இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
இளையராசா இசைத்த பாடல்களை
மேடை தோறும் பாட வேண்டுமா?
அல்லது
அடியோடு புறக்கணிக்க வேண்டுமா?
இளைஞர்களின் நா இந்திப்பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த பொழுது – திரும்பிய பக்கமெல்லாம் இந்தித்திரைப்பாடல்களே கேட்டுக் கொண்டிருந்த பொழுது – ஒட்டு மொத்த தமிழ்உலகையும் தன் இசையின்பால் ஈர்த்தவர் இளையராசா. அதற்காகத் தமிழுலகம் என்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.
இளையராசா , தமிழ்ப்பற்றால் இந்தியிசையை ஓட்டிவிட்டார் என்று கூற முடியாது. இந்தி மெட்டுகளைத் தழுவாமல் தனக்கு எது முடியுமோ அதனைத் தந்தார். அது நாட்டுப்புற இசை. காலங்காலமாக நிலைத்து நிற்கும் நாட்டுப்புற இசை மக்கள் உணர்வில் கலந்திருந்தது. எனவே, நாட்டுப்புறஇசையின் தாக்கத்தால் உருவான இளையராசா இசை மக்களைக் கட்டிப்போட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.
இளையராசா கடந்த ஓராண்டாகவே தன் பாடல்களுக்கான காப்புரிமைபற்றிப் பேசி வருகிறார். பாடகர்களுக்கும் ஊடகங்களுக்கும் இசைவுபெறாமல் பாடத் தடையும் தெரிவித்து வருகிறார். இப்பொழுது தன் அருமை நண்பர்களுள் ஒருவரான (S.P.B.என அறியப்படும்) சி.ப.பாலசுப்பிரமணியம் பாடுவதற்குத் தடைவிதித்ததால் இதுபற்றிய பேச்சு தீவிரமாக எழுந்துள்ளது.
தமிழ்உணர்வாளர்களுக்கு இளையராசாமீது மதிப்பு இருந்தாலும் இளையராசாவிற்குத் தமிழ்மீது போதிய பற்று இருப்பதாகத் தெரியவில்லை; தன்னை ஆரியத்தாசனாகவே காட்டிக்கொள்கிறார். பெரியார் படத்திற்கு இசையமைக்கமாட்டேன் என்று சொன்னது கூட அதற்குச் சான்றாகும். சமற்கிருத பாடல் வரிகளுடன் தமிழ்ப்பாடல்கள் தொடங்குவதும் மற்றொரு சான்றாகும்.
பொதுவாகக் கலைஞர்கள், தங்களுக்கு உதவியவர்கள், நண்பர்கள் என்ற அளவில் அல்லது வேறு பரிவின் அடிப்படையில் சிலருக்குப் பணம் வாங்காமல் அல்லது குறைவான கட்டணம் வாங்கித் தங்கள் பணியை அளிப்பதுண்டு. அதுபோல் இளையராசாவும் சில உதவிகள் புரிந்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் பொதுவாக அவர் மக்களுக்கு உற்றுழி உதவியதாகத் தெரியவில்லை.
20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் அவர் படித்த தொடக்கப்பள்ளிக்குச் செல்ல நேர்ந்தது. கட்டடவசதியின்றி, இருந்த கட்டடமும் இடிந்த நிலையில் இருந்ததைப் பார்த்து நான் தலைமை ஆசிரியரிடம் மாவட்ட ஆட்சியர் மூலம் உடனே சீரமைப்புப் பணிகளை ஆற்ற ஆவன செய்யுமாறு வேண்டினேன். அரசு உதவி கிடைப்பதற்குக் காலத்தாழ்ச்சி ஆகும் என்றனர். அதற்காக முறையிடாமல் இருப்பது தவறு என்ற நான், முன்னாள் மாணாக்கர்கள் மூலமும் உதவி பெறலாமே என்றேன். இளையராசாவே இங்கே படித்தவர்தான். “திருவரங்கத்திற்குப் பெருந்தொகை கொடுத்தும் கோபுரம் உயரவில்லை. என் வீட்டு மாடிகளைவிடப் பூசாரிகளின் மாடிகள் தான் உயர்கின்றன.” என்பதுபோல் பேசுகின்றாரே தவிரக் கோயிலாகக் கருத வேண்டிய தான் படித்த பள்ளிநலன் குறித்துக் கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்பட்டனர். இத்தகைய அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்துக் கவலைப்படாமல் அவரது இசைவாழ்வு குறித்துமகிழ்கிறது தமிழ் உள்ளங்கள்.
ஆனால், இசையமைப்பிற்குக் காப்புரிமை கேட்கும்பொழுது அனைவருக்குமே அவரது புகழுருவில் கீறல் விழுந்துவிட்டதாக எண்ணுகின்றனர்.
இளையராசா செய்தது சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால், அவர் காப்புரிமை கேட்டதும் தவறு. இவர் இசையமைத்த பாடல்களுக்கு அவர்மட்டுமே உரியவர் என்பதுபோல் காப்புரிமை வழங்கப்பட்டதும் தவறு. அவர் பாடலியற்றியவர் முதலானவர்களுக்குத் தான் பெறும் பணத்தில் பங்கு பெறுவதாகக் கூறினாலும் அது தவறே.
பாடல் உருவாவதற்குப் பெரும்பாலும் காரணம் கதைக்களமே! கதையாசிரியர், இயக்குநர் ஆகியோர் விளக்கும் காட்சி அமைப்பிற்கும் வேண்டும் உணர்ச்சிச்சூழலுக்கும் ஏற்பவே பாடல் அமைகிறது. மெட்டுக்குப் பாட்டு என்றாலும் கதைச்சூழலுக்கேற்பவே உணர்ச்சி, சினம், காதல், ஏமாற்றம், தன்னம்பிக்கை முதலான உணர்வுகளை எதிரொலிக்கும் மெட்டுகளை அமைக்கின்றனர். எனவே, இசையமைப்புப் பாடல்களுக்கு இசையமைப்பாளர் உரிமை கோருவது முற்றிலும் தவறு.
வெறும் கருவியிசையை மட்டும் விரும்பும் பொழுதும் அவ்வி்சை உணர்த்தும் பாடல் வரிகளின் ஈடுபாட்டால்தான் விருப்பம் ஏற்படுகின்றது. ஒரே மெட்டில் வெவ்வேறு மொழிப்பாடல்கள் உள்ளன. அதற்கான இசையை மீட்டும் பொழுது ஒவ்வொருவரும் தானறிந்த பாடலை உணர்ந்தே இசையை விரும்புகிறார்.
இது தொடர்பில் நான் உணர்ந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகின்றேன். நான் 1990களில் மழலைப்பாடல்களுக்கும் திரைப்பாடல்களுக்கும் ஒத்த மெட்டுகளில் தமிழ்ப்பாடல்கள் அளித்து இசையாசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்து வந்துள்ளேன். தமிழ்ப்பாடல்கள் பாடுநரும் கருவியிசைகளில் தமிழ் ஒலிக்காமையை உணரமாட்டார்கள். எனவே, கருவியிசைக்கான தமிழ்ப்பாடல்களையும் அளித்துள்ளேன். சென்னையில் விசையிசை (Key-board)ஆசிரியர் உரூபன் துணையுடன் சுரங்களையும் குறிப்பிட்டுச் சிறுவர் சிறுமியருக்கு வழங்கியுள்ளேன். தமிழ்நாடுசவகர் சிறுவர்மன்றம் மூலம் புதுதில்லித் தமிழ்ச்சங்கத்தில் இவற்றுக்கான பயிற்சியும் அளிக்கச் செய்தேன். ஆசிரியர் உரூபன், அயல்மொழி மாணவர்களுக்கு அப்பொழுது மாணவியாக இருந்த எங்கள் மகள் தி. ஈழமலர் மூலம் பயிற்சி அளித்தார். “கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்” என்ற பழைய புகழ்பெற்ற பாடல் மெட்டில் “எண்ண எண்ண இலக்கியம் இனிமை தரும்” என்ற பாடலை நான் மாணவர்கள் பாட அளித்திருந்தேன். இந்தத்தமிழ்ப்பாடலைக் கருவியிசை மூலம் கற்றுத் தந்த பொழுது பிற மொழி மாணவர்கள் ஆர்வமுடன் கற்றார்கள். அதன் காரணம் தமிழ் மீதுள்ள ஆர்வமல்ல; அதே பாடல் மெட்டில் தெலுங்கு, இந்தி முதலான பிற மொழிகளிலும் பாடல்கள் இருந்தமையும் அவற்றை அந்தந்த மொழி மாணவர்கள் அறிந்திருந்ததும்தான் காரணம். தங்களுக்குத் தெரிந்த பாடல் மெட்டில் இருந்ததும் தங்கள் மொழிப்பாடலை உள்வாங்கிக் கருவியிசையை வாசிக்கக் கற்றார்கள். கருவிகளில் ஒரு மொழிப்பாடலை மீட்டினாலும் அதே போல் பிற மொழிகளில் பாடல்கள் இருப்பின் அந்தந்த மொழி அறிந்தவர்கள், தாங்களறிந்த பாடல் வடிவில்தான் அந்த இசையைக்கேட்பர் என்பதே உண்மை.
எனவே, வெறும் கருவியிசை மூலம் மக்களைக்கவர முடியும் என எண்ணுவது தவறு. இனிய இசை மூலம் அதற்கான வரிகளையே மக்கள் எண்ணுகின்றனர். “நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்” எனக் கருவி ஒன்றின் மூலம் இசைத்தால் அதன் பாடல் வரிகளையும் அவற்றுக்கான காட்சியில் மக்கள் திலகம் கையை உயர்த்திச் சாட்டையைச் சுழற்றுவதையுமே மக்கள் மனக்கண்களில் காண்கின்றனர். எனவே, இசை ஒன்றுமட்டுமே மக்களை ஈர்ப்பதாக எண்ணுவது மிகவும் தவறு.
அது மட்டுமல்லாமல், இளையராசாவின் பாடல்கள் பலவும் நாட்டுப்புற மெட்டுகளில் அமைந்தவை. மரபு வழியில் காலம் காலமாக வந்த அந்தப்பாடலின் இசைகளுக்கு இளையராசா எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?
பிறமொழிப்படங்களைத் தழுவிப் படங்கள் எடுக்கும் பொழுது மூலமொழிப்படப்பாடல் மெட்டுகளிலேயே பாடல்களை அமைக்கின்றனர். அந்தப்பாடலிசைகளுக்கு மூல உரியைமாளர் யார்? இரவல் பெற்றுத் தந்தவர் உரிமையாளராக முடியுமா? இவைபோல்தான் வழி வழி வரும் இசையைத் தழுவி எடுக்கும் பொழுதும் உரிமை கொண்டாட முடியாது.
பாடல்களுக்கு வாயசைத்தவர்களுக்கு அல்லது பின்னணி பாடியவர்களுக்கு அல்லது இசையமைத்தவர்களுக்கு அல்லது காட்சியமைத்த இயக்குநர்களுக்கு அல்லது பாடலாசிரியர்களுக்கு எனப் புகழ்போய்ச் சேரும். அதனாலேயே அவர்கள் அந்தப்பாடலுக்கு முழு உரிமை கொண்டாட முடியாது. அதுபோல் இளையராசாவும் தான் இசை யமைத்த பாடல்களுக்குத் தன்னை முற்றுரிமையாளராகக் கருதுவதும் தவறு.
எனவே, இளையராசாவிற்கு வழங்கப்பட்ட காப்புரிமையைத் திரும்பப் பெறுவதே சரியாகும். அதுவரை, மேடைதோறும் இளையராசா இசையமைத்த பாடல்களைப் பாடலாமா? அல்லது அடியோடு அவரதுபாடல்களைப் புறக்கணிக்கலாமா ? என முடிவெடுத்து, அதனைப் பின்பற்றி, அவரிடம் மன மாற்றம் ஏற்படுத்த நாம் முயல்வோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 178, பங்குனி 06 , 2048 / மார்ச்சு 19, 2017
//இளையராசாவின் பாடல்கள் பலவும் நாட்டுப்புற மெட்டுகளில் அமைந்தவை. மரபு வழியில் காலம் காலமாக வந்த அந்தப்பாடலின் இசைகளுக்கு இளையராசா எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?// – யாருமே இதுவரை கேட்காத, மிக மிக மிக இன்றியமையாக் கேள்வி! இளையராசாவிடம் இந்தக் கேள்வி நேரிடையாகக் கேட்கப்பட வேண்டும்!