உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும்

உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை

    – அணிந்துரை

வெல்க தமிழ்!

  பாவலர் வேணு.குணசேகரன் அவர்கள் இயற்றிய திருத்தமிழ்ப்பாவை  உங்கள் கைகளில் தவழ்கிறது.

  திருமாலைத் தொழுது ஏத்தும் இறைபடியார்க்குத் திருப்பாவை எத்துணைச் சிறப்பு வாய்ந்ததோ, சிவபெருமானை வழுத்தும் இறையன்பர்க்குத் திருவெம்பாவை எவ்வளவு சிறப்பு மிக்கதோ, அவ்வளவு சிறப்பும் சீர்மையும் கொண்டதாகத் தமிழன்பர் அனைவரும் கொண்டாட வேண்டிய நூல் இந்தத் ’திருத்தமிழ்ப்பாவை’ என்பதனை இந்நூல் கற்று முடிந்தவுடன் நீங்கள் உணர்வீர்கள்.

  இன்றைய காலச்சூழல் ஒரு விந்தையான சூழல் என்பதனைத் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் நன்கு உணர்வர். அரசு தமிழன் வளர்ச்சிக்காக ஆவன செய்துவந்தாலும், தமிழ்மக்கள் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், கடன்வாங்கியாவது பெருந்தொகை கொடுத்துச் சேர்த்து வரும் வழக்கத்தைக் கண்ணுறுகிறோம்.

  மையத்தில் இந்தி ஆட்சிமொழி திறம்படச் செயலாற்றி வருவதையும், மாநிலத்தில் தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசு பெரும்பாடுபட வேண்டியுள்ளதனையும் பார்க்கிறோம்.

  செம்மொழி எனும் தகுதிநிலை தமிழுக்கு உள்ளது என்பதனை மைய அரசு தனது ஆணையின் மூலம் அறிவித்து இதற்கென ஒரு ’தனி இயக்ககம்’ மைசூரில் நிறுவப்பட்ட சூழலுக்கேற்பத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளாததனையும், இன்னும் சங்க இலக்கியங்களையும், தொல்காப்பியத்தையும் கண்டு மனம்நொந்து வருவோரில் நானும் ஒருவன்.

  இச்சூழலில் தமிழில் இறைமையைக் கண்ட, தமிழையே இறையாற்றலாகக் கொண்ட பாவேந்தர் வழிநின்று, பாவலர் வேணு. குணசேகரன் இந்நூலை வழங்கியுள்ளார். பழந்தமிழர் இயற்கைமொழியில் இறைமையைக் கண்டனர். தாய்மையை இறைமையாய்ப் போற்றினர்.

  பாவேந்தர் தமிழைத் தாயாகவும் இயற்கைப் பொருள்களுள் ஒன்றாகவும் போற்றியதுடன் இறைமையாற்றலாகவும் போற்றினார்; “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்” என்றார். அப் பாவேந்தர் வழிநின்று வேணு. குணசேகரன் தமிழ் உணர்வு பொதுளத் தமிழ் இறைமையைப் போற்றித் ‘திருத்தமிழ்ப்பாவை’ பாடியுள்ளார். இவற்றையும் பாசுரங்கள் என்றே வழங்குகிறார். தமிழ்வணக்கம், அவையடக்கம், ஆகியவற்றுடன் தொடங்கும் இந்நூல் முப்பது பாசுரங்களைக் கொண்டுள்ளது.

நிலவுவெளி அண்டம் நிரப்ப,ஊற் றாகிப்

 பலசொல் விரிவிரியப் பாங்குடனே தொன்மை

 வலிமையொடு மூப்பின்றி வாழும் இளையாள்

                                என்று தமிழ்த்தாயைப் போற்றுகிறார்.

நிலவு, விண்வெளி, அண்டம் ஆகியவற்றை நிரப்புகின்ற விரிவுமிக்க பெருமை கொண்டது தமிழ் என்னும் கருத்தும் கற்பனையும் இப்பாவலரின் தனிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டு எனலாம். தொல்காப்பியத்தின் முதன்மையையும் பெருமையையும் சுட்டும் பாடல் ஒன்றையும் யாத்தளித்துள்ளார்.

‘செந்தமிழின் தண்டெலும்பு தொல்காப்பியப் பெருநூல் என்னும் பாவலரின் வண்ணனை, தொல்காப்பியத்தைப் பழித்துரைக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்குத் தக்க அறிவுரையாக விளங்கும் ஆற்றல் வாய்ந்தது. மாலளந்தான் மூவடியால் முப்பாலன் ஈரடியால் என்னும் ஒருவரியே ஒரு காப்பியமாக நின்றொளிக்கும் தகைமை வாய்ந்தது. மண்ணும் விண்ணும் ஈரேழுலகங்களும் மூவடியால் அளந்த மாலினும், இவையனைத்தையும் தனது குறட்பாவில் ஈரடியால் அளந்த திருவள்ளுவரின் ஆற்றல் போற்றத்தக்கது என்பதைப் பாவலர் உணர்த்தும் பாங்கு போற்றத்தக்கது.

 கோதை நாச்சியார் கொஞ்சுதமிழில் ‘தீக்குறளை சென்றோதோம்’  எனக் கூறிய பொருளையுணராது ‘திருக்குறள் வீடு பேறு கூறாமையால் தீய குறள்’ எனத் தவறான பொருள் கூறி மகிழ்ந்தவர்கள் பலர்.

அவரை நயமாகத் திருத்தும் வகையில்,

சாலப் பயனீனும் தீங்குறளைச் சென்றோதக்

காலைப் புனலாடிக் கைமலர்கொள் எம்பாவாய்

என்று நயமுறப் பாடியுள்ளார்.

இவ்வாறு இந்நூலின் நயமெல்லாம் விரித்துரைத்தால் இன்னொரு நூல் உருவாகிவிடும். கற்கண்டுத்தமிழில் கவின்மிகு சொற்கண்டு, கனிவுடன் தமிழன் உயர்வை போற்ற நம் உள்ளமெல்லாம் தமிழுணர்ச்சி பொங்கச் செய்யும் உயரிய இந்நூலை உருவாக்கிய பாவலர் வேணு. குணசேகரன் அவர்களுக்கு நாம் பெரிதும் கடப்பாடுடையோம். ஆழ்ந்து இந்நூலைக் கற்றுத் தமிழில் வெல்லும் திறத்துடன் உலக அரங்கில் உயர்ந்தோங்கி ஒளிர, ஒல்லும் வகையெலாம் உழைப்போம். அதற்கு, உறுதிபூண்டு செயலாற்றலே இப்பாவலருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும்.

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்