இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 22 தொடர்ச்சி)
23
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23
அண்ணாவின் சிறப்பு
அறிவுடைய ஒருவரை அயல்நாட்டவரும் மதித்துப் போற்றுவர் என் பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்றாகும். கற்போர்க்குச் சென்ற இடமொல்லாம் சிறப்பு என்னும் முதுமொழி உண்மையான்றோ? ஞாயிற்றின் ஒளியை மறைப்பவர் இஞ்ஞாலத்தில் எவரும் உண்டோ? இலர் என்று கூறலாம்.
‘ அறிவுடை ஒருவரை அயலரும் போற்றுவர்
ஞாயிறு தன்னை நற்குடை மறைக்குமோ’ 58
ஐந்து நாட்கள் அன்புமிக்க தோழராய் விளங்கினார் அண்ணா. திமோத்தி துவைத்துக் கல்லூரியும் பெரும் பேறு பெற்றதாய் மிகவும் மகிழ்ச்சி கொண்டது. மாணவர் கூட்டமும் மற்றும் உள்ள அறிஞர் குழுவினரும் பேராசிரியர் பெருமக்களும் அவர்தம் பெண்டிரும் அண்ணா அவர்கட்கு விருந்திணை அளித்து விருந்து பெற்றனர். வினாக்களுக்கு விடையளிக்கும் அண்ணாவின் திறன் அறிந்து மகிழ்ந்தனர்.
கருத்து விளக்கம்
அண்ணா அவர்கள், ‘இந்தியக் துணைக் கண்டம் அமைதியை விரும்புகிறது. அதறகெனத் தக்க உழைப்பை நல்கி வருகிறது’ என்னும் நற்கருத்தை வெளியிட்டார். ‘ஆங்கில மொழி ஒன்றே மக்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாகும். அறிவையும் இனிதே நல்குவது. இந்திமொழி இவ்விரு பயன்களையும் செய்யாது’ என்னும் கருத்தையும் எடுத்துக் கூறினார்.
காங்கிரசுக் கட்சியே இந்தியா முழுவதும் இயங்கும் கட்சியாகும். காங்கிரசு அன்றி பிறிதொரு கட்சி தோன்றி வளர்தல் மிக அரிதே. பல்வேறு கருத்துகளைக் (கொள்கைகளை) கொண்ட அரசியல் கட்சிகள் அடிப்படைத் திட்டம் ஒன்றின்கீழ் இணைந்தால் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். காங்கிரசுக் கட்சியை எளிதில் வெல்லாம் என்னும் இனிய நற்கருத்தை வெளியிட்டார். மாநிலக் கட்சிகள் மைய அரசின் ஆட்சியை மாற்றும் திறமுடையனவல்ல. மாநிலத்தில் இருக்கும் கட்சிகள் தமக்கென்று வைத்திருக்கும் கருத்துகளை விட்டுவிடாமல் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களுக்குத் தேவையான சில இன்றியமையாப் பணிகளை முன்னிறுத்தி ஒன்று சேர வேண்டும். தம் கட்சிக் கொள்கைகளைத் துறந்து விடுவது என்பது இயலாதது. எனினும் பொதுவான சில அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்ற மாநிலக்கட்சிகள் ஒன்று சேர்ந்து காங்கிரசை எதிர்க்கலாம் என்றும் சொன்னார்.
நேருவுக்குப்பின்
இந்தியத் துணைக்கண்டத்தில் தலைமையச்சர் நேருவுக்குப் பின் மிகப்பெரிய தலைவராக விளங்கியவர் அண்ணா ஒருவரே. தலைமைப் பொறுப்பும் ஆட்சிச் சிறப்பும் பெற்று விளங்கினார். தமிழகம் புகழ் பெற்று விளங்கிடச் செய்த பெருமகன் என்று நகர முழக்கம் புகழ்ந்து பேசியது.
தமிழகச் சிறப்பு
தமிழ்த் திருநாடு எல்லா வகையிலும் ஏற்றம் பெற விரும்பினார் அண்ணா. உழவுத்துறையிலும், உணவுத்துறையிலும் தமிழகம் சிறப்படைய வேண்டும் என விரும்பினார். எனவே அமெரிக்காவில் அறிய வேண்டியவற்றை அறிந்து வந்தார். அமெரிக்க மக்களின் அன்பில் தோய்ந்தார். அம்மக்களைத் தம் அறிவால் மூழ்கும்படி செய்தார் . தமிழகத்திலிருந்து தாம் கொண்டு சென்ற வேலைப்பாடு மிகுந்த பொருட்களாலும், திருக்குறள், சிலப்பதிகாரம், இலக்குவனார் எழுதிய தொல்காப்பிய ஆங்கில மொழி பெயர்ப்பு முதலிய நூல்களாலும், தம்முடைய சொல்வன்மையாலும் செயல் முறையாலும் தமிழகச் சிறப்பை அமெரிக்கர் அறியும்படி செய்தார்.
இக்கருத்தை,
‘ உழவுத் துறையிலும் உணவுத் துறையிலும்
அறிவன அறிந்து அங்குள மக்களின்
அன்பில் ஆழ்ந்தும் அறிவால் ஆழ்த்தியும்
தமிழகச் சிறப்பைத் தாம் கொண்டு சென்ற
பொருளால் நூல்களால் புகல்திரைச் சுருளால்
உரையால் செயலால் உணர்த்தி மீண்டார்’57
என்ற அடிகளில் புலப்படுத்தியுள்ளார் கவிஞர்.
குறிப்புகள்:
- சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியில் வாழ்த்து அ-ள் 116-117.
- சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 146-151
ம. இராமச்சந்திரன்
Leave a Reply