(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  14–  தொடர்ச்சி)

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  15

7. இல்லறம்

 

‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும்.  இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும்.  மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு.  மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது.  நாளாக நாளாக அறிவு வளர்ச்சி சிறந்து, பண்பாடு வாய்க்கப்பெற்றுக் காதலித்தோரை மணந்து, ஒருவனும் ஒருத்தியுமாய் ஓரிடத்தே இல்லமைந்து மக்களைப் பெற்றுத் தம் மக்களுக்காகவும் பிறருக்காகவும் உழைத்தலே தம் கடன் என்று கொண்டு வாழத் தொடங்கிய காலமே மக்கள் நாகரிக வாழ்வை நண்ணிய காலமாகும்.  அதுவே இல்லறவாழ்வின் இனிய தோற்றக்காலமாகும்.  இவ்வில்லற வாழ்வினைப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ்மக்கள் கொண்டிருந்தனர் என்பது தொல்காப்பியத்தாலும், திருக்குறளாலும் ஏனைய சங்க இலக்கியங்களாலும் எளிதில் இனிதில் அறியலாகும். தொல்காப்பியப் பொருட்படலம் இலக்கியம் பற்றிய நெறிமுறைகளைக் கூறப்புகுந்து இலக்கியத்திற்குரிய பொருள்களில் ஒன்றாம் இல்லற வாழ்வைப்பற்றி அழகுற இயம்புகின்றது.  திருக்குறள், வாழ்வியலை வகையுற விளக்கப்போந்து, இல்லறத்திற்கே முதன்மை கொடுக்கின்றது. ஏனைய சங்க இலக்கியங்களோ இவை இரண்டின் நெறியில் இல்லற வாழ்வைச் சொல்லோவியப் படுத்துகின்றன.

இல்லறத்திற்குரிய முதன்மையாளர்கள் கணவனும் மனைவியும் ஆவர்.  இவர்கள் தலைவன் தலைவி என்றே அழைக்கப் பெறுவர். இல்லறத்திற்கு இருவரும் தலைவர்களே என்பதனை இப் பெயர்கள் அறிவிக்கின்றன.  அன்றியும் தலைவி, மனைவி, இல்லாள் எனும் பெயர்கள் இல்லறத்தில் பெண்ணினம் பெற்றுள்ள உயர்வினையும் மதிப்பினையும் எடுத்துக்காட்டுவனவாகும்.  கணவனை, மனைவன் என்றோ இல்லான் என்றோ அழைக்கும் மரபு இன்மையான் தலைவனிலும் தலைவிக்கே இல்லறப் பொறுப்பும் கடமையும் தலைமையும் மிகுதியும் உள எனப் புலனாகும்.  பெண்ணினத்திற்கு மதிப்புக் கொடுக்கும் இனமே பண்பாடுமிக்க இனம் என்பர்.  ஆதலின், சங்க காலத் தமிழர் உயர்பண்பாட்டின் உச்சியை எய்தி இருந்தனர் என்று உணரலாகும்.

ஆடவன் ஒருவனும் பெண் ஒருத்தியும் கணவனும் மனைவியுமாக ஆகும் உறவுமுறையாலும் ஓரின மக்களின் உயர்வு புலப்படும்.  பண்டைத் தமிழகத்தில் ஆணும் பெண்ணும் எவ்வாறு கணவனும் மனைவியும் ஆகி இல்லறத்தை நடத்தினார்கள் என்பதனைத் தொல்காப்பியத்தால் அறிந்து தமிழர் உயர்வைத் தெளியலாகும்.  ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு முதல்  நிலையாய் இருந்த நிகழ்ச்சியைத் தமிழர் திருமணம் என்று அழைத்தனர்.

‘மணம்’ என்பது நறுநாற்றத்தையும் குறிக்கும்.  இல்லறமே மக்கள் வாழ்வின் புகழ் எனும் மணம் பரப்பும் வாழ்வாகும்.  மணப்பதற்கு முன்னர்த் தமக்கென வாழ்பவர், மணந்த பின்னர்ப் பிறர்க்கென வாழத் தொடங்குகின்றனர்.  பிறர்க்கென வாழ்தலே பெரும்புகழ் தருவதாகும்.  ஆதலின், இல்லற நெறியில் இருவரையும் செலுத்தும் நிகழ்ச்சியை ‘ மணம் ’ என அழைத்தல் மிகவும் பொருத்தம் உடைத்தன்றோ? உயர்வுக்குரிய எவர்க்கும் எதற்கும் ‘திரு’ எனும் அடைசேர்த்து வழங்குதல் தமிழரின் தொன்று தொட்ட நெறியாகும். ஆதலின், மணமும் திருமணம் ஆயது.

இத் திருமணம் காதல் துணையாக நிகழ்ந்ததேயன்றி ஏனைய சாதி, குலம், பொருள், செல்வாக்கு, பதவி துணையாக நிகழ்ந்திலது.  திருமணத்திற்குரிய பருவம் எய்திய ஆணும் பெண்ணும் தாமே எதிர்ப்பட்டுக்  காதலிப்பது அவரவர் விதியின் வழியே நிகழும் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி யுயர்ந்த பால தாணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோ னாயினும் கடிவரை யின்றே” 1

முன்பின் அறியாத இருவர் விதியின் ஆணையால் கூடுவர் என்றாலும் அவரிருவரும் ஒத்த நிலையில்தான் இருப்பர் என்று கருதப்பட்டது.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு

உருவு நிறுத்த காம வாயில்,

நிறையே, அருளே, உணர்வொடு திருஎன

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே ” 2

எனத் தொல்காப்பியர் அவரிடையே காணப்பட வேண்டிய ஒப்புமைகளைத் தொகுத்து உரைத்துள்ளார்.  ஆதலின், ஒரு காலத்தில் எதையும் கருதாது காதலித்தனர் என்றும் பின்னர் மேற் சுட்டப்பட்ட பத்தினும் ஒப்புமையுடையராய் இருத்தல், திருமணத்தில் கூடிய இருவரும் இல்லறத்தை இனிது நடாத்த மிகவும் துணைபுரியும் என்று கருதினர் என்றும் உணரலாம்.  ‘ காதலுக்குக் கண்ணில்லை ’ என்பது சங்ககாலத் தமிழரிடையே பொய்த்துவிட்டது.  காதலுக்கும் கண்ணுண்டு ; கண்ணுள்ள காதலே முறிவுறாத இல்லற வாழ்வை யளிக்கும்  நினைந்தவுடன் மணந்து சினந்தவுடன் தணந்து போகும் இழிநிலையைத் தடுக்கும்.

இவ்வாறு ஒத்த நிலையை ஆராய்ந்து காதல் வயப்பட்டோர் பெற்றோர்க்கு அறிவித்துத் திருமணம் செய்துகொண்டனர்.  பெற்றோர் இசைவு  கிடைக்கப் பெறாவிடின், தலைவி தன் வீட்டைவிட்டுப் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் சென்று மணம் புரிந்து கொண்டாள்.

பிறர் அறியாமல் காதலித்து ஒழுகுவதைக் களவு என்றும், பின்னர் எல்லோரும் அறிய மணந்து கொள்வதைக் கற்பு என்றும் அழைத்தனர். களவின்றிக் கற்பில்லை; கற்பின்றிக் களவில்லை. எல்லாரும் அறிய மணம் நிகழ்ந்ததானால் அது நாடறி நன்மணம் என்று அழைக்கப்பட்டது. திருமணச் சடங்கைக் `கரணம்’ என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், திருமணச் சடங்கு நிகழும் முறைபற்றி அவர் குறிப்பிட்டாரிலர். அகநானூற்றுப் பாடல் (86) ஒன்றால் அக்காலத் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்று அறிய இயலுகின்றது. அப் பாடலில் கூறப்பட்டுள்ளதாவது:

திருமணம் நிகழவிருக்கும் வீடு நன்கு அணி செய்யப்பட்டுள்ளது. வீட்டின் முன்னர்ப் பெரிய பந்தர் இடப்பட்டுள்ளது. எங்கும் புதுமணல் பரப்பப்பட்டுள்ளது. பந்தரிலும் வீட்டு முகப்பிலும் மாலைகள் அணி அணியாகத் தொங்கவிடப்பட்டுள்ளன. வீடெங்கணும் விளக்குகள் ஒளிவிட்டுக் கொண்டிருந்தன. பொழுது புலர்ந்த கவின் பெறு காலை நேரம். உழுந்தங் களியும் பெருஞ்சோறும் வழங்குவதற்கு ஆயத்தம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

எங்கும் ஒரே ஆரவாரம். மணம் செய்து கொள்ளும் நாள் வந்ததே என்று மகிழ்ந்த உள்ளத்தோடு உரையாடிக் கொண்டு செம்மைசொல் முதுபெண்டிர் வந்தனர். பூவும் நெல்லும் கலந்த நீர் நிறைந்த குடங்களைத் தலைமீது தாங்கியிருந்தனர். குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் வந்தனர். முறை முறையாகக் குடங்களைப் பெற்று மணமகள் மீது பூவும் நெல்லும் விளங்குமாறு நீரையூற்றி முழுக்காட்டினர். முழுக்காட்டும்போது “கணவனுக்குத் தகுந்த மனைவியாக இருப்பாயாக” என்று வாழ்த்தொலி எழுப்பினர். இத் திருமணச் சடங்கு கழிந்ததும் சுற்றத்தார் ஆரவாரம் செய்துகொண்டு உடனே அவண் புகுந்தனர். “பெருமைமிகு வீட்டிற்குரிய தலைவியாகுவாய்” என்று கூறித் தலைவியைத் தலைவனிடம் தந்தனர்; பின்னர் அன்றிரவே தலைவனும் தலைவியும் ஓரில்லில் தங்கி இன்புறச் செய்தனர்.

இவ்வளவே திருமணச் சடங்கு நிகழ்ச்சியாகும். திருமணக் காலத்தில் புத்தாடை யுடுத்தலும் புதுநகை புனைதலும் உண்டு என்று அப்பாடலில் வரும் குறிப்புகளால் அறியலாம்.

(தொடரும்)
சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்

++

  1. தொல்காப்பியம்,பொருளதிகாரம் – 93
  2. தொல்காப்பியம்,பொருளதிகாரம் – 273

++