயல்[பு] ஆகும் அறிவு என்னும் இரண்டாம் பகுதிக்குப் பொருள் உரை காண்போம். அது,

            சேர்ந்த தீய நிலத்தின் தீய தன்மையால், தனது தனித்தன்மையை இழந்து, நீர் வேறுபடும்; மாறுபடும்; கெடும்; பயன் இல்லாமல்  போகும்.

    அதுபோலவே,

“தான்  சேர்ந்த தீய இனத்தின் தீய தன்மையால், ஒருவன் தன் தனித்தன்மையை  இழக்கின்றான்;  தீய இனத்தின்  அறிவின் இயல்பை அடைகின்றான். தீயவன் ஆகின்றான்; பயனற்றுப் போகின்றான்; இறுதியில் கெட்டழிகின்றான்.  

இரண்டாம் பகுதிக்குப் பொருள் உரைகள்:

இப்போது இரண்டாம் அடியைத் தனியே எடுத்துப் பொருள் உரை வரைவோம். அந்தப் பொருள் உரைப் பகுதி:

மார்ந்தர்க்[கு]

இனத்[து]இயல்[பு] ஆகும் அறிவு             [குறள்.452].

இதில் உள்ள இனம் என்பது பொதுச்சொல். இது நல்லினத் தையும் சுட்டும்; தீய இனத்தையும் சுட்டும். இதன் அடிப்படையில் இந்தப் பகுதிக்கு இரு பொருள் உரைகள் அமையும்.

இரு பொருள் உரைகள்:

            இவற்றிற்கு முன்னரே விரிவாகப் பொருள் உரைகள் வழங் கப்பட்டிருக்கின்றன.

            எனவே, இங்கு இவற்றிற்கு மிகச் சுருக்கமாகவே பொருள் உ ரைகள் வழங்கப்படுகின்றன. 

பொருள் உரை – 1

            தான் சேர்ந்தது நல்லினம் என்றால்,  அவன் நல்லறிவு பெறுகின்றான்; நல்லவனாக மாறுகின்றான்; நல்வாழ்வு பெறுகின்றான்.

பொருள் உரை – 2

            தான் சேர்ந்தது தீய இனம் என்றால், தீய அறிவு பெறுகின்றான்; தீயவனாக மாறுகின்றான்; கெடுகின்றான்; இறுதியில் அழிந்துபோகின்றான்.

புறச்சான்று – 1: ஆங்கிலப் பொன்மொழி:

          “உனது நண்பன் யார் என்று சொல்.

       நீ யார் என்பதைச் சொல்கின்றேன்.”

என்று ஒரு பொன்மொழி ஆங்கிலத்தில் உண்டு, 

இந்த வாழ்வியல் நன்மொழியானது,

உனது நண்பன் நல்லவன் என்றால், நீ நல்லவன்; உனது நண்பன்  தீயவன் என்றால், நீ தீயவன்; உனது நண்பன் பற்பல தீய பழக்கங்களுக்கும் சொந்தக்காரன் என்றால், நீயும் அத்தகையவன்தான். உனது நண்பன் பண்பாளன் என்றால், நீயும் பண்பாளன்; உனது நண்பன் அறிவாளன் என்றால், நீயும் அறிவாளன்தான். உனது நண்பன் குடியன் என்றால், நீயும் குடியன்; உனது நண்பன் சூதாடி என்றால், நீயும் சூதாடி.

இவ்வாறான பல்வேறு உடன்பாட்டு, எதிர்மறைப் பொருள்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டு திகழ்கின்றது.  

(தொடரும்) 

கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்