(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippuஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30

நெடுஞ்செழியன்

 1965 ஆம் ஆண்டு சனவரி 26 முதல் இந்தி மொழி, இந்தியாவின் பொது மொழியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியது. அதனால்  தமிழ்நாட்டில் இந்திமொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் ஒன்று 1964 செட்டம்பர் மாதம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று மீண்ட அவரைக் கவிஞர் வரவேற்று வாழ்த்துகிறார்.

 செந்தமிழைக் காப்பதற்காக இந்தி மொழியின் ஆதிக்கத்தை எதிர்த்து சிறைப்பட்டு மீண்டவர்; தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர்; சீரிய பண்புடையவர்; செந்தமிழ் வல்ல நாவலர்; குறள்நெறி போற்றுபவர்; மதுரையை ஆண்ட நெடுஞ்செழியன் என்னும் மன்னன் பெயரைக் கொண்டவர்; அமைச்சராக அமர்ந்து நாட்டை ஆளப் போகிறவர்; பெரும் புகழ் பெற்ற நெடுஞ்செழிய! வாழ்க! என்று கூறி வாழ்த்துகிறார்.

 அரியணை வீற்று ஆண்ட

 தமிழ்மன்னன் தன்பெயர்

 விரும்பிக் கொண்ட விறலோன்

 அமைச்சர் பீடம் அமர்ந்து

 ஆளும் நிலையை அடைய இருப்பவன்

 நெடுஞ்செழியன் எனும்

 நீள்புகழ் நம்பி வாழ்க!76

இக்கவிதை 1964ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. கவிஞர் வாக்குப் பலிக்கும் என்பார்கள். அச்சொற்படி நாவலர் நெடுஞ்செழியன் 1967 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தமிழகத்தின் கல்வி அமைச்சராகப் பதவியேற்றார். சிறப்பாகப் பணி செய்தார்.

கருணாநிதி

 இலக்குவனார், திருவாரூர் கழக உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிப் போது, கருணாநிதி  இலக்குவனாரின் மாணவராக விளங்கினார்; இலக்குவனாரைப் போலவே தமிழ்ப்பற்று மிகுந்தவர்; இளம் வயதிலேயே பல போராட்டங்களில் ஈடுபட்டவர்; அரசியல் பணியில் ஈடுபட்டு அண்ணா அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார்; அண்ணா மறைவிற்குப்பின் தமிழகத்தின் முதலமைச்சரானார்; தம் மாணவரின் உயர்வு கண்டு இலக்குவனார் பெருமிதம் அடைந்தார்; கருணாநிதியின் பிறந்த நாளின்போது வாழ்த்திச் சிறப்பித்தார்.

 கலைஞரின் நாற்பத்தெட்டாவது பிறந்த நாள் பெருமங்கல விழாவில் இக்கவிதையைப் பாடினார். இக்கவிதை அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா என்று வகையைச் சார்ந்தது. அறுபத்திரண்டு அடிளையுடையது.

‘தமிழ்மொழி பெருமை பெறவேண்டும் என்பதற்காக உடல், உயிர். உடைமை அனைத்தையும் வழங்குகின்றவர். இளம் பருத்திலேயே தமிழ்த் தொண்டு செய்தவர். பெரியாரின் வழியில் நடந்து, அண்ணாவின் உரிமைத் தம்பியாய்த் திகழ்ந்தவர். ‘கல்லக்குடி’ பெயர் மாற்றப் போராட்டம் நடத்தியவர். ‘உன் பெருமை சொல்லப் புகுந்தால் தோற்பது யானே’ என்று கவிஞர் உயர்வு நவிற்சியாகப் பாடுகிறார்.

நூல்பல இயற்றியவர். நாடகங்கள் பல இயற்றி நடித்தவர். கட்டுரை வரைந்தவர். கவிதைகள் பல இயற்றியவர்.

தேர்தலில் வெல்லும் திறம் உடையவர். இந்திப் பேயைக் கொல்ல வஞ்சினம் கூறியவர். வறுமைப் பிணியை விரட்ட முயன்றவர். பழமையை வெறுக்காவர். புதுமையை மறுக்காதவர். உழைப்பின் உறைவிடமாகத் திகழ்ந்தவர். அன்பும் அருளும் நிறைந்தவர். முத்து வேலர் அஞ்சுகம் பெற்ற அருமை மைந்தர். ‘குறள்நெறி’ போற்றியவர். உரிமைத் தமிழகம் உயர விரும்பியவர். நாட்டில் பசியும் பகையும் நீங்கி, மழையும் வளமும் பெருகி வளர, தமிழ்மொழி சிறக்க, துணைவி தயாளுஅம்மையுடன் பல்லாண்டு வாழ்க. கடல் சூழ்ந்த இவ்வுலகில் பழந்தமிழ் போன்று வாழ்க’ என வாழ்த்துகிறார்.

 உரிமைத் தமிழகம் உயர்ந்து விளங்கி

 எல்லா நாடும் இனிதே போற்றிட

 பசியும் பகையும் பாரில் நீங்கிட

 வசியும் வளனும் வந்து பொருந்திட

 இன்பத் தமிழ்மொழி இனிதே ஆண்டிட

 ……………………………………

 வாழ்க பல்லாண்டு வாழ்க

 சூழ்கடல் உலகில் தொல்தமிழ் போன்றே.77

காமராசர்

தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவராகவும் அனைத்து இந்தியக் காங்கிரசின் தலைவராகவும் விளங்கியவர்; இலவசக் கல்வித் திட்டத்தை தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தியவர்; தொண்டருள் தலைவர்.

காமராசர் பற்றி ‘கருமவீரர் காமராசர்’ என்னும் தலைப்பில் கவிஞர் நூல் ஒன்றும் எழுதியுள்ளர். காமராசர் பிறந்தநாளின் போது கவிதையும் பாடியுள்ளார்.

‘வாழ்க காமராசர்’ என்னும் இக்கவிதை பதினேழு அடிகளைக் கொண்டது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது.

‘அறுபத்திரண்டாம் வயதை அடைந்துள்ள காமராசர் உழைப்பால் உயர்ந்தவர்; பாரத நாடு போற்றும் பெருந்தலைவர்; நேருவுக்குப் பின் யார்? என் வினாவின்போது தக்க விடையளித்தவர்; (இலால்பகதூர் சாத்திரியைப் பிரதமராக்கிக் காட்டினார்). தமக்கென வாழாதவர். பிறர்க்கென வாழும் பெருமை உடையவர். எல்லா மொழிகளும் இனிதே வளர வழிகளைக் காட்டி வாழ்க பல்லாண்டு’78 என வாழ்த்துகிறார்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், குறள்நெறி, மதுரை, 1-11-64 ப-1. அ-ள் 9-15.
  2. சி. இலக்குவனார், ‘கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து’ 3.6.1971, அ-ள் 54-62.
  3. சி. இலக்குவனார், குறள் நெறி, வாழ்க காமராசர்

அ-ள் 2-16.

பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran