இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 21 தொடர்ச்சி)
22
அமெரிக்காவின் அழைப்பு
இன்றைய உலகில் எங்கு நோக்கினும் போட்டியும் பூசலுமே நிலவுகின்றன. இவை நாட்டைத் துன்புறுத்தும் கேடான செய்திகளாம். அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சித் திறத்தால் நம்முடைய இனிய தமிழ்நாட்டில் அமைதியும் ஒழுங்கும் குடிகொண்டு விளங்குகின்றது. இந்நிலவுலகத்தின் இதனை அறிந்த மக்கள் ஒவ்வொருவரும் தம்முடைய நாட்டில் தலைவர் அண்ணா அவர்கள் காட்சி தர வேண்டும். களிப்பினை நல்க வேண்டும் என்றே விரும்பினர். அனைவரும் அழைக்க எண்ணுகையில் எதிலும் முன்றிற்கும் செல்வச் சிறப்புடைய அமெரிக்கா இதிலும் முந்திக்கொண்டது. சீர்மிகுந்த பெருமை கொண்டதால் அண்ணாவை அழைத்துப் பெருமையும் பெற்றுக் கொண்டது.
அண்ணாவின் இசைவு
உலகில் புகழ் படைத்த பல்கலைக்கழகங்களில் ஒன்று ஏல் பல்கலைக்கழகம். உலகத்தில் புகழ்ப்படைத்த அரசியல் தலைவர்களை அழைத்துச் சிறப்புச் செய்வது அப்பல்கலைக்கழத்தின் தலையாய நோக்கங்களுள் ஒன்றாகும். அரசியல் நெறியில் உயர் இடம் பெற்று விளங்கிய அண்ணா அவர்களை ஏல்பல்கலைக்கழகம் விருப்புடன் அழைத்தது. அழைப்பை அன்புடன் ஏற்று அமெரிக்கா சென்றார் அண்ணா.
தமிழ் உரு
தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று வந்தவர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எனினும் தமிழ் உள்ளங்கொண்டு சென்று தமிழ்ப் புகழ் பரப்பி வந்தவர் எத்தனை பேர் உள்ளனர்? விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே இருப்பர்.
புகழ் பெற்று விளங்கும் அண்ணாவை அறிந்தோர், தமிழ் மொழியின் சிறப்பையும் அறிந்திட வேண்டும் என்னும் விருப்பம் கொள்வர். எனவே தளராத புகழுடைய தொல்காப்பியத்தையும், உலகமக்கள் அனைவர்க்கும் பொதுமறை எனப் போற்றத்தகும் சிறப்புடைய திருக்குறள் நூலையும், படிப்பவர் மனத்தைக் கொள்ளை கொள்ளும் நீண்ட பெரிய புகழுடைய சிலப்பதிகாரம் என்னும் நூலையும் அண்ணா அவர்கள் தம்முடன் கொண்டு சென்றார். தமிழ்த்தாயே உருவெடுத்துச் செல்வது போலவும் செந்தமிழ் நாட்டினர் பண்பெல்லாம் திரண்டு பருவுடல் கொண்டு செல்வது போலவும் அண்ணா அவர்கள் சென்றார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழ் அன்பர்கள் மீனம்பாக்கம் விண்வழித்துறையில் ஒருங்கு திரண்டு மகிழ்ச்சி பொங்க வாழ்த்துப் பல கூறி வணங்கிக் கைகூப்பி வழியனுப்பி வைத்தனர்.
அண்ணா அவர்களுக்கு இனிய துணையாகத் தமிழக அரசின் செயலாளர் சொக்கலிங்கனாரும் உடன் சென்றார். புன்னகை தவழும் பொலிவு பெற்ற முகமும், அன்பும் ஆற்றலும் உடையவர். அடக்கமும் பண்பும் வாய்க்கப் பெற்று தமக்குரிய அணிகலனாய்த் தோற்றங் கொண்டவர் சொக்கலிங்கம். அண்ணா அவர்களின் மதிவழிச் செயல்படும் தனிச் செயலாளராக, தழுவும் நிழலாக உடன் சென்றார். ஏப்பிரல் திங்களில் உலகப் பயணம் மேற்கொண்டு தமிழ் நிலத்தைவிட்டுப் பிரிந்து சென்றார் அண்ணா. பரிதியைப் பிரியும் தாமரை மலர்போல வாடிய முகத்துடன் விடை கொடுத்தார் தமிழ் மக்கள். எனினும் உள்ளத்தில் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை,
ஞாயிறு பிரியும் நல்மரை மலரென
வாடிய முகத்துடன் மகிழ்ந்தே நின்றோம் 54
எனக் கூறுகிறார் பேரா.சி.இலக்குவனார்.
சென்னையில் ஆளுநராக விளங்கியவர் ‘ஏல்’ என்னும் பெயர் பெற்ற துரைமகனார். அவர் வழங்கிய கொடையால் வளர்ந்து உருவானது. ‘ஏல்’ பல்கலைக்கழகம். ஏல் பல்கலைக்கழகத்தில் ‘எண்டர்சப்பு’ என்பவர் ஓர் அறக்கட்டளை அமைத்துள்ளர். அவ்வறக்கட்டமையின் மூலம் உலகிலுள்ள சிறந்த அரசியயல் அறிஞரை ஆண்டுதோறும் அழைத்துச் சிறப்பிப்பது வழக்கம். அதன்படி 1968 ஆம் ஆண்டு, நம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்களை விருந்தினராக அழைத்துச் சிறப்பித்தது. ஏல் பல்கலைக்கழகம் சென்ற அண்ணா அவர்ள் அங்குப் பயிலும் மாணவர்குழுவுடன் மகிழ்ந்து குலாவினார்கள். மாணவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடையளித்தார்கள். தாம் கொண்டு சென்ற திருக்குறள் நூலிலிருந்து சில குறட்பாக்களை எடுத்துச் சொல்லி விளக்கம் தந்தார்கள். சில நாட்கள் அங்கு தோழமையுடன் உண்டும் உறைந்தும் மகிழ்ந்தார்கள். இவ்வாறான தூய நல்ல திட்டத்தில் அமெரிக்காவின் அரசியல் அறிஞர்களே பங்கு பெற்றனர். அமெரிக்கர் அல்லாத அரசியல் தலைவர் வரிசையில் முதன்முதலா கப் பங்கு கொண்டு சிறப்புப் பெற்றவர் அண்ணா அவர்களே ஆவர். இதனை,
‘ உயர்பே ரறிஞரை உவந்த அழைத்து
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
அமெரிக்க ரல்லா அரசியல் தலைவர்
இதுவரை எவரும் எய்தினர் அல்லர்’ 55
என்னும் அடிகளில் விளக்கியுள்ளார்.
குறிப்புகள்:
- சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 103-104.
- சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 109-114.
ம. இராமச்சந்திரன்
Leave a Reply