(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி)

 

3/3

  இங்கு நாம் குறித்துள்ள நோக்கு முதலானசொற்கள் வேறு என்னென்ன பொருட்களை உணர்த்தப் பயன்படுகின்றன என்று காணுதல் வேண்டும். இவ்வாறு காணும்பொழுது நாம் காணும் சொற்கள் தொடர்பாக வேறு சொல்லாக்கம் இருப்பின் அவற்றையும் கண்டறிய வேண்டும். இஃது ஒரு சங்கிலித்தொடர்போல் அமைய  வேண்டும்.

எடுத்துக்காட்டாக 90 ஆவது பக்கத்தில்  ஆய்வு என்ற  பொருளை, aspect, attention, inspection, reference, vision, sight முதலான சொற்கள் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றை,

aspect நோக்கு
attention கவனம் (கருத்தைக் கவருவதைக் குறிக்கும் கவனம் தமிழ்ச்சொல்லே)
inspection ஆய்வு
reference சுட்டுகை
vision காணுகை
sight காட்சி

எனக் குறிப்பின் சீர்மையாய் இருக்கும்.

இங்கு, Inspection –  பார்வை என்பதற்கு மாற்றாக ஆய்வு எனக் கண்டுள்ளோம். உடன் ஆய்வு என்ற சொல் வேறு எப்பொருள்களை உணர்த்தப் பயன்படுத்தப்படுகின்றது என்று பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இங்கு குறித்துள்ள ‘ஆய்வு’ பக்கம் 89, 90 களில் வேறு பொருள்களை உணர்த்துகின்றன்

inspection, scrutiny, observation, test, exploratory, check என்பன ஆய்வு எனச் சுட்டப்படுகின்றன.

scrutiny நோட்டம்
observation கவனிப்பு
test உரைப்பு
exploratory ஆழ்ந்துபார்
check சரிபார்

   நேராய்வு, சீராய்வு, ஒப்பாய்வு, மறு ஆய்வு, தனிஆய்வு, குழுஆய்வு, அதிரடி ஆய்வு, கள ஆய்வு, தள ஆய்வு என ஆய்வுத்தன்மைக்கேற்ப ஆய்வினைக் கு’றிக்க இயலும் என்பதையும் கருத்தில்  கொள்ள வேண்டும்.

  இவைதவிர, ஆய்வு அடிப்படையான ஆய்வுக்கட்டுரை, ஆய்வுத்திரட்டு, முதலான அனைத்துச் சொற்களையும் ஆய்வு தொடர;ச்சியாக, ஆராய்வு, ஆராய்ச்சி, அடுத்துத் தேர்வு, தெரிவு என ஒன்றோடுஒன்று தொடர்புடைய சொற்களையும் பார்வை என்ற பொருளில்  வழங்கிய சொல்லைத்தான் மாற்றியுள்ளதால், பார்வை தொடர்பான சொற்களையும் இவ்வாறாக வரையறுக்க வேண்டும்.

  அப்பொழுதுதான் நாம் ஏதும் தவறு செய்ய நேர்ந்திருந்தாலும் திருத்திக்கொள்ள இயலும். மேலும், நாம் பல சொற்களைத் தவறான பொருளில் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு பாகுபடுத்துவதால் உரிய பொருளில் பயன்படுத்திச் சரியான பொருளை உணர்த்தாத பொழுதுமட்டும் புத்தாக்கத்தில் ஈடுபட்டால் போதுமானது.

  இவ்வாறாக ஒரு சொல்-பல பொருள் என்ற நிலையை மாற்றியமைக்க வேண்டும். அப்படிஎன்றால் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்தான் எப்பொழுதுமே இருக்க வேண்டுமா என்ற எண்ணம் எழலாம். ஒரு சொல், தான் பயன்படும் இடத்திற்கேற்ப வேறு பொருளைத் தருவது  இயல்புதான். எனவே ஒரு சொல் இடத்திற்கேற்பப் பொருட் சிறப்பை உடையதாக இருப்பின் குறையொன்றுமில்லை. ஆனால் கலைச்சொல் உலகில் ஒரே சொல்லையே திரும்பத்திரும்ப வெவ்வேறு சொற்களுக்கு ஈடாகப் பன்முறைப் பயன்படுத்தப்படுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.

  சரியான பொருளை உய்த்துணர்ந்து சொல்லாக்கம் அமைப்பின் உள்ளத்தில் பதியும் வண்ணம் கருத்தினை வெளிப்படுத்த முடியும். உலகில் உள்ள கலை அறிவியல் கருத்துவளங்களைத் தமிழில் வழங்க இயலும். எனவே, தமிழ்க்களஞ்சியத்தை நிரப்ப அனைவரும் ஒன்றுகூடி முயல்வோமாக!

. இலக்குவனார் திருவள்ளுவன்

ஆறாவது உலக தமிழ் மாநாட்டில் அளிக்கப் பெற்ற கட்டுரை,

கோலாலம்பூர், மலேசியா