இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 தொடர்ச்சி)
இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 35
உமா மகேசுவரம்பிள்ளை
தமிழகத்தில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் தொண்டர் இவர். தஞ்சை மாவட்டத்தின் நாட்டாண்மைக் கழகத் தலைவராய் இருந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் மாணவர்க்கு(பார்ப்பனர் அல்லாதார்) படிக்க உதவிகள் செய்தவர். ‘தமிழ்ப் பொழில்’ என்னும் மாத இதழை நடத்தியவர். தூய செந்தமிழ்த் தொண்டர். இத்தகைய பெரியார் மறைவு குறித்து ‘துன்பமாலை’ என்னும் தலைப்பில் கவிதை பாடியுள்ளார், இலக்குவனார். அறுசீர் ஆசிரிய விருத்தத்தால் அமைந்தது இக்கவிதை. நான்கு விருத்தங்களை கொண்டது.
தமிழவேள் என்று மதிக்கப்பெறும் உமாமகேசுவரம்(பிள்ளை) மறைந்த செய்தி, எம் சிந்தையில் ஆற்றமுடியாத துன்பத்தை அடையச் செய்துவிட்டது. என்னுடைய நிலை கலக்கி அறிவை அழித்து என் உயிரைப் பிரித்து விட்டதே. கரைகாணாத் துயர்க் கடலில் ஆழ்த்தி விட்டதே.
“என் அன்னையை இழந்தேன் என்று சொல்வேனோ, அப்பனை இழந்தேன் என்று சொல்வேனோ, என் தலைவனை இழந்த காரணத்தால் என்னை இழந்தேன் என்று சொல்வேனோ நினைத்ததை முடிக்கும் முதல்வனை இழந்து பின்னையேன் இருக்கின்றேன். பேதையேன் வாழ்ந்த வாழ்வு இது தானே” என்கிறார்.
மேலும் சிலநாள் முன்னர், பல்கலைக்கழக ஒப்புதலைப் பெற்ற கல்லூரி பலவகையிலும் சிறப்புடைய பணிபுரிவது நம் கடமை என்று அன்பாய் விடுத்த கடிதம் பெற்றேனே. இன்றோ அவர் இறந்த செய்தியைப் பெற்றேனே. என்னே இக்கொடிய வாழ்வு.
செந்தமிழை மூச்சாகக் கொண்டவர். புலவரே அவருடைய அறிவு. புகழ் வாய்ந்த நம் மொழியின் பெருமையை அவர் நிலைநாட்ட முயலாத நாளும் உண்டோ? இவ்வரிய செயலால் செந்தமிழ்த்தாய் அவருயிரைப் போக்கினாளே, ஐயோ, செந்தமிழ்க்குத் தொண்டு செய்தோர் நூற்றாண்டு வாழ்ந்த துண்டோ? இல்லை போலும்” என்கிறார் கவிஞர்.
‘செந்தமிழே யவருயிராம்; செழும்புலவோ ரவரறிவாம், சீர்த்தி வாய்ந்த
நந்தமிழின் மேன்மைதனை நாட்டுதற்கு முயலாத நாளுமுண்டோ?
இந்தவோர் செயலால்தான் இருந்தமிழ்த்தாய்
போக்கினளோ என்னே யையோ
செந்தமிழ்க்குப் பணிபுரிந்தோர் எவரேனும் செல்நூறும்
வாழ்ந்த துண்டோ.’101
பாரியைப் பிரிந்த பாரிமகளிர் பாடிய பாடலும்102 பாரியின் நண்பர் கபிலர் பாடல்களும் 103 இங்கு ஒப்பு நோக்கத்தக்கன.
ச. சோமசுந்தர பாரதியார்
பசுமலை நாவலர் பாரதியார் என்று அழைக்கப்படுவார். விடுதலைக்கவிஞர் சுப்பிரமணிய பாரதியின் நெங்கிய நண்பர். சிறந்த உரையாசிரியர். தொல்காப்பியப் பொருளதிகாரம் புறத்திணைக்குப் பொருத்தமான உரை கண்டவர். முதன் முதலாக 1937 ஆம் ஆண்டில் இந்தி மொழித்திணிப்புக்கு எதிர்ப்பாகப் போராடினார். பகுத்தறிவு இயக்கத்தின் சிறந்த தொண்டருள் ஒருவராக விளங்கினார். பரந்த நூலறிவு உடையவர். தமிழ்ப்பற்று மிக்கவர். இவர் மறைவு குறித்து இரங்கல் வெண்பா பாடியுள்ளார் கவிஞர். நாவலர் பாரதியார் நினைவு மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது. நான்கு அடிகளையுடைய நேரிசை வெண்பா.
செஞ்சொல் கொண்ட புலவரே, தமிழ்மொழியின் காவலரே நீ, உறங்கிவிட்டாயோ? தமிழ்ப்பகையை வென்ற நீ வேறுலகம் சென்றாயோ? எமக்குத் துன்பத்தைக் கொடுத்துவிட்டு இவ்வுலகினின்று நீங்கினையோ!
‘செஞ்சொற் புலவ! செழுந்தமிழின் காவல!
துஞ்சினையோ தூய தமிழ்ப்பகையை – எஞ்சாது
வெல்லும் துணிவோடு வேறுலகம் சென்றனையோ?
அல்லல் எமக்கே அளித்து’ 104
இலக்குவனார் பாடிய கையறுநிலைப் பாடல்கள் இரக்க உணர்வைத் தருகின்றன. தமிழ் அன்பர்களுடைய பிரிவால் தமிழ் வளர்ச்சி குன்றவிடாமல் காத்தல் நம் கடமை என்ற எண்ணத்தை ஊட்டுகின்றன.
குறிப்புகள்:
- சி. இலக்குவனார் துன்பமாலை 1941, ப.13, பா.எ.4.
- பாரி மகளிர், புறநானூறு, பா.எ. 112
- கபிலர், புறநானூறு பா.எப. 113, 114.
சி. இலக்குவனார், நாவலர் பாரதியார் நினைவு மலர், திருவள்ளுவர் கழக வெளியீடு, மதுரை 1960, ப.3, பா.எ.1.
Leave a Reply