(இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 2/3 தொடர்ச்சி)

இன்றைய தேவை குறுஞ்சொற்களே! 3/3

 

நெடுமையும் குறுமையும்

துறைதோறும் கலைச்சொல், சொல்லாக அமையாமல், பொருள்விளக்கத் தொடராக இருப்பதற்குச் சில எடுத்துக்காட்டு காண்போம்.

? centrifuge வெவ்வேறு எடைச்செறிவுள்ள பொருட்களைச் சுழற்சியினால் பிரிக்கும்  இயந்திரம்

இங்கு ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்ட பொருள்விளக்கத்தை அப்படியே தமிழில் தந்துள்ளார்களே தவிர, உரிய கலைச்சொல்லை உருவாக்கவில்லை. பொறியின் செயல்பாடு , தோற்ற அடிப்படையில் சுழற்சல்லறைப்பொறி எனலாம். எனினும் இன்னும் சுருக்கமாகப் பிரிவை எனலாம். அல்லது பிரிவை எனக் குறிப்பிட்டு, பிரிவை – சுழற்சியினால் பிரிக்கும் பொறி எனப் பொருள் விளக்கம் தரலாம்.

 •   centrifuge
பிரிவை
·       ?  Letter of Credit பணம்பெறும் வரம்பைக் குறிக்கும் கடிதம்

கூட்டுறவுத் துறையின் சிறப்புச்சொல் துணையகராதியில் இவ்வாறு நீளமாகக் குறிக்கப்பட்டுள்ளதை அறிந்தோ அறியாமலோ ஆட்சிச் சொல்லகராதியில்

Letter of Credit – கடன்சான்று எனக் குறிக்கப்பெற்றுள்ளது.

முன்னது விரிவாக இருந்தாலும் பொருள் சரியாக உள்ளது, பின்னது சுருக்கமாக இருந்தாலும் கடன் அளிப்பதற்கான சான்று எனத் தவறாகப் பொருள்படுகிறது.

சொல் தனிச்சொல்லாக அமையாமல் தொடர் சொல்லாய் அமைந்து, ஆனால் பொருள் திருத்தமாக அமைந்தால் பயன்பாட்டு எளிமையைத்தான் இழக்கிறது. சரியான பொருளைத் தருவது கூட்டுச்சொல் வடிவமாக இருந்தாலும் இழுக்கன்று. ஏனெனில் அடுத்துக் குறுஞ்சொல்லிற்கு வழிவகுக்கும். ஆனால் சுருக்கம் என்ற பெயரில் தவறு நேரின் பொருள்பிழைபாடே நேருகிறது. எனவே பொருள் மயக்கம் இல்லாமைக்கும் சொல் திருத்தமாய் அமைவதற்குமே முதலிடம் தர வேண்டும். ஈங்கு நிதி ஒதுக்கீட்டிற்குப் பின்னர் எந்த அளவிற்குப் பணம் எடுக்கலாம் என அறிவுறுத்தும் மடல். ஆதலின் வரம்பு அறிவுறுத்தம் எனலாம்.  சுருக்கமாக வரமபுறுத்தம் எனலாம்.

credit என்றால், கடன், பற்று, பற்று வை, வரவு வை, கடனளி, நம்பிக்கை வை, நன்மதிப்பு வை என இடத்திற்கேற்ற பொருள் தரும். நாம்  கடன் என்றே  எப்பொழுதும் எண்ணுவோம். இதனால் தவறாக விளங்கிக் கொள்வோம். கொடுக்கல் வாங்கலில் கணக்கு வைத்திருப்பவர் அடுத்த தரப்பின் நம்பிக்கையைப் பெற வங்கி அளிக்கும் நம்பிக்கைக்கான மடல். கணக்கு வைத்திருப்பவர் மீதான நன்மதிப்பை வெளிப்படுத்தி வங்கி அவருக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. பொறுப்புறுதி மடல் என்றும் சொல்லலாம்.  சுருக்கமாகப் பொறுப்பு மடல் என்றால் பொறுப்பு என்பதற்கு; உhயசபந முதலான வேறு பொருளை எண்ணிக் குழம்பலாம். உத்தரவாதம் என்பது தமிழ்ச்சொல்லே. எனவே உத்தரவாத மடல் எனலாம்.

 •   Letter of Credit
வரம்புறுத்த மடல், பொறுப்புறுதி மடல் உத்தரவாத மடல்
      ? Over printing colour  குறிகளை உடைய நிறத்தில் மட்டுமல்லாமல் வேறு நிறங்களிலும் தவறாக அச்சிடுதல்

 சொற்பொருள் களஞ்சியம் ஆயின் இப்பொருள் விளக்கம் சரிதான். ஆனால் சிறப்புச் சொல் துணையகராதியில் இதுதான் கலைச்சொல் எனக்கூறினால, தமிழில் எழுத முன்வருவோர் தலைதெறிக்க  ஓடிப ;பின்வாங்காமல் என் செய்வர்?

Over printing  அச்சு மேல் அச்சு தவறாக இடப்படுவதைக் குறிக்கும். ஏற்கெனவே அடிக்கப்பட்ட ஒன்றின்மேல் மற்றொன்றை அச்சிடுவதைக் குறிப்பதால்  மேலச்சு எனலாம். ஆனால் மேலான அச்சு அல்லது மேற்புற அச்சு எனப் பொருள்மயக்கத்திற்கு இடம் தருகிறது. மேவு என்றால் பரவுதல். ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட இடத்தில் அச்சு மை பரவுவதால்  மேவச்சு எனக்கூறிப் பார்க்கலாம். இந்த அடிப்படையில்

 •   Over printing colour
மேவுநிற அச்சு / பிழைவண்ண அச்சு; நிறப்பிழை

எனலாம்.

இங்கு நாம், பிழையாக ஒரு வண்ணம் மற்ற வண்ணத்தில் / வண்ணங்களின் மேல் அடிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் பிழைவண்ண அச்சு என்கிறோம். ஒரு வண்ணத்திற்கு மாற்றாக மற்றொரு வண்ணம் தவறாக அச்சிடப்படுகையில், நிறப்பிழை எனக் குறிப்பிடலாம்.

?·         Scrapper Box பார்வைப்பிரதி எடுக்கும் ஒருவித அச்சு இயந்திரத்தின் மர அல்லது இரும்புச் சட்டத்தைக் கொண்ட பெட்டி.

Scrapper Box என்றால் என்ன என்று கேட்டால் கூறவேண்டிய விடையாகத்தான் உள்ளதே தவிரக்கலைச்சொல் வடிவம் சிறிதும் அது பெறவில்லை என்பது கண்கூடு. இங்குப் பார்வைப் பிரதி(பார்வைப் படி / Proof) என்பது ஒப்பச்சு எனவும் மெய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

 நற்றமிழ்ச் சொல்லாயின் தவறாக இருந்தாலும் ஆராயாமல் ஏற்று மகிழ்வது நம்மவர் வழக்கம். அவ்வாறே இத்தவறான பொருள் தரும் சொல்லையும் பயன்படுத்துகின்றனர்.’proof’ என்றால் நிரூபி / மெய்ப்பி என்று அகராதியில் சொல்லைப்பார்த்த தமிழன்பர் ஒருவர் நற்றமிழ்ச்சொல்லான மெய்ப்பி என்னும் சொல்லைப் பற்றிக்கொண்டார். இந்தப்பொருளில் இது சரிதான். ஆனால் ஒப்புநோக்கி திருத்தும் இடத்தில் இது பொருந்தாது. நானும் இச்சொல்லை ஐயப்பாட்டுடன் ஏற்றுப் பயன்படுத்தினாலும் ஆராய்ந்து பார்த்தேன். இந்த உண்மை  புரிந்தது. பிழை திருத்தத்திற்கு  மெய்ப்பு என்பது பொருந்தாது என  உணர்ந்து பயன்படுத்துவதில்லை.

 மூலப்படியுடன் ஒப்புநோக்கிப் பார்க்கப்படுவதால் ஒப்பச்சு என்பதுதான் சரி எனக்கருதிப் பார்த்தால் மூலத்திற்கு ஒப்பான அச்சு என்று தவறான பொருள் வருகிறது.

மெய்யச்சு, மெய்யொப்ப அச்சு, மெய்யொப்பி என்பனபோல் சொல்லிப் பார்த்தாலும் இதே போன்ற தவறான புரிதலுக்கே இடமளிக்கிறது.

பிழைதிருத்தத்திற்கான பார்வைப்படி என்பதால் இதுவே சரியாகிறது.

வின்சுலோ அகராதியில் ‘பணிக்கம்’ என்றால் ‘திருத்தம்’ எனப் பொருள் உள்ளது.

இச்சொல்லைச் சட்டத்திருத்தம் (amendment of law) என்னுமிடத்தில் சட்டப்பணிக்கம் என்று சொல்லலாம். இதன் மூலம; correction   என்பதிலிருந்து வேறுபடுத்தலாம்.]

பார்வைப்படியை அச்சுப்பொறியில் அச்சிடமாட்டார்கள். அப்பொறி மிகுந்த எண்ணிக்கைக்கானது. ஒரு படிக்காக அதில் அச்சிடுவது வீண் முயற்சியும் வீண் செலவுமாகும். எனவே, அதற்கெனச் சிறிய அச்சுப்பொறியைப் பயன்படுத்துகின்றனர்.  இதில்  மையும் மிகுதியான அளவில்  தேவையில்லை.  செதுத்தல் என்றால் ஒளி முதலியன மழுங்குதல் எனச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி குறிப்பிடுகிறது.  மங்கிய மை பயன்படுத்தப்படும்  பெட்டியைச் செதுவைப் பெட்டி என்றே சொல்லலாம்.

  செதுவைப்பெட்டி என்னும் பொழுது வெளிப்படையாகப் பொருள் விளங்காமல் இருக்கலாம். ஆங்கிலத்தில் மட்டும் வெளிப்படையாகவா பொருள் உள்ளது?

Scrape என்பதற்கான பல பொருள்களில் செதுக்குதல் என்பதும் ஒன்று. தேவையற்றதை அகற்றித் திருத்தமான சிற்பம் செதுக்குவதுபோல் தேவையற்ற பிழையானவற்றை அகற்றித் திருத்தமான படியை உருவாக்குவதால்  இதனடிப்படையிலான இச்சொல்லே சரியாகப்படுகின்றது. மூலப்பொருளுக்குச் சரியான நேர்பொருளாகவும் உள்ளது.

?  Scrapper Box செதுவைப்பெட்டி

அதே நேரம் இஃது ஒன்றுதான் இதன் பொருள் என வரையறை செய்ய இயலாது. ஏனென்றால் இச்சொல் உணர்த்தும் வெவ்வேறு பொருள் அடிப்படையில் வெவ்வேறு நோக்கிற்கான பொறிகளும் இதே  பெயரில் பயன்படுத்தப்படுகின்றன. தமிழில் இவற்றை வெவ்வேறு பெயரில் குறிக்க இயலும். எனவே, அச்சுத்துறையில் Scrapper Machine – செதுவைப்பொறி

பாதை மண் வாரிச் சமனிடும் இயந்திரமாகிய Scrapper Machine சமன்பொறி – சமனி

தோல் மெருகிடும் இயந்திரமாகிய Scrapper Machine –  மெருகு பொறி / மெருகி

சுரண்டுகருவியாகிய Scrapper Machine – சுரண்டு கருவி – சுரண்டி

செதுக்கும்  Scrapper Machine – செதுக்குக்கருவி – செதுக்கி

என இடத்திற்கேற்பப் பயன்படுத்த வேண்டும்.

 •  Scrapper Machine
செதுவைப்பொறி

சமனி

மெருகி

சுரண்டி

செதுக்கி

? LorsonTrawl இராபர்ட்டு இலார்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இரு படகுகளால் இழுக்கப்பெறும் வலைவாரி

 

பொருள்விளக்கம் சொல்லாய் அமையுமா?

 •   LorsonTrawl
இலார்சன் வலைவாரி

எனலாம்.

? Pathometer ஆழம்பார்க்கும் கருவி

எதற்கான கருவி எனக்கேட்டால் இவ்வாறு விடையிறுக்கலாம்.

பெயர் கேட்டால் . . .?

Pathometer  – ஆழ அளவி (ஆழளவி?) எனலாமா?

தேய்மானம், வருமானம் என்ற இடங்களில் மானம் என்பது அளவைக் குறிக்கும். எனவே, அளவையை மானி என்று குறிக்குமாறு வேறு நூலில் நான் தெரிவித்துள்ளேன். எனவே ஆழமானி எனலாம்.

 •   Pathometer
ஆழமானி
? Wherry முன்னேறிச் செல்லும் தட்டைப்படகு

தட்டைப்படகு என்பதே போதுமானது.

 •   Wherry
தட்டைப்படகு
? Deep Lift Pump ஆழத்தில் இருந்து உறிஞ்சும் குழாய்ப்பொறி

pump – எவ்வி எனப்படுவதால் ஆழ் எவ்வி எனக் குறுக்கலாம்;.

 •  Deep Lift Pump
ஆழ் எவ்வி
? Nadir வான உச்சியின்; மிகத்தாழந்த நிலை அல்லது புள்ளி.

இங்கும் சொல்லாக்கம் இல்லை. பொருளாக்கமே உள்ளது.  தாழ்புள்ளி என்றாலே  போதும். கழகஆங்கிலத் தமிழ்க்கையகராதி எதிர் முகடு என்கிறது. முகட்டிற்கு – உச்சிக்கு – எதிரானது என்று பொருள். இதுவும் சரியாகத்தான் உள்ளது.ஆனால், எதிரான முகடு என்று முகட்டைக் குறிப்பதாகக் கருதக்கூடாது.

 •  Nadir
தாழ்புள்ளி, எதிர்முகடு
? Gas plant ஆவி உண்டாக்கும் கருவி
ஆவி உண்டாக்கும் பொறி

இரு வகையாகக் குறிக்கப் பெறுகின்றது.  இதனை வளிகலன்  எனலாம்.

 •  Gas plant
வளிகலன்
? Fire Escape தீயிலிருந்து மீட்க உதவும் கருவி

என்பதைச் சுருக்கமாகத் தீ மீட்பி எனலாம்.

 •  Fire Escape
தீ மீட்பி
? Postulate ஆராய்ச்சியின் அடிப்படையில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை

இப்பொருள்விளக்கம் கலைச்சொல் ஆகாதே!

எடுகோள், இடுகோள் என்பனபோல் ஆராய்ச்சி அடிப்படையில் கொள்ளப்படும் உண்மையை அடிகோள் எனலாம் என முன்னர்க் குறித்திருந்தேன்.  ஆராய்ச்சியின் – ஆய்வின் அடிப்படை என்னும்பொழுது ஆய்வுதானே முதன்மை ஆகிறது.  எனவே ஆய்ந்து கொள்ளப்படும் உண்மையை ஆய்கோள் எனலாம்.

 •  Postulate
ஆய்கோள்
? Under sized stones விகிதத்திற்கும் குறைந்த அளவு கற்கள்;

இதனைக் குறையளவு கற்கள் என்று சொன்னாலே போதுமே என முன்பு குறித்திருந்தேன்.  இவ்வாறு சொன்னால் குறைந்த அளவு என எண்ணிக்கையில் குறைவாக இருப்பதைக் குறிப்தாகப்  பொருள் வருமே என எண்ணினேன்.  என்பதற்குப்  பொருந்தா வடிவு என்றும் குறை வடிவு என்றும் அகராதிகள் கூறுகின்றன.  பொருந்தா வடிவு என்பதே பொருத்தமாக உள்ளது.

? Under sized stones பொருந்தா வடிவக் கற்கள்
? Dredger சேறுவாரும் பொறி

இவ்வாறு விளக்கமாகக் கூறுவதைவிட, அகழ்ந்து எடுக்கும் பணிபார்க்கும் இப்பொறியை அகழ்வி என்றால்  போதாதா என முன்பு கேட்டிருந்தேன்.

சென்னைப் பல்கலைக்கழக அகராதி, மண்தோண்டி எனக் குறிப்பிட்டு மண்சேறுகளைத் தோண்டி யெடுக்கும் யந்திரம் என்கிறது. சேறுவாரும் யந்திரம் என்றும் குறித்துள்ளது.

ஆனால் அண்மைய ஆட்சிச்சொல்லகராதியில் (சிறப்புச்சொல் துணையகராதியில்) தூர் வாரி எனக் குறிக்கப்பெற்றுள்ளது.  மண்வெட்டியுடன் மண்தோண்டியைக் குழப்பிக்கொள்ளக் கூடாது. தூர் வாரி என்பதே பொருத்தமாக உள்ளதால் இதனையே கையாளலாம்.

மாவுத்தூவுவதற்கான துளைமூடிப்பெட்டியும் Dredger என்றே குறிக்கப் பெறுகிறது.

 •   Dredger
தூர் வாரி

துளைமூடிப்பெட்டி

? fixative காயங்கள் நிலைத்து இருக்கும்படிச் செய்யும் பொருள்

என்னும் பொருள் விளக்கம் கலைச்சொல்லாகாது அல்லவா? இப்பொழுது  நிலை நிறுத்தி என்கின்றனர்.  சாயத்தைப் பொருத்திப் படியச் செய்யும் இதனைச் சாயப் படிகை எனச் சுருக்கலாமே!

 •   fixative
சாயப் படிகை
? Totalization குதிரைப்பந்தயக் கணிப்புப் பொறி

குதிரைப்பந்தயம் மட்டுமல்ல; கழுதைப் பந்தயமாக இருந்தாலும் இப்பொறி மூலம் கணிக்க இயலும். எனவே பந்தயக் கணிப்பி என்பது ஏற்றதாயமையும்.

 •  Totalization
பந்தயக் கணிப்பி
? Mammals குட்டிப்போட்டுப்பால் கொடுக்கும் உயிரினங்கள்

இவ்வாறு விளக்கமாகக் கூறுவோர் பாலூட்டிகளை மறந்தது எவ்வாறு?

 •  Mammals
பாலூட்டிகள்
? Reception Home விசாரணைகக்காலச்சிறுவர் தங்குமிடம்;

பின்னர் இது வரவேற்பில்லம் என அழைக்கப்பெற்றது. சிறாரை ஏற்கும் இல்லம் ஏற்பில்லம் என அழைக்கப்பெற்றாலே பொதுமானது.

இப்பொழுது இந்த இல்லம் கூர்நோக்கு இல்லம் – Observation Home என அழைக்கப்பெறுகிறது.

கணிணியியலில் சொல்லாக்கம்

சரியான தமிழ்வடிவம் இல்லையென ஆங்கிலச்சொல்லையே பயன்படுத்தும் வழக்கம் கணிணியியலில்தான் மிகுதியாக உள்ளது. கணிணி குறித்துத் தமிழில் எழுதும் நூலாசிரியர்கள், கட்டுரையாளர்கள்வுட, ஆங்கிலச் சொற்களையும் ஆங்கில எழுத்துகளையும் அவ்வாறே எழுதிவிடுகின்றனர். இது மொழி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சிக்கு; தடையாக அiயும் என்பதை உள்ளத்தில் இருத்திச் சொல்லாக்கத்;திலும் மொழியாக்கத்திலும் ஈடுபட வேண்டும்.

..  …   …            …

தலைப்பெழுத்துச்சொல்லை மொழியாக்கம் செய்ய அஞ்சி ஆங்கிலச் சொல்லையே கையாளாமல் பொருந்தி வரும் தனிச்சொல்லை அல்லது தமிழ்த்தலைப்பெழுத்துச் சொல்லை நாமே உருவாக்க வேண்டும்.

(குறிப்பு – இத்தலைப்பில் உள்ள கணிணிச்சொற்கள் அது  தொடர்பான கட்டுரைகளில் இடம் பெறுவதால் இங்கிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.)

வழிகாட்டும் முன்னோர்

சொல்லாக்கம் எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதற்கு அயற்சொல்லுக்குத் தமிழாக்கம் தந்த நம் முன்னோரே வழிகாட்டி. அவர்கள் கையாண்ட நெறிமுறை தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள்கண்ட சொல்முறை நமக்குப் பாடமாக அமைகிறது. எடுத்துக் காட்டாக  sugar cane என்பதற்கு இச்சொல் இப்பொழுது அறிமுகமாகும் புதிய சொல்லாய் இருப்பின் நாம் சீனிப்பிரம்பு, சருக்கரை மூங்கில் என்பனபோல்தான் குறிப்பிடுவோம். ஆனால் முன்னவர்களோ அப்போதைய அதன் பெயரைப்பற்றிக் கவலைப்படவில்லை. நிறத்தின் அடிப்படையில் கரும்பு எனக் குறிப்பிட்டனர்.

  புதிதாக இறக்குமதியான கிழங்கின் பெயரைப் பொருட்படுத்தாமல் அதன் உருளை வடிவ அடிப்படையில் உருளை(க்கிழங்கு) எனப்பெயர் சூட்டினர். இப்பொழுது நாம் உருவாக்க வேண்டிய கலைச்சொற்கள் சொல்லுக்குச் சொல்லான பொருள்தொடராய் அமையாமல் இவைபோல் குறுஞ்சொற்களாயும் தனிச்சொற்களாயும் அமைதல் வேண்டும். இத்தகைய சொற்களே நின்று நிலைத்துப் பயன்தந்து மொழிக்கு வளம் சேர்க்கும்.

இன்றைய தேவை குறுஞ்சொற்களே!

நெடுஞ்சொற்களும் கூட்டுச்சொற்களும் இருப்பின் எளிமையின்மையால், அயற்சொற்களையே நிலைக்கச் செய்யும். எனவே, துறைதோறும் துறைதோறும் தமிழ் வளர – அறிவு செழிக்க – இன்றைய உடனடித் தேவை குறுஞ்சொற்களே!

. இலக்குவனார் திருவள்ளுவன்

எட்டாவது உலக தமிழ் மாநாடு , 1995, தஞ்சாவூர், தமிழ்நாடு