Bharathi02

  தமிழகத்தில் வாழும் நம்முள்ளத்தில் செப்டம்பர் திங்களில் தோன்றித் திகழும் செம்மல்களான மும்மணிகள், நம்நாட்டுப்புதுமைக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியாரும் மூடக் கொள்கைகளில் முடங்கிக் கிடந்தவர்களைத் தட்டியெழுப்பிச் சிந்திக்க வைத்த ஈ.வே.இரா.பெரியாரும், அமிழ்தினும் இனிய தமிழ்மொழிக்கு அழிவு தோன்றும் நேரத்தில் முன்வந்து தமிழ்காக்க முனைந்து நிற்கும் அறிஞர் அண்ணாவும் ஆவார்கள். முன்னவர் ஆங்கிலர்க்கு அடிமைப்பட்டு நாட்டை மறந்து தமிழ்மொழியை மறந்து கிடந்த தமிழர்களுக்கு நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் உண்டாக்கியவர் ஈ. வே.இரா.பெரியாரோ நம்மக்கள் மூடக் கொள்கையிலிருந்து விடுதலையடையப் பன்னெடுங் காலமாகத் தொண்டாற்றி வருபவர். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் காக்கும் தனிவீரராகத் திகழ்பவர்.

  இம்மூவரும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத் தக்கவர்கள் என்பதில் ஐயம் இல்லை. பாரதியார் புத்துலகச் சிற்பியாக விளங்கினார் ‘தமிழ்த்திருநாடு தன்னைப் பெற்ற எங்கள் தாயென்று கும்பிடடிபாப்பா’ என்றும் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே’ என்றும் ‘பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடேபோற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே என்றும் ‘சேதமில்லாத இந்துத்தானம் இதைத் தெய்வமென்று கும்பிடடிபாப்பா’ என்றும் பாடி நம்மக்களிடத்தில் நாட்டுப் பற்றைத் தோன்றுவித்தார். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை இழிவாகக் கருதி அதனைப் புறக்கணித்திருந்த காலத்தில் ஆரியத்துக்கு நிகரானது தமிழ் என்று சொல்லி, “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று அம்மொழியின் தனிச்சிறப்பை எடுத்துக்காட்டி, “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா” என்று அறிவுறுத்தியதோடு “தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்”, “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்று தமிழ் நாட்டினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம் வேதியராயினும் ஒன்றே. வேறுகுலத் தினராயினும் ஒன்றே” என்று சாதியை வெறுத்துப் பாடியதோடு, “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று பெண்ணடிமையை ஒழிக்க முழங்கினார். ஆனால் இவர் வேதவழி நின்று சமரச மனப்பான்மையுடன் பராசக்தியை முழுமுதல் தெய்வமாக வழிபட்டு வந்தார். இவர் பொருளாதார விடுதலைக்கும், அரசியல் விடுதலைக்கும் சமுதாயத்தில் காணப்படும் உயர்வு தாழ்வு ஒழிப்புக்கும், பெண்ணடிமைத் தீர்வுக்கும் அரிய கருத்துகளைத் தம் பாடல்களில் வெளியிட்டார். தமது சிறு கதையில் விதவை மறுமணத்தையும் ஆதரித்தார். நல்ல காதல் மணத்தையும் விரும்பினார். இவ்வாறு சீர்திருத்தக் கருத்துக்களைச் செப்பிய, தம்பாடல்களில் முழக்கிய புத்துலகச் சிற்பி நம்பாரதியாராவார். இச்செப்டம்பர் திங்களிற்றான் இவர் மண்ணுலக வாழ்வை விட்டு மறைந்தார்.

  சுப்பிரமணிய பாரதியார் பாடல்களில் வெளியிட்ட அத்தனைச் சீர்திருத்தக் கருத்துகளையும் நடைமுறையில் கொண்டு வரத் தூண்டிப் பன்னெடுங்காலமாகத் தொண்டு செய்து வருபவர் – ஏன்? இந்தத் தள்ளாத வயதிலும் தொண்டு புரிந்து வருகிறவர் ஈ.வே. இரா. பெரியார் ஒருவரே ஆவார். பட்டிதொட்டிகளிலும் இவர் நுழைந்து மூடக் கொள்கைகளைச் சாடியொழித்தார். மக்கள் உள்ளத்தில் சிந்தனையைத் தூண்டினார். சமுதாயத்தில் காணப்படும் குறைகளைக் கண்டுகொதித்து நீண்ட நேரச் சொற்பொழிவுகளைப் பல்லாண்டுகளாகச் செய்து வருகிறார். இவர் தொண்டு வீணாகவில்லை. பயனற்றுப் போகவில்லை. படித்த மக்கள் இல்லை. பாமர மக்களும் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். கடவுள் கொள்கையைக் கைவிட வில்லையெனினும் கணக்கற்ற மூடக் கொள்கைகளக் கைவிட்டுவிட்டார்கள். அறிஞர்களும், கவிஞர்களும் சீர்திருத்தங்களைச் சொல்லளவில் எழுத்தளவில் சொல்லி நின்றார்கள். பெரியாரோ சீர்திருத்தங்களைச் செயலளவில் காட்டிவிட்டார்; சமயம் சீர்திருத்தங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பது பெரியாரது ஆழ்ந்த நம்பிக்கை. இதில் உண்மை இல்லாமல் இல்லை. சமயத்தின் பேராலும் சடங்குகளின் பெயராலும் மூடக் கொள்கைகளின் பெயராலும் பொருளாதார அழிவு ஏற்படுவது என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மையன்றோ? இவரது சீர்திருத்தச் சொற்பொழிவுகளால் தமிழகம் பெருநன்மை அடைந்திருக்கிறது. தமக்கு ஏற்றது எது என்று சிந்தித்து முடிவு கட்டியதை அஞ்சாது வெளியிடும் பெருவீரர் பெரியார் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. அவர் கொள்கைக்கு ஓரளவு மாறுபட்டிருந்தாலும் நாம் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியுமா? முடியாது. இவர் பிறந்த நாள் இச்செப்டம்பரில் வருகிறது.

periyar02anna02

  பெரியார் பள்ளியில் மாணவராக இருந்து படித்து அவருடன் சீர்திருத்தங்களைத் தமிழகத்தில் பரப்பிச் சில காரணங்களால் பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்து ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கோளாரும் வேட்ப மொழியும் பெருநாவலராய், அரசியலைக் கற்றுத் துறை போகிய பேரறிஞராய், இன்று தமிழ் காக்கும் பெருவீரராய்த் திகழ்பவர் அறிஞர் அண்ணா என்றால் மிகையாகாது. இவர் சில ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் சட்டசபையில் எதிர்க்கட்சியை அமைக்கும் பெருமையையும் செல்வாக்கையும் பெற்றுவிட்டவர். இந்நாட்டுக் கற்ற இளைஞர்கள் பல்லோரின் உள்ளத்தில் குடி கொண்டிருப்பவர். இவர் நாவசைந்தால் நாடசையும் அளவு சிறப்புப் பெற்றுள்ளவர். இவரது சொற்பொழிவுகளினால் தமிழகம் இல்லை தென்னகமே பெரும்பயனை அடைந்து வருகிறது. இல்லை என்று சொல்ல முடியுமா? முடியாதே. இன்று இந்தி வந்து புகுவதை எதிர்த்துப் போராடுகிறார். இந்தி வந்தால் தமிழ் சாகும் என்று உணர்ந்தவர்களும் பற்பல காரணங்களால் வாளா இருக்கின்றனர். இந்தி நுழைந்தால் தமிழிளைஞர் வாழ்வு நலியும் என்று தெரிந்தவர்களும் பற்பல காரணங்களால் செயலற்றுக் கிடக்கிறார்கள். ஆங்கிலம் வந்து ஆட்சிமொழியாக இருந்த போது தமிழ் மொழி கரந்துறை வாழ்வை அடைந்திருந்ததை என்னைப் போன்ற வயதானவர்கள் நன்கறிவார்கள். இப்போதுதான் தமிழ் வளர்ந்து வருகிறது. தமிழகத்தின் ஓரளவு ஆட்சி மொழியாயிருக்கிறது. இன்னும் வழக்கு மன்றங்களிலும் கல்லூரிகளிலும் நடைமுறைக்குத் தமிழ் வருதல் வேண்டும். இதற்குள் இந்தி, தேர்வு மொழியாகவும் அனைத்திந்திய இணைப்பு மொழியாகவும் வந்து விட்டால் தமிழிளைஞர் வாழ்வும் வளமும் என்னாகும்? பாழ்படாமல் இருக்குமா? சிந்தித்துப் பாருங்கள். ஆதலால், அறிஞர் அண்ணா இந்தியை நுழைவதைத் தடுக்கிறாரேயன்றி இந்தியை வெறுக்கிறார் இல்லை என்றறிக. ஒரு கடவுட்பற்றுள்ள அறிஞர் அண்ணா; மூடக்கொள்கைகளை வெறுப்பதும், அதை ஒழிக்கப்பாடுபடுவதும் தவறாகா. இத்தகைய செம்மல் பிறந்த நாள் விழா செப்டம்பர் 15இல் வரவிருக்கிறது.

  வெவ்வேறு நிலையில் தொண்டு செய்த, செய்து வருகிற இந்நாட்டு மும்மணிகளான பாரதியாரும், பெரியாரும், அறிஞரும் நம்மதிப்புக்கு என்றும் உரியவர்கள். இவர்களது தொண்டை இம்மாதத்தில் நினைவுக்குக் கொண்டு வந்து பாராட்டுவோம். பாரதியார் திருப்பெயர் நிலைத்திருப்பதாக! பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீடு வாழி!

a.k.paranthamaar02

kuralneri02குறள்நெறி(மலர்1 இதழ்17):ஆவணி 31, 1995/ 15.09.1964