(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40

chinnasami03

சின்னச்சாமி

  1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் கொண்டனர். அவர்களுள் முதன்மையானவர் சின்னச்சாமி என்பவர். இவர் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தமிழ்ப்பற்று மிகுந்த அன்பர். அறிஞர் அண்ணா அவர்களின் பேரன்பிற்கு உரியவராக விளங்கினார். கவிஞர் தமிழ் மறவன் சின்னச்சாமியை நினைந்து பாடியுள்ளார். இக்கவிதை பதினைந்து அடிகளை உடைய நிலைமண்டில ஆசிரியப்பா.

 இனிய தமிழ்நாட்டில் செந்தமிழ் காப்பதற்காக

இந்தி மொழியை எதிர்த்து செந்தீயில் மூழ்கியவன் சின்னசாமி.

அவனை நாளும் போற்றுவோம்.

 தமிழ்மொழியைக் காப்பாற்றுவதற்காக தம் உயிரையும் கொடுக்கின்ற உரம் வாய்ந்த மறவர்கள் இருக்கிறார்கள். எனவே தமிழ்மொழியை அழிக்கின்ற கீழான செயலை மறந்து செய்ய வேண்டாம். தமிழ்மொழி காக்க ஏரியில் மூழ்கி உயிர் விடும் நிலையை இனியும் நீட்டிக்க வேண்டாம்.

இந்தி மொழியின் முதன்மை எம் தமிழ் மொழியை அழிக்கும் செயல் என்பதை அறியாதார் யார்? நல்லுயிர் கொடுத்து நம் தமிழ் காக்க வலிமை உடையோர் வருமுன் தமிழை மாய்க்கும் கொடிய செயலை நீக்குங்கள்.

தீந்தமிழ் மறவன் சின்னச்சாமியை நினைப்போம். அவனைப் போல தமிழ்மொழிக்குத் தொண்டு செய்ய முந்துங்கள்.

‘நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க

 வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும்

 ………………………………………

 ………………………………………

 ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே.’123

என்று கவிஞர் போர்ப்பரணி பாடுகிறார். தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு என்பதை எண்ணி மொழிநலம் காத்தல் தமிழ் மக்களின் கடமை என்கிறார்.

‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூல், தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த காமராசரைப் பற்றி எழுதப்பட்டதாகும். காமராசர் காங்கிரசு இயக்கத்தில் பெரிய தலைவராக விளங்கினார். இலக்குவனாரோ தன் மதிப்பு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு பெரியாரின் அன்புக்குரியவராய் விளங்கினார். 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருவல்லிபுத்தூர் பாராளுமன்றத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். காமராசருக்கு எதிராக அறிவியல் வல்லுநர் கோ.து.நாயுடு தன்மதிப்பு இயக்கத்தின் சார்பாகப் போட்டியிட்டார். இலக்குவனார் கோ.து. நாயுடுவை ஆதரித்துப் பணி செய்தார். தேர்தல் முடிவு வந்த பின்னர், காமராசர் நாடாருக்கு எதிராக வேலை செய்தார் என்பதற்காக காங்கிரசு நாடார்களின் தூண்டுதலால் விருதுநகர் செந்திற்குமார நாடார் கல்லூரியினின்றும் நீக்கப்பட்டார். பின் புதுக்கோட்டை, ஈரோடு முதலிய இடங்களில் பணியாற்றிய பின் நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் பணி செய்தார். அப்பொழு (1956) எழுதப்பட்டது. ‘கருமவீரர் காமராசர்’ என்னும் நூல். அந்நூலின் முன்னுரையில் எழுதப்பட்ட கவிதைதான் ‘சங்கநிதி பதுமநிதி’ என்னும் செய்யுளை ஒட்டிப்பாடப் பெற்றதாகும் இக்கவிதை. முதல் பன்னிரண்டு சீர் திருநாவுக்கரசருடையது. அப்படியே எடுத்தாண்டுள்ளார். பிற்பகுதி இலக்குவனாரால் பாடப்பட்டுள்ளது.

   இந்நூலின் அறிமுக உரையில் கவிஞர் இவ்வாறு கூறுகிறார்.

‘தமிழ் எமது உயிர்; தமிழின் உயர்வே தமிழ் நாட்டின் உயர்வு. தமிழ் நாட்டின் தமிழுக்குத் தான் முதன்மை உண்டு. தமிழ்நாடு ஏனைய நாடுகள் போல் உரிமையாட்சி பெற்றுத் தமிழர்களால் ஆளப்பட வேண்டும்……… யாம் ஒரு புலவர்; எழுத்தாளர். ஆகவே யாம் யாவர்க்கும் பொதுவான நிலையில் உள்ளோம். கட்சி காரணமாக விருப்போ பெறுப்போ கொள்ள வேண்டிய நிலையில் இல்லோம். ஆனால் தமிழ்ப் பகைவர் எமது பகைவராவர்; தமிழ் நண்பர் எமது நண்பராவர்.’124

மேற்குறித்த கருத்துக்களின் விளக்கமாய் அமைந்ததே ‘சங்கநிதி பதுமநிதி’ என்னும் கவிதையாகும்.

‘சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து

 தரணியொடு வானாளத் தருவ ரேனும்

 …………………………………..

 …………………………………..

 …………………………………..

 …………………………………..

 தங்குபுகழ் செந்தமிழ்க்கோர் அன்ப ராகில்

 அவர்கண்டீர் யாம்வணங்கும் கடவு ளரே’ 125

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், ‘செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்’ குறள்நெறி, மதுரை 1-10-1964.
  2. சி. இலக்குவனார், கருமவீரர் காமராசர் ‘முன்னுரை’ நாஞ்சில் புத்தகமான, நாகர்கோவில் 1956, ப-4.
  3. சி. இலக்குவனார், கருமவீரர் காமராசர், முன்னுரை, ப-4, அ-ள் 1-4.

 

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

பெயர்-ம.இராமச்சந்திரன் _peyar_ma.ramachnathiran