(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல்

பதிப்புரை 2/2

பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின்  பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார்.

பழந்தமிழ்ச் சொல் அமைப்பு என்னும் தலைப்பில் தொடக்கக் காலத்திலிருந்தே சிறப்பான சொல் அமைப்புடன் தமிழ் மொழி விளங்குவதை விளக்கி பழந்தமிழ்ச் சொல்லமைப்பு முறையைப் பாரில் எம்மொழியும் பெற்றிட வில்லை என ஆய்ந்துரைக்கிறார். அடுத்து வரும் பழந்தமிழும் தமிழரும் என்னும் தலைப்பில் சங்க இலக்கியச் சிறப்புகள் மூலம் தமிழரின் பண்பாட்டு நாகரிகச் சிறப்புகளையும் புலமைத் திறத்தையும் எழிலுற உரைத்து இந்தியநாகரிகம் என்று அழைக்கப் படுவதில் பெரும் பகுதி தமிழர் நாகரிகமே என்பதை விளக்கித் தமிழின் உயர்வே தமிழர் உயர்வு என உணர்த்துகிறார்.

இறுதியாகத் தமிழ் மறுமலர்ச்சி என்னும் தலைப்பில் தமிழின் சிறப்பைத் தமிழர்களே அறிந்திலர் என வருந்தித் தமிழில் முடியாதது, தமிழால் முடியாதது யாதும் இன்று என்னும் துணிவுகொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைப் பயன்படுமொழியாக ஆக்க வேண்டியதை வலியுறுத்தித் தமிழர் உயர்ந்து தமிழையும் உயர்த்த வேண்டும்; தமிழின் மலர்ச்சியே தமிழரின் மலர்ச்சி என முடிக்கின்றார்.

தமிழ் என்பது மொழியை மட்டும் அல்லாமல் தமிழ் இனம், தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் நாகரிகம், தமிழ் வீரம் என அனைத்தையுமே குறிக்கும். எனவே, செந்தமிழ் மாமணி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் இந்நூலில் தமிழ் மொழியின் சிறப்பை விளக்குவதுடன்  பிறவற்றின் சிறப்புகளையும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கித் தமிழ் உணர்வை நம் உள்ளத்தில் விதைக்கிறார்.  அறிவியல் ஆய்வு அணுகுமுறையில் நடுநிலை நின்று ஆய்ந்து தமிழின் சிறப்புகளைச் செறிவாகவும் சுவையாகவும் பேராசிரியரால்  அளிக்கப்பட்ட இந்நூலைத் , தமிழ்த்துறையினர் மட்டுமன்றித் தமிழறிந்த அனைவருமே  படித்து நம் அருமைத் தமிழ் மொழியின் சிறப்பினை உணர்ந்து தமிழ் நாட்டில் எல்லா நிலைகளிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை ஏற்படுத்தி இந்தியக்  கூட்டரசின் அலுவல்மொழியாகவும் தமிழை மாற்றி உலகப் பொதுமொழியாக ஆக்கும் வண்ணம் தொண்டாற்ற வேண்டும்.

சிறப்பு வாய்ந்த இந் நூல் அண்ணலார் பு.அ.சுப்பிரமணியன் அவர்களின் வள்ளுவர் பதிப்பகம் (புதுக்கோட்டை) மூலம் முதலில் 1962 இல் வெளியிடப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம்  இந்நூலைப் பாடநூலாக ஏற்றிருந்தமையால் மேலும் சில பதிப்புகளும் வந்துள்ளன. ஒற்றைப் பல்கலைக் கழகம் பலவாகப் பிரிந்த பின்னர் எப்பல்கலைக்கழகத்திலும் தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாடநூலாக ஏற்கும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை. உண்மையான தமிழ்ப்பற்று மிக்க தலைமுறையினரை உருவாக்கும் வண்ணம் தமிழ் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் பாட நூலாகவும் குறிப்பு நூலாகவும் இந்நூலைத் தெரிவு செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் வெளியிடும் பள்ளிக் கல்வித் துறையின் பதினொன்றாம் வகுப்பிலும்  ஒன்பதாம் வகுப்பிலும்,  தமிழ் மொழிப் பாடத்தில் இந் நூலில்  இடம் பெற்றுள்ள கட்டுரைகள் தெரிவு செய்யப்பெற்றுள்ளன. பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியம் அவர்களும் பேராசிரியர் முனைவர்  பெ.அருத்தநாரீசுவரன் அவர்களும் பாடநூல் குழுத் தலைவர்கள் என்ற முறையில்  இந்நற்பணியை ஆற்றி மாணாக்கர்கள் பயனுறச் செய்துள்ளார்கள். இக்கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் மட்டும் (தமிழ் மறுமலர்ச்சி) பாடமாகச்  சேர்க்கப்பட்டுள்ளது. இப்பெருந்தகையினருக்கும் தமிழ் நாட்டுப் பாடநூல் கழகத்திற்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் நன்றி தெரிவிப்பதுடன் பிற வகுப்பு நிலைகளிலும் இந் நூலில் உள்ள கட்டுரைகள் பாடமாக அமைவது மாணவர்களைத் தமிழின் சிறப்பை அறிந்து தமிழனாக வாழச் செய்யும் என அன்புடன் தெரிவிக்கின்றேன். மேலும், பேராசிரியரின் பிற படைப்புகளையும் இக்கால வளரும் தலைமுறையினர் அறியும் வண்ணம் பள்ளிக் கல்வியிலும் கல்லூரிக்கல்வியிலும்  பாடமாக வைத்துத் தமிழ் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.

பேராசிரியர் நூல்களை நாட்டுடைமையாக்கியதால் அண்மைக் காலப் பதிப்புகளைக் காணாத இந்நூலை வெளியிடும் வாய்ப்பு இலக்குவனார் இலக்கிய இணையத்திற்குக் கிடைத்துள்ளது; எனவே, தமிழ்நாட்டு அரசிற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் நன்றி. 18 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவியர் கயல் டி.கே.யானையப்பன் அவர்கள்  தாம் வைத்திருந்த பழந்தமிழ் நூலினை அளித்து உதவினார்;  இந்நூலில் இருந்து சில கட்டுரைகள் சேர்த்து வாழ்வும் வரைவும் என்னும் நூல் வெளியிட இச் செயல் பேருதவியாய் அமைந்தது. (தமிழார்வம் மிகுந்த  இக்கலைஞர் பேராசிரியர் கூறியவாறு வரைந்த படமே மதுரை காமராசர்பல்கலைக்கழகத்தின் முத்திரைப் படமாகத் தெரிவுசெய்யப்பெற்று அணி செய்து கொண்டுள்ளது.) அன்று அவர் செய்த பேருதவியால்தான்   இப்பொழுது இந்நூலை வெளியிடும் வாய்ப்பு அமைந்தது. புகழுடல் எய்திய அன்னாரை இலக்குவனார் இலக்கிய இணையம் நன்றியுடன் நினைவு கூர்கிறது. இந்நூலில் குறிப்பு அகராதிப் பக்கங்கள் இல்லை. திருமிகு மு.அப்துல்சலாம் அவர்கள் பேராசிரியர் இ.மறைமலை அவர்களிடம் அளித்த நூலின துணை கொண்டு அதனையும் இந்நூலில் சேர்த்துள்ளோம்.   ஆதலின் அன்னாருக்கும் நன்றி.

கணியச்சில் ஏற்பட்டபிழைகளைக் களையவும் நூல்வெளிவரவும் துணைநின்ற தமையன்மார் பொறிஞர் இ.திருவேலன், பேராசிரியர் முனைவர் இ.மறைமலை ஆகியோருக்கும் கவினுற அட்டையை வடிவமைத்துத் தந்த அன்புமக்கள் செல்வி தி.ஈழமலர், செல்வன் தி.ஈழக்கதிர் ஆகியோருக்கும் சிறப்பாக அச்சிட்டுத் தந்த அன்றில் இறைஎழிலன், அன்றில் இறை.தமிழ்,  பொன்.முருகு, செம்மொழித்தமிழ் அச்சகத்தாருக்கும்

                        நன்றி.

                         வணக்கத்துடன்

                        இலக்குவனார் திருவள்ளுவன்