(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி)


thalaippu_ilakkuvanarkavithaigal_oaraayvu_ma.rakachanthiran

6

  1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார்.

  மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில் வார இதழ் ஒன்றையும் நடத்தினார். கவிதைகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதினார். இங்குப் பணி செய்தபோது தான் இலக்குவனார்க்கு முனைவர்(டாக்டர்) பட்டம் கிடைத்தது. இலக்குவனார் எழுதிய, ‘Tholkappiam in English with critical studies’’ என்ற ஆய்வு நூலுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் 1964ஆம் ஆண்டு முனைவர்(டாக்டர்) பட்டம் அளித்தது. இதற்கு முன் எத்துணையோ தமிழ்ப் பேராசிரியர் முனைவர்(டாக்டர்) பட்டம் பெற்றிருப்பினும் இலக்குவனாரைத்தான் தமிழ் உலகம் பெரிதும் பாராட்டிச் சிறப்பித்தது. காரணம் மற்றவர் எல்லாம் முனைவர்(டாக்டர்) பட்டம் பெற்ற பின்னர் தமிழக மக்களுக்கு அறிமுக மாயினார். இலக்குவனாரோ தமிழக மக்களுக்கு அறிமுகமான பின்னர் முனைவர்(டாக்டர்) பட்டம் பெற்றார். மேலும் இந்தி மொழித் திணிப்பை பெரிதும் எதிர்த்தார். 1965 பிப்பிரவரியில் கைது செய்யப்பட்டார். தழிழ்க் காப்புக் கழகம் மதுரையில் தோற்றுவித்தார். உயர் கல்வி அனைத்தும் தமிழ் வழியில் (Medium of Instruction) பயிற்றுவிக்கப்படுதல் வேண்டும் என்றார். அதன் பொருட்டு நடைச் செலவு மேற் கொண்டார். மீண்டும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ச் சிறை செய்யப்பட்டார். தமிழக வரலாற்றிலேயே மொழிப்போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் இவர் ஒருவரே எல்லாம்.

  1965 ஆம் ஆண்டு இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் மாணவர்களும் பொதுமக்களும் அரசியல் இயக்கத்தினரும் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். திருச்சியில் சின்னச்சாமி என்பவர் அறப்போராட்டத்தின் வழியில் தம்மீது கன்னெய்(பெட்ரோல்) ஊற்றி தீக்கிரையானார். இத்துயர நிகழ்த்தி குறித்துக் கவிஞர் சின்னச்சாமி மீது கவிதை ஒன்று பாடினார். அக்கவிதை 1-2-1964 ‘குறள் நெறி’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

  ‘இந்தி எதிர்ப்புப்போரின் தளபதி’ எனக் குற்றஞ்சாட்டிஇலக்குவனார், சிறை செய்யப்பட்டபின் அரசின் தூண்டுதலால் தியாகராசர் கல்லூரி நிருவாகம் இவரைப் பணியினின்றும் நீக்கியது.

  பணியினின்று நீக்கப் பெற்ற பின்னர் ‘குறள்நெறி’ வார இதழை ‘நாளிதழாக’ வெளியிட்டு வந்தார். பின்னர் பொருள் முட்டுப் பாட்டால் ‘குறள் நெறி’ நாளிதழைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. 1965ஆம் ஆண்டு முதல் 1967 மே மாதம் வரை ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கல்லூரிப் பணி ஏதும் இல்லாமல் பொதுப்பணியில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

 மதுரை தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய போது ‘குறள்நெறி’ இதழில் ஒவ்வொரு பொங்கலன்றும் ‘பொங்கல் வாழ்த்துக் கவிதை’ படைத்துள்ளார்.

  1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. 1967 மார்ச்சுத் திங்கள் 6ஆம் நாள் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

  அண்ணா அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின் இலக்குவனார் அவர்களுக்கு, சென்னை மாநிலக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினை நல்கினார். ஓராண்டுக் காலம் மாநிலக் கல்லூரியில் செவ்வனே பணி செய்தார்.

  பின் 1968 ஆம் ஆண்டு சூன் மாதம் ஐதராபாத்தில் உள்ள உசுமானியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணி செய்ய தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டார். ஐதராபாத்திலும் ஓராண்டு மட்டுமே பணி ஆற்றினார். அப்பொழுது மருத்துவத்திற்காக அண்ணா அமெரிக்கா சென்றிருந்தார். மருத்துவம் முடிந்து நலம் பெற்று திரும்பி வரும் பொருட்டு, ‘அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து’18 என்னும் கவிதையைப் பாடினார். 1969இல் மீண்டும் நாகர்கோவில் தெ.தி.இந்துக் கல்லூரியில் முதல்வர் பணி செய்ய அழைக்கவே முதல்வராகப் பணியாற்றினார். முதல்வர் பதவியுடன் 1970 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கல்லூரிப் பணியினின்றும் ஓய்வு பெற்றார்.

  மூன்றாண்டுகள் மீண்டும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுத், தொண்டாற்றி இறுதியில் 1973ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் மூன்றாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், தொல்காப்பிய ஆராய்ச்சி, வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 1961.
  1. சி. இலக்குவனார், பழந்தமிழ், வள்ளுவர் பதிப்பகம், நான்காம் பதிப்பு, புதுக்கோட்டை, 1980.
  2. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து. குறள்நெறி வெளியீடு, மதுரை 1968.

(தொடரும்)

ஆய்வாளர் ம. இராமச்சந்திரன்