இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!
மக்கள் உள்ளங்களில் வாழும்
தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!
நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம். என் செய்வது? ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை’ (திருவள்ளுவர், திருக்குறள் 336) என்பதுதானே உலக வழக்கு. சிங்கப்பூரில் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அவரின் மறைவிற்காகக் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர். ‘அகரமுதல’ இதழும் அவர் மறைவிற்காக அஞ்சலி செலுத்துகிறது; அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் நாட்டு மக்களுக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறது.
“எதுவுமே இல்லையே இந்நாட்டில்” எனக் கவலைப்படும் நிலையில் இருந்தநாட்டை “என்னதான் இல்லை இந்த நாட்டில்” என வியக்கும்வண்ணம் மாற்றியவர் மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ. இவரைத் தலைவர்களுள் முதல்வன், வரலாற்றின் தவப்புதல்வன், உண்மையான நாயகன், சிங்கப்பூர்ச் சிற்பி, சிங்கப்பூரின் தந்தை எனப் பலவகைகளிலும் ஊடகங்களும் மக்களும் பாராட்டுவதே இவரைப்பற்றிய சிறப்பை அறியாதவருக்கு உணர்த்தும். ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற மலேசியாவுடன் இணைந்து போராடி வென்றவர்; இணைந்தே நிற்க விழைந்தவர்; ஆனால், ஒரு வளமும் இல்லா சிங்கப்பூர் தம் நாட்டுடன் இணைந்து நிற்பதை மலேசியர்கள் சுமையாகக் கருதியதால், கேளாமலே கிடைத்தது விடுதலை. ஆம் திருவள்ளுவர் ஆண்டு 1996, ஆவணி 25 / 1965 ஆகத்து 9 இல் தனிநாடானது சிங்கப்பூர்! சிங்கப்பூரில் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தாலும் நாட்டை வழிநடத்திச் செல்லும் பொறுப்பில் இருந்த இலீ, அதிர்ச்சியில் உறைந்தார். எனினும் மனம் தளரவில்லை. நீரின் நடுவே இருந்தும் குடி நீர் இல்லா நாடு, இயற்கை வளமில்லாமல் பிற நாட்டையே நம்பி இருக்க வேண்டிய சூழலில் உள்ள நாடு என்றெல்லாம் இல்லாமை நிறைந்த நாடு, என்னும் நிலை போக்க உறுதி கொண்டார்! கடுமையான முயற்சியாலும் ‘அடக்குமுறைக் காவலன்’ என ஒரு சாராரிடம் அவப்பெயர் பெற்றாலும் கவலைப்படாமலும் சிங்கப்பூரை உலகு போற்றும் நாடாக மாற்றினார். எனவேதான் உலக நாடுகள் அவரைப் போற்றுகின்றன.
“கசப்பான உண்மைகளிலிருந்து விலகிச் செல்லாமல் தமது தந்தை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார்; அவர் ஒரு போராளி” என்று இலீ குவான்இயூவின் இறுதி நிகழ்வில் அவரது மகனும் தற்போதைய தலைமையாளருமான இலீ சியென் உலூங்கு (Lee-Hsien-Loong) தெரிவித்தது சிங்கப்பூர் மக்கள் அனைவரின் புகழாரம் ஆகும். 1959இல் தம்முடைய மக்கள் செயல்கட்சியின்(Peoples Action Party) மூலம் தேர்தலில் வென்று முதல் தலைமையாளராக – தலைமையமைச்சராக – இவர் பொறுப்பேற்றதிலிருந்து, சிங்கப்பூர் தனிநாடானதும் தொடர்ந்து இப் பொறுப்பினை வகித்து 31 ஆண்டுகள் – 1990 வரை – நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தலைவர். வேறுவகையில் கூறுவதானால், பிரித்தானியப் பேரரசின் சார்நிலைத் தன்னாட்சி நாடாக இருந்த பொழுது 1959 இல் தலைமையாளராகப் பொறுப்பேற்றார்; ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்று மலேசியாவின் கூட்டாட்சியில் தனி மாநிலமாக மாறியபின்னர் 1963இலிருந்தும், மலேசியாவில் இருந்து பிரிக்கப்பட்டுத் தனி நாடாக மாறியபின்னர் 1965 இலிருந்தும் என இவரே தொடர்ந்து தலைமையாளராக(தலைமையமைச்சராக)ப் பொறுப்பில் இருந்தமை இவரது செல்வாக்கையும் இவர் உழைப்பின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் காட்டும்.
1990 இலிருந்து 2004 வரை தகைநிலை மூத்த அமைச்சர் (Emeritus Senior Minister) என்ற பொறுப்பிலும் அதன் பின்னர் நெறியுரை அமைச்சர் அல்லது மதியுரைஞர் (Minister Mentor) என்ற பொறுப்பிலிருந்தும் ஆட்சிக்கு வழி காட்டினார். 2011 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவரின் மக்கள் செயல்கட்சி முதன்மையான 6 தொகுதிகளை இழந்து சறுக்கலைக் கண்டது. வெற்றிபெற்றால் தன்னால்தான் என்றும் தோல்வி என்றால் பிறர் மூலம் வேறு காரணங்களும் கூறும் நம்நாட்டுத் தலைவரல்லர் இலீ. எனவே, தோல்வியை ஆராய்ந்தார். இளைய மன்பதை எதிர்பார்ப்பதற்கேற்ப மாற வேண்டும் அல்லது நாம் இறங்க வேண்டும் என்ற முடிவிற்கு வந்தார். எனவே, மதியுரைஞர் பொறுப்பில் இருந்து விலகி அரசியலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். நம் நாட்டில் ‘காமராசர் திட்டம்’ (‘K’ plan) எனப்படும் பெருந்தலைவர் காமராசர் அறிவித்துப் பதவி விலகியதுபோன்ற திட்டம்தான் இதுவும். ஆனால், இங்கே வட இந்தியத் தலைவர்கள் காமராசரை ஓரங்கட்ட இதைப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, பிறர் தொண்டு கிழமாக மடியும் வரை பொறுப்புகளிலிருந்து விலகவில்லை. ஆனால், சிங்கப்பூர் விடிவெள்ளி இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டார். ஆனால், மக்கள் உள்ளங்களில் அவருக்கிருந்த இடம் நிலைத்து நின்றது.
உலகத்தலைவர்கள் மிகச்சிறு நாட்டின் தலைவரான அவரது மறைவிற்கு நேரில் வரக்காரணம் என்ன? உலக வரைபடத்தில் சிறுபுள்ளியாக இருந்தாலும் பெரும் புள்ளியர் வாழும் நாடாக மாற்றியதுதானே! ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என மெய்ப்பித்துக் காட்டிய திறம்தானே!
ஏறக்குறைய ‘இம்மென்றால் சிறைவாசம்’ என்பதுபோன்ற நிலையைத்தான் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தினார் இலீ. இதனால் மக்களாட்சி நேயர்களின் எதிர்ப்பிற்கும் ஆளாகியுள்ளார். இருப்பினும் நாட்டின் முன்னேற்றத்திற்காகத்தான் இந்நிலைப்பாடு மேற்கொண்டிருந்தார் எனப் பெரும்பாலான மக்கள் நம்பியதால்தான் இன்றும் அவர் அனைவர் உள்ளங்களிலும் வாழ்கிறார்.
கோவலனின் மூதாதையர் வாழ்ந்த நிலப்பகுதி சிங்கப்பூர் என்பர். அதன் பெயரே தமிழோடு அதற்குள்ள தொடர்பை நமக்கு உணர்த்தும். இருப்பினும் புலம் பெயர்ந்து வந்த மக்களின் உழைப்பால்தான் சிங்கப்பூர் முன்னேறியது என்ற உண்மையை உலகறியச் சொன்ன தலைவர் இலீயின் உழைப்பைப் போற்றும் எண்ணம்தான் தமிழுக்கும் தமிழர்க்கும் அங்கே வாழ்வளித்தது. உண்மையில் இவர் மக்களாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்றுதான் கூறவேண்டும். எனவேதான், சிங்கப்பூரில் தமிழை ஆட்சிமொழியாக ஆக்கினார். இந்திய அரசாங்கம் தமிழர்களை இந்தியர்களாகக் காட்டி இந்தியைத் திணிக்க முயன்றது. “எங்களுக்கு இந்தியர்கள் என்றால் தமிழர்கள்தாம். எனவே, தமிழர்களின் தாய்மொழியான தமிழ்தான் ஆட்சிமொழி” என்றார். “நாங்களும்தானே இங்கே வாழ்கிறோம்” என மலையாளிகள் கேட்ட பொழுது, “நீங்கள் வாழ்கிறீர்கள். தமிழர்கள் எங்களுக்காக வீழ்ந்தவர்கள். தங்களை இந்நாட்டின் உயர்விற்காக ஒப்படைத்தவர்கள். எனவே, அவர்களின் தமிழ்மொழிதான் ஆட்சி மொழி” என்றார். சீன மாண்டரின், மலேயா, ஆங்கிலம் ஆகியவற்றுடன் தமிழும் சிங்கப்பூரில் ஆட்சிமொழியானது இவரின் உறுதியான முடிவால்தான். இலங்கையில் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளான பொழுதும் சிங்களம் ஒன்றே ஆட்சி மொழி என்று நடைமுறைப்படுத்திய பொழுதும் கண்டித்தவர். ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைக்காககப்போராடுபவர்கள் எனக்கூறித் தமிழ் ஈழ உரிமையை ஆதரித்து என்றேனும் தமிழ் ஈழம் தனிநாடாகும் என்று அறிவித்தவரும் தமிழ்நலத்தலைவர் இலீ அவர்களே!
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”
என்னும் வள்ளுவம் (திருவள்ளுவர், திருக்குறள் 131) வழி வாழ்ந்தவர்,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் 50)
என்னும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.
இவரது இறுதிவணக்க நிகழ்வில் பங்கேற்ற தலைவர்கள், இந்தியாவிலும் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் தமிழை ஆட்சிமொழியாக்கட்டும்! தமிழர் நிலையை உயர்த்தட்டும்! தமிழ் ஈழத்தைத் தனிநாடாக ஏற்கட்டும்!
மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!
சிங்கப்பூர், மக்கள் உரிமைகளை மதிக்கும் நாடாக என்றும் திகழட்டும்!
வணக்கத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
Leave a Reply