இன அழிப்பில் நேற்று ஈழம்! இன்று பருமா! நாளை??? – செந்தமிழ்க் குமரன் & செந்தமிழினி பிரபாகரன்
மரித்துப்போனதா மானுடம் ?
சிங்கள இனவாதப் பௌத்த வெறியர்களால் தமிழ் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது அமைதி காத்த அதே பன்னாட்டு மன்பதை, இன்று பருமாவில் பருமிய இனவாதப் பௌத்த வெறியர்களால் கொல்லப்படும் உரோகிங்யோ இன மக்களைக் காக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை !
ஒரு தனித்த தேசிய இனமாகவும் நிலப்பரப்பையும் கொண்டிருந்த ஈழத் தமிழர்களையே கண்டுகொள்ளாத இந்த உலகம் அப்பாவி சிறுபான்மை உரோகிங்கோ இன இசுலாமியர்களையா கண்டுகொள்ளப்போகிறது ?
தூய இனவாதம் பேசும் பருமியப் பௌத்தர்கள் அம்மண்ணின் சிறுபான்மை உரோகிங்கோ இசுலாமியர்களை வந்தேறிகள் என்று அறிவித்து அம்மக்களைக் கொன்று இனத்தூய்மை என்ற பெயரில்ம் தங்கள் இனவெறியைத் தீர்த்துக்கொள்ள நினைகிறார்கள் .
1978இல் நடைபெற்ற இனத்தூய்மையால் 2 இலட்சம் பேர் வங்காளத்தில் ஏதிலிகளாக அடைக்கலமானார்கள். 1992இல் இரண்டரை இலட்சம் பேர் வங்காளம், தாய்லாந்து எனப் பல நாடுகளில் ஏதிலிகளாகக் கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் .
இப்போது நடைபெறும் இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இலங்கையில் நடைபெற்ற இனத்தூய்மையின் தொடர்ச்சியான நிகழ்வாக இதையும் பார்க்கவேண்டிய ஐயம் எழுந்துள்ளது.
இப்போதைய இனப்படுகொலையின் சூத்திரதாரி அசுவின் விராத்து எனும் புத்தத்துறவி(???)தான்!
2001 ஆம் ஆண்டு 969 என்கிற இயக்கத்தைத் தொடங்கியவர் இவர்தான்!
9 – புத்தரின் 9 சிறப்பியல்புகள்
6 – புத்தக் கோட்பாட்டின் 6 சிறப்புகள்
9 – பௌத்தர்களின் 9 சிறப்பியல்புகள்
எனும் பொருள்பட 969 இயக்கம் அமைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கூறுகிறார்கள்.
969 இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோள்
இசுலாமிய வணிகத்தலங்களையும் வீடுகளையும் கொள்ளையடித்துக் கொளுத்துவது!
இசுலாமியப் பெண்களை மணமுடித்துப் பௌத்தர்களாக மாற்றுவது .
ஓர் இசுலாமியர்கூட இல்லாப் பருமாவை உருவாக்குவது என்பதே!
இதற்குப் பருமாவின் அரசாங்கம் பக்கபலமானத் துணையாக உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுபலசேனா என்கிற சிங்கள் பௌத்த இனவெறி அமைப்பு நடத்திய மாநாட்டில் விராத்து கலந்துகொண்டு உரையாற்றியதும் அதன் பின் இலங்கையில் நடைபெற்ற இசுலாமியர் மீதானத் தாக்குதலும் கவனத்திற்குரியது .
ஆர். எசு. எசு. தொடர்பில் உள்ள இந்த அமைப்பின் செயலை இந்தியா ஒருபோதும் தட்டிக்கேட்காது. ஏற்கெனவே வங்கத்தேசத்திலிருந்து வரும் இசுலாமிய ஏதிலிகளை வெளியேற்றவேண்டும் என்று இந்துத்துவ இயக்கங்கள் கூறிவருகின்றன! இவர்களில் கணிசமானவர்கள் உரோகிங்கோக்களாகக் கூட இருக்கலாம் .
இந்த இனப்படுகொலை அநீதிக்கு எதிராக உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களும், அங்கீகரிக்கபடாத சிறுபான்மை மக்களும் புரட்சிகரச் செயல்பட்டாளர்களும்தான் களம் காணவேண்டும் !
இல்லையென்றால் பௌத்த இனவெறிக்கு,
நேற்று ஈழத்தமிழர்கள் பலியானார்கள்!
இன்று உரோகிங்கோக்கள்!
நாளை யாரோ?
– செந்தமிழ்க் குமரன்
https://www.facebook.com/photo.php?fbid=1619218308291069&set=pcb.1619244864955080&type=1
இன்னா செய்யாமையைப் போதித்த புத்தரின் பெயரில் சத்தமின்றி நடக்கும் இனப்படுகொலைகள் வரிசையில் (முன்னைய பருமா என்ற பெயர் கொண்ட) மியன்மாரில் ரோகிங்கியா (Rohingya) இன இசுலாமிய மக்களின் படுகொலை இந்த நூற்றாண்டின் மற்றுமொரு தோற்றுப் போன மனிதநேயத்தின் அவமானச் சான்றுகளாக நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. குருடாகிச் செவிடாகிப் போன உலகம் வெட்கம் இன்றித் தனது அம்மண அலங்கோலங்கள் பற்றிய கவலை எதுவும் இன்றியே முடமாகச் சான்றாக நின்றுகொண்டிருக்கிறது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையாகத் தமிழினப்படுகொலை சிங்களப் பௌத்தப் பேரினவாதிகளால் நடந்தேறிய கொடுமைகளுக்கு நீதி கிடைக்கும் முன்பாகவே மற்றுமொரு பௌத்தப் பேரினவாத படுகொலை மியன்மாரில் நடந்து கொண்டு இருக்கிறது.
ஓலோகாசுட் அருங்காட்சியக(Holocaust museum) ஆய்வாளர்கள் மியான்மரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பௌத்தப் பேரினவாத மனித உரிமை மீறல்களை இனப்படுகொலையின் தொடக்கம் என வரையறுத்து உள்ளார்கள்.
மனிதர்கள் வாழும் பூமியாக இந்த உலகம் இல்லை என்ற கொடுமைகளை ஏற்றுக்கொண்டபடியே மனிதம் செத்தப் பிணக்காடாக இந்தப் பூமி மாறிக் கொண்டு இருக்கின்றது.
உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த “ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிரான போராட்டங்கள்” களம் இறக்கப்படாதவரையில் இனப்படுகொலைகளின் கறை படிந்த வரலாறுகள் குருதியில் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கும்.
எந்த இனம் அழிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த மானிடமும் என்று குரல் கொடுக்கின்றதோ அன்று தான் இந்த பூமி மனிதர்கள் வாழும் பூமியாக மாற்றம் கொள்ளும்.
– செந்தமிழினி பிரபாகரன்
https://www.facebook.com/sivavathani.prabaharan/posts/10155473995790012:0
Leave a Reply