(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28

 1.3 பொங்கல் வாழ்த்து

  பொங்கல் வாழ்த்துக் கவிதைகள் மூலம் பாடியுள்ளார். ‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ என்னும் கவிதை முப்பது அடிகளைத் கொண்டது. 1964 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்து என்னும் கவிதை பதினோரு அடிகளையும், 1965 ஆம் ஆண்டு பாடிய பொங்கல் வாழ்த்துக் கவிதை ஏழு அடிகளையும் கொண்டுள்ளது.

‘மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து’ புலப்படுத்தும் கருத்துகள் போற்றத்தக்கன.

உழவையும் தொழிலையும் உயர்வாக மதிக்கும் தமிழ் மக்கள் ‘தை’ முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடினர். பலநாள் உழைத்த உழைப்பின் பயன் விளங்கும் நாளாகக் கொண்டவர். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ எனப் பாராட்டினர். உணவைத் தரும் மாடுகளுக்கு நன்றி செலுத்தினர். அறுசுவை உண்டி சமைத்து உண்க என ஊட்டும் நாள் ஆக்கினர்.

 பிறப்பில் உயர்வு தாழ்வு பேசும் மடமை ஒழிதல் வேண்டும். உழைக்கும் மாட்டையும் உயர்வாகக் கருதிய தமிழ்நாட்டில் மக்களைக் கீழ்மைப்படுத்தும் நிலை ஒழியட்டும்.

 பிறப்பால் இழிவெனும் பேதமை ஒழிக

 உழைக்கும் மாட்டையும் உயர்வென மதித்த

 தண்டமிழ் நாட்டில் ஒண்டிறல் மக்களை

 மாட்டினும் கீழாய் மதிக்குநாள் ஒழிக

 பொங்கலோ என்ற மங்கல முழக்கம்

 எங்கும் முழங்குக எரிபரி தணிக

 அமைதி நிலவுக அடிமை அகல்க

 நால்வகை உரிமை யாவரும் பெறுக71

என வாழ்த்துகிறார். மேலும் ‘விடுகளில் நெல்மிக நிறையட்டும். பல்வகை வளங்கும் பெருகட்டும். கடல் சூழ்ந்த இவ்வுலகில் உள்ள தமிழர் அனைவரும் வாழ்க’ என வாழ்த்துகிறார் கவிஞர்.

  நால்வகை உரிமை 72 யாவது சமத்துவ உரிமை, சுதந்திர வாழ்வு பெறும் உரிமை, விரும்பிய சமயத்தைப் பின்பற்றும் உரிமை, பண்பாடு மற்றும் கல்வி கற்பதில் உரிமை என நான்காம்.

  1964 ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்து, ‘தமிழ்மொழி வாழ்க;  குறள்நெறி வாழ்க; இப்பொங்கல் திருநாளில் ‘தமிழ்மொழியைக் காப்போம்’ என உறுதி கொள்வோம். வளம் பல பெருகட்டும். பசியும் பிணியும் பகையும் நீங்கி, மழையும் வளமும் பெருகி, வள்ளுவர் நெறி போற்றி இவ்வுலகம் வாழட்டும். மக்களாட்சி முறை சிறக்கத் தொண்டு செய்வோம். இறையைப் போற்றுவோம்’ என வாழ்த்துகிறார்.

   1965 ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்தில், ‘குறற்நெறி நாடெங்கும் பரவட்டும். குடியரசு தழைக்கட்டும். நாட்டு மக்களின் பசியும் பிணியும் நீங்கட்டும். பகை ஒழியட்டும். வளம் சுரக்கட்டும். வையகம் வாழட்டும்; வான்தமிழ் வெல்லட்டும். உழைப்பை உயிரென மதிக்கட்டும். எங்கும் இன்பம் நிறைக என வாழ்த்துகிறார்.

 குறள்நெறி ஓங்கி, குடியர சுயர்ந்து

 பசியும் பிணியும் பகையும் நீங்கி

 வசியும் வளனும் சுரந்து வாழியர்

 வையகம் வாழ்க; வான்தமிழ் வெல்க

குறிப்பு:

  1. சி. இலக்குவனார், சங்க இலக்கியம் பொங்கல் மலர் மங்கலம் விளங்கும் பொங்கல் வாழ்த்து, அ-ள் 19-26.

 பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran