உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் –
உரைநூல்களின் பல்வகைப் பயன்கள்
- உரையாசிரியர்கள், தாம் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமைச் செல்வத்தை எல்லாம் தம் உரைகளில் கொட்டி நிரப்புவதால் நாம் அறிவுக்களஞ்சியத்தினுள் எளிதில் புகுந்து இன்புமுற முடிகிறது.
- சில பாடல்களுக்கு உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும் நயமிக்க விளக்கமும் எழுதியிருப்பதால் அவை இலக்கியப் பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன. விளங்காமல் இருந்த – ஐயத்திற்கு இடமாக இருந்த எத்தனையோ செய்திகள் வெளிப்படுகின்றன.
- காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் இயல்பு, தனித்தன்மை ஆகியவற்றை உரை கொண்டே நாம் அறிய முடிகின்றது.
- தமிழ் மொழியின் அமைப்பு, காலந்தோறும் எவ்வாறு மாறுதல் அடைந்து வந்துள்ளது என்பதையும், தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை, அரசியல் மாறுதல், பழக்க வழக்கம் ஆகியவற்றையும் உரைகள் உணர்த்துகின்றன.
- கிடைத்தற்கரிய இலக்கியச் சுவை மிகுந்த தனிப்பாடல்களைத் திரட்டி உரைகளே நமக்கு உதவுகின்றன.
- ஏடுகளில் இருந்த பழைய நூல்களைப் பதித்தவர்களுக்கு மூலத்தை அறிய உரைகளே துணைபுரிந்து வந்தன. “உரையைக் கொண்டு மூலத்தையும் மூலத்தைக் கொண்டு உரையையும் பல சமயங்களில் அறிந்து கொண்டதுண்டு” (உ.வே.சா.: சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் பக்கம்.174)
- உரையாசிரியர்கள் மேற்கோளாகத் தரும் பாடல்கள் மூல நூல்களில் ஏற்படும் ஐயத்தைப் போக்கவும் நல்ல பாட வேறுபாடு அறிந்து பாடல்களின் பொருளைத் துணியவும் பயன்படுகின்றன.
- சில பழைய நூல்களில் மறைந்தும் குறைந்தும் உள்ள பகுதிகளுக்கு உரிய பாடல்களை உரைகளே நமக்குத் தந்துள்ளன. தொல்காப்பியம், குறுந்தொகை, திருக்குறள், சிந்தாமணி, நன்னூல் ஆகியநூல்களின் பழைய அமைப்பு, அளவு, உட்பிரிவு ஆகியவை பற்றி உரைகள் நமக்கு அறிவிக்கின்றன.
- மறைந்து போன தமிழ் நூல்களின் பெயர், அவற்றை இயற்றிய புலவர்களின் பெயர், அந்நூல்களின் சில பகுதிகள் ஆகியவற்றைப் பேணிக்காத்துவருபவை உரைகளேயாகும்.
-ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்: பக்கம்.51-52
Leave a Reply