இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 15: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 14: தொடர்ச்சி)
மாணவர் ஆற்றுப்படை
மாணவர் ஆற்றுப்படை என்னும் இக்கவியைப் பாடியவர் காலஞ் சென்ற பேராசிரியர் இலக்குவனார் ஆவர். செந்தமிழ்ப் பற்றும் நுண்மாண் நுழைபுலமும் நிரம்பப் பெற்றவர். தம் வாழ்க்கையைப் பெரிதெனக் கருதாதவர். தமிழ் மொழியின் வளர்ச்சியே தம்முடைய வாழ்வெனக் கருதி வாழ்ந்தவர். இடுக்கண் பல உற்ற போதும் எவர்க்கும் அஞ்சாது ஏறுபோல் வாழ்ந்து காட்டியவர். வறுமையிலும் வாய்மைநெறி போற்றிய செம்மல் அவர். பெரியார் ஈ.வே. ராமசாமியின் பகுத்தறிவுக் கொள்கையைப் பெரிதெனப் போற்றியவர். எழுத்திலும் பேச்சிலும் மறுமலர்ச்சி ஏற்படுத்திய அண்ணாதுரை அவர்களின் அன்பையும் நட்பையும் பெற்றவர். இத்தகு சிறப்பினைப் பெற்ற இலக்குவனார்.
பத்துப்பாட்டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையு மிலக்கணமில்கற்பனையே.21
என்ற கருத்துக் கிணங்க பத்துப்பாட்டு எட்டுத் தொகை முதலான சங்க இலக்கியத்தில் மிகுந்த பயிற்சியும் பற்றும் உடையவராய்த் திகழ்ந்தார்.
பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள ஆற்றுப்படைச் செய்யுட்களைப் போலத் தாமும் பாட வேண்டும் என்று எண்ணிய எண்ணத்தின் விளைவே மாணவர் ஆற்றுப்படையின் தோற்றத்திற்கு காரணம் ஆகும்.
ஆற்றுப்படையின் இலக்கணம்
பண்டை நாளில் தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடப் பெற்றன. பின்னர் கதைத் தொடர்ச்சி உடைய நீண்ட கவிதைகள் தோன்றின. தனிப் பாடல்களின் தொகுப்பு ‘எட்டுத் தொகை’ என்னும் பெயர் கொண்டு அமைந்தன. நீண்ட அடிகளையுடைய பா டல்கள் ‘பத்துப்பாட்டு’ என்னும் பெயரில் தொகுக்கப் பெற்று தொகைப் பாடல்களாக விளங்கின.
பத்துப்பாட்டுள் இடம் பெற்றுள்ள செய்யுட்களுள் ஐந்து, ஆற்றுப்படை என்னும் நூல்வகையைச் சேர்ந்தவை யாகும். அவை திருமுருகாற்றுப்பாடை, பொருநராற்றுப்படை, சிறு பாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை என்னும் நூல்களாம்.
“முருகு பொருணாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி மருவிணிய
கோலநெரு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப்
பாலை கடாஅத் தொடும் பத்து” 22
ஆற்றுப்படை என்பது அரசனையோ, குறுநில மன்னனையோ, வள்ளலையோ பாடிப் பரிசில் பெற்று வந்த ஒருவன், பரிசில் பெறுவதற்காக ஏங்கி நிற்கும் ஒருவனுக்குத் தான் சென்று வந்த வழியையும் பெற்ற பரிசிலையும், அதனை வழங்கியவனின் சிறப்பையும் புகழையும் எடுத்துக்கூறி வழிச் செலுத்துதல் என்பது பொருள் ஆகும்.
ஆறு + படை = ஆற்றுப்படை
ஆறு – வழி; படை – படுத்துதல், செலுத்துதல்
ஆற்றுப்படுத்தல் – வழியிற் செலுத்துதல்
இதனை,
‘ சேணோங்கிய வரையதரிற்
பாணனை ஆற்றுப்படுத்தன்று’ 23
என்று புறப்பொருள் வெண்பாமாலையிலும்
‘ கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்’ 24
என்று தொல்காப்பியப் புறத்திணையியலிலும் முறையே ஐயனாரிதனாரும் தொல்காப்பியரும் கூறுகிறார்கள்.
குறிப்புகள்:
- பெ. சுந்தரம்பிள்ளை, மனோன்மனீயம், பாயிரம், தாழிசை-10
- சி. பாலசுப்பிரமணியன், தமிழ் இலக்கிய வரலாறு, பாரி நிலையம், ஒன்பதாம் பதிப்பு, சென்னை, 1970, ப-55.
- ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பா மாலை, கழக வெளியீடு மூன்றாம் பதிப்பு, திருநெல்வேலி, 1964, பக். 221-222.
- தொல்காப்பியர், தொல்காப்பியம், புறத்திணையியல்-34.
(தொடரும்)
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16)
Leave a Reply