(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20 தொடர்ச்சி) 

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

21

   குற்றமற்ற அறநெறியாம் மக்களாட்சி நெறி முறையைப் பின்பற்றிக் மிகப்பெரிய இயக்கமாகத் திராவிட முனனேற்ற கழகத்தை அமைத்து மக்களைக் கவர்ந்தார். மக்களின் மிகப்பெரிய ஆதரவுடன் 6.3.1967 ஆம் நாளன்று தமிழகத்தின் முதலமைச்சராய் அரியணையில் அமர்ந்தார். பேச்சுத் திறன் கொண்டு மக்கள் உள்ளம் கவர்ந்து தலைவரானார். இத் தரணியில் இவர் போல் வேறு எவரேனும் உண்டோ? சொல்வீர்.  இதனை,

சொல்லுந்திறன் கொண்டே தோமில் நெறியில்

மக்களைக் கவர்ந்த மாபே ரியக்கம்

அமைத்து முதல்வராய் அரியணை ஏறிய

தலைவர் இவர்போல் தரணியில் உண்டோ? 49

என்று இலக்குவனார் கூறுகிறார்.

  தம்முடைய பகைவரையும் நண்பராய்க்கருதும் இயல்புடையவர் அண்ணா. பிறர் செய்யும் குற்றத்தை மறந்து குணமாகக் கொள்வார். தமக்குச் சுற்றமாக ஆக்கிக் கொள்வார். அன்பு செலுத்துவதில் பெரியவர். அணைத்துக் கொள்வதில் இவர் அண்ணன். ஆகவே இவரை (அண்ணாவை) வயதில் முதிர்ந்தவர்களும் வாய் மணக்க நெஞ்சம் இனிக்க அனைவரும் மகிழும் வண்ணம் ‘எம் அண்ணா’ என்றே அழைப்பர். அனைவர் உள்ளங்களிலும் இனிதாய்க் குடி கொண்டவர். ஆதலின் அன்புத் தலைவராய் ஆட்சி செய்யும் காவரலாக விளங்குகிறார்.

தமிழகத்தின் இலெனின்

  மாறுபட்ட கொள்கை உடையவரும் மகிழும்படி செய்வார் அண்ணா. கொள்கையை விட்டு மாற்றாருடன் தழுவுவார் போல ஒரு சிலவற்றை விட்டுக் கொடுத்துத் தமக்கு வேண்டியவற்றை முடித்துக் கொள்வார். அரசியல் சாணக்கியத்தை அணிகலனாகப் பெற்றவர். பொதுவுடமை நெறியை (காரல் மார்க்சு நெறி) இவ்வுலகம் ஏற்கும்படி திட்டம் தீட்டி செயல்முறைப் படுத்திய உருசிய நாட்டின் உயர்புகழ் படைத்த பெரியார் இலெனின் அவர்களைப்போல வள்ளுவர் நெறியை இவ்வையகம் ஏற்க நாள்தோறும் உழைப்பவர். எண்ணி எண்ணி உழைத்திடும் திறமை கொண்டவர் அண்ணா.

பசிப்பிணி மருத்துவர்

  அண்ணா அவர்கள் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் காட்சிக்கு எளியவராய் விளங்கினார். கடுஞ்சொல் அற்றவராய் உரையாடினார்.50 பழமை போற்றும் பண்பு மிகுந்தவராய்க் காட்சியளித்தார். ஏழை மக்களின் பசியாகிய நோயைத் தீர்க்கும் மருத்துவராய் விளங்கினார். எந்த நாட்டிலும் எந்த ஒரு முதலமைச்சரும் கொண்டுவராத ஒரு (உ)ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்னும் சிறந்த திட்டத்தை தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். அதனால் மக்களின் பசியும் நீங்கிற்று. உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் என்னும் உயர்புகழ் பெற்றார். இதனைச், சீத்தலைச் சாத்தனார்.

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’51

என்று மணிமேகலையில் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கது.

தமிழ்க் காவலர்

உயிரினும் சிறந்த தமிழ் மொழியைக் காப்பதற்கு, இந்தி என்னும் பாம்பு இனிய தமிழ்த் தெய்வத்தைப் பற்றிடா வண்ணம் கல்விச் சோலையைக் காத்திடும் வேலி போன்று இருமொழித் திட்டம் (தமிழ், ஆங்கிலம்) என்னும் சட்டம் இயற்றினார். சொந்த நாட்டில் புதுமை துலங்கிடும் அறிவு மொழியாம் ஆங்கிலமும் ஒவ்வொருவரும் அறிந்தால் போதும். இக்கொள்கை அனைவருக்கும் பொருத்தமுடையது. இந்தியத் துணைக்கண்டத்து மக்கள் அனைவரும் இணைந்து வாழ்வதற்குச் சிறந்த வாய்ப்பினைத் தருவது இருமொழிக் கொள்கையே. பிறர்மீது வலிந்து இந்தி மொழியைத் திணிப்பின் அது துன்பத்தையே கொடுக்கும். அரும்பு போன்ற இளம் சிறுவர்களின் தலையில் விரும்பா மொழியாம் இந்தியைத் திணித்தால் அதனால் பெறுவது சொல்ல முடியாத துயரமே. நாட்டு ஒற்றுமையை நாடிச் செய்யும் காரியம் இறுதியில் மக்களிடையே வேற்றுமை உணர்ச்சியைத் தோற்றுவித்து விடும் என்று கருதி இந்தி மொழிக்கு வேலியிட்டார் அண்ணா. இதனை,

‘           ஒற்றுமை நாடி வேற்றுமை விதைக்கும்

            இன்னாச் செயலுக் கிறுதி கண்டார்’ 52

என்ற அடிகளில் குறிப்பிடுகிறார்.

  தமிழக மக்கள் வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழே முதன்மை பெற வேண்டும். கல்விமொழி தமிழாக வேண்டும். அரசு செய்யும் மொழி தமிழாக வேண்டும். இறையை வழிபடும் மொழி இன்றமிழாக வேண்டும். எவருடனும் உரையாடும் மொழி இன்பத் தமிழாக வேண்டும். வீட்டில் தமிழ், வெளியில் தமிழ், ஆட்சியில் தமிழ். தெருவெல்லாம் தமிழ் முழக்கம். தேயமெல்லாம் தமிழ் முழக்கம். உலகமெல்லாம் தமிழ் வளர்ச்சி உண்டாக வேண்டும். கவிஞர் இக்கருத்தைக் கீழ்க்கண்ட அடிகளில் புலப்படுத்துகிறார்.

எங்கும் தமிழே, எதிலும் தமிழே,

எல்லாம் தமிழிலே எனும் நிலை ஆக்கினார். 53

தமிழ்மொழி உலக அரங்கத்தில் உயர்ந்த இடம் பெற்று விளங்கிட இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். மாநாட்டைச் சிறப்புற நடத்தி இறவாப் புகழைச் சேர்த்துக் கொண்டார்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள். 15-18.
  2. திருவள்ளுவர், இறை மாட்சி செ.எ. 386.
  3. கலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை, அ-ள் 195-196.
  4. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 55-59.
  5. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 60-61.

(தொடரும்)

ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22)