(இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 தொடர்ச்சி)

இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம்

சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2

?  தமிழ் பேசும் வழக்கம் தமிழர்களின் வீடுகளில் குறைந்துவரும் இந்தக் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்குரிய வேறு செயல்கள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளனவா?

 • கோயிலுக்குச் செல்லுதல், திருமணங்களில் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் போன்றவற்றில் இன்னும் பண்பாட்டு வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தாலும், மெதுவாக அவை மாறிவருகின்றன. தமிழ்ப்பெயர்கள் இப்போது குறைந்து வருகின்றன.

? இந்தோனேசியாவில் தமிழ்வழித்தோன்றல்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறார்கள்?

 • குறிப்பாகத் தலை நகரான சகார்த்தாவிலும், மேடங்கு மாநிலத்திலும் அதிகமான தமிழர்கள் வசித்துவருகிறார்கள்.

?  நீங்கள் தமிழகத்திற்குப் பலமுறை வந்துசெல்கிறீர்கள். தமிழ் நாட்டுக்கும், இந்தோனேசியாவுக்கும் பண்பாட்டுத் தொடர்புகள் எந்த அளவில் உள்ளன.

 • அவ்வளவாக நேர்முறைத் தொடர்பு ஏதும் இல்லை. இரு தரப்பு அரசுகளின் தரப்பிலிருந்து எத்தகைய பெரிய முனைவுகளும் இல்லை. நான் எதிர்ப்பார்ப்பது அத்தகைய உறவைக் கொண்டுவரவேண்டும் என்பதே. சகார்த்தாவில் உள்ள சகார்த்தா தமிழ்ச்சங்கம், அவர்கள் அமைப்பின் முனைப்பாக, அவ்வப்போது சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தமிழ்த்திரைப்படங்கள் சகார்த்தாவில் இவர்கள் மூலம் திரையிடப்பெறுகின்றன. திரைப்படக் கலைஞர்களைச் சகார்த்தாவுக்கு வரவழைத்துச் சில கலைநிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றனர். ஆனாலும் இவை யாவும் அந்த அமைப்பின் சொந்த முயற்சிகளே. அரசின் தரப்பிலிருந்து எத்தகைய முனைப்பும் இல்லை. இந்திய அரசுக்கும், இந்தோனேசிய அரசுக்கும் இடையேயான வணிகத்தொடர்புகளே உள்ளன தவிர, தமிழ்நாடு மற்றும் இந்தோனேசிய அரசு இவற்றின் ஊடே இன்னும் உறவுகள் வலுப்பெறுதல் வேண்டும்.

?  இதற்கான முயற்சிகளாக உங்கள் தரப்பிலிருந்து திட்டங்கள் உள்ளனவா?

 • முதன்மையாகத் திருமணம், குழந்தை பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் நடத்தப்பெறும் முறையான பண்பாட்டுச் சடங்குகளை நடத்திவைக்க, அம்முறையறிந்தவர்கள் இங்கே இல்லை. அதனால், எங்கள் அமைப்பு, அப்படிப்பட்டவர்களை தமிழகத்திலிருந்து வரவழைத்து அவர்கள் இங்கே உள்ள கோயில்களில் தங்கி இத்தகைய சடங்குகளை நடத்திக்கொடுக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். இதைத்தவிர தமிழ்ப் பள்ளிக்கூடங்களைத் தொடங்கி நடத்திவருகிறோம்.

?  உங்கள் வாழ்நாள் அருவினையாக(சாதனையாக)த், திருக்குறளை இந்தோனேசிய மொழியில் மொழிபெயர்த்துள்ளீர்கள். அதுகுறித்து வாசகர்களுக்கு மேலும் செய்திகள் தரவியலுமா?

 • நான் எந்த ஊர் சென்றாலும், அங்கு திருக்குறளைப்பற்றிய செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படி நான் பார்த்து அதிசயப்பட்டது, திருக்குறளை சீன மேண்டரின் மொழியிலும், அரபி மொழியிலும் மொழியாக்கி உள்ளார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியாவில் ஏறக்குறைய இரண்டு பேராயிரம்(மில்லியன்) தமிழர்கள் இருந்திருப்பார்கள். இப்போது மிகவும் குறைந்துவிட்டது. ஒரு முப்பதாண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழர், நூறு குறள்களை மொழியாக்கம் செய்துள்ளார். என்னுடைய மாமனார் என்னிடம் திருக்குறளை எப்படியாவது மொழிபெயர்க்குமாறு கேட்டுக்கொண்டார். அவருடைய பெயர் சிரீராமன். அவர் இந்து பரிசத்து அமைப்பில் முப்பது ஆண்டுகளாக இருந்தார். எனக்கு அந்த அளவு தமிழில் புலமை இல்லையென்றாலும், எட்டு ஆண்டுகள் முயற்சி செய்து, பல்வேறு தமிழ்ப் பெரியோர்களிடம் கேட்டுக்கேட்டுத் திருக்குறளை மொழியாக்கம் செய்தேன். அந்த நூல் 1250 பக்கங்களைக் கொண்டது. ஐந்து நாடுகளிலிருந்து அதற்கான அணிந்துரை பெறப்பட்டுள்ளது. இந்த நூல் மூன்று மொழிகளால் அமைக்கப்பட்டது. தமிழில் குறளும், அதற்கான படிப்பு அமைப்பு(Transliteration) ஆங்கிலத்திலும், அக்குறளுக்கான விளக்கம் இந்தோனேசிய மொழியிலும் தரப்பட்டுள்ளன.

 ?  இந்த நூல் இந்தோனேசியாவில் எத்தகைய பயன்பாட்டிற்காகப் படைக்கப்பெற்றது?

 • திருவள்ளுவரின் படத்தைப்பார்த்துவிட்டு இந்த நூல் மதஞ்சார்ந்த புத்தகம் என்று முதலில் கருதப்பட்டது. நான் நூலின் தலைப்பில் வாழ்வின் வழி’(‘வே ஆப் லைப்’;) என்று வழங்கியிருக்கிறேன். இந்தோனேசிய நாட்டின் அத்தனைப் பெரும்புள்ளிகளுக்கும் இந்த நூல் வழங்கப்பட்டது. 3000 படிகள் அச்சிடப்பட்டு அத்தனைப் படிகளும் பல்வேறு மக்கள் சார்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.

 ?  இதைத்தவிர வேறேதும் நூல்கள் எழுதியுள்ளீர்களா?

 • இந்த மொழிபெயர்ப்பு நூல் என்னுடைய 12ஆவது நூல். நான் இதுவரை 14 நூல்கள் எழுதியுள்ளேன். நான் இந்து மத ஆராய்ச்சிக்காக ஆய்வுநிறைஞர்(எம்.பில்.) பட்டம் பெற்றுள்ளேன்.

 ?  உங்களுடைய எதிர்காலத் திட்டம் ஏதேனும் உள்ளதா?

 • ஒரே திட்டம்தான். எப்படித் தமிழ்மொழியைக் காப்பாற்றுவது, எப்படித் தமிழ்ப்பண்பாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்வது ஆகியனவே ஆகும். இஃதை நான் அரசியலில் இறங்காமல் செய்யச் சாத்தியமில்லை.

?  எதிர்க்கட்சியில் முதன்மை அங்கம் வகிக்கும் நீங்கள், தமிழ் நாட்டிலிருந்து எப்படிப்பட்ட செயல்களை எதிர்பார்க்கிறீர்கள்?

 • எங்களுக்குத் தமிழக அரசின் ஆதரவு தேவை. நான் எழுதிய திருக்குறளின் மொழிபெயர்ப்பு நூலின் படியை அண்மையில் மறைந்த முதலமைச்சர் செல்வி செயலலிதா அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அந்த நூல் அவர்களுடைய பார்வைக்கு வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. தமிழக அரசின் ஆதரவு, இந்தோனேசிய தமிழர்களுக்கு மிகுந்த ஊக்கத்தைத் தரும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்போது எந்த விதமான முனைவுகளையும் நாம் எடுக்காவிட்டால், என் கணிப்புப்படி, இன்னும் இருபது ஆண்டுகளில், இந்தோனேசியாவில் தமிழ் அழிந்துவிடும்.

 ?  அரசியலில் நீங்கள் எதிர்பார்க்கும் இலக்குகள் என்று எவையேனும் உள்ளனவா?

 • வரும் தேர்தலில் வேட்பாளராக நின்று இந்தோனேசிய வரலாற்றின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக(எம்.பி.யாக) அமர வேண்டும் என்ற அவா எனக்கு உள்ளது. அப்படி நடந்தால், தமிழுக்காக நான் நினைக்கும் பல தொண்டுகளைச் செய்தல் இயலும். அதற்கான ஆதரவையே எதிர்பார்க்கிறேன். அதன் மூலம் மேடங்கு பகுதியில் பல அரசியல் இலக்குகளிலும் தமிழர்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

?  இந்தோனேசியாவில் தமிழ்ப்புத்தகங்கள், நாளிதழ்கள், திரைப்படங்கள் போன்றவை எத்தகைய வரவேற்பைப் பெற்றுள்ளன?

 • புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவை அறவே இல்லை. அது இங்கிருக்கும் தமிழ் இளைஞர்களைத் தமிழ் படிக்கவைத்தல் மூலமாகமே சாத்தியப்படும். ஆனால் தமிழ்மொழித்திரைப்படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒருவிதத்தில் திரைப்படங்களே தமிழகத்தையும் இந்தோனேசிய தமிழர்களையும் இன்றைய நிலையில் இணைத்துவருகிறது எனலாம்.

உங்களுடைய அரசியல் மற்றும் தமிழ் குறித்த இலக்குகளை நீங்கள் வெல்லுவதற்கு ‘இலக்கியவேல்’ வாசகர்களின் சார்பில் வாழ்த்துகள். மிக்க நன்றி.

நன்றி. வணக்கம்.

 • சந்தர் சுப்பிரமணியம்

இலக்கியவேல்