உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 74: நான் பதிப்பித்த முதல் புத்தகம்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 111: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம்-74
நான் பதிப்பித்த முதல் புத்தகம்
திருநெல்வேலியில் மேலை இரத வீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம்
ஒன்று உண்டு. அதனை ஈசான மடம் என்று சொல்லுவர். நானும் மகா
வைத்தியநாதையர் முதலியோரும் மதுரையிலிருந்து போன சமயம்
அவ்விடத்தில் மடாதிபதியாகச் சாமிநாத தம்பிரானென்பவர் இருந்து
எல்லாவற்வையும் கவனித்து வந்தார். நாங்கள் அவருடைய ஆதரவில் அங்கே
தங்கியிருந்து சுப்பிரமணிய தேசிகரது வரவை எதிர்பார்த்திருந்தோம்.
வாதம்
தேசிகர் பல சிவ தலங்களைத் தரிசித்த பிறகு திருநெல்வேலி வந்து
சேர்ந்தார். பாண்டி நாட்டிலுள்ள பிரபுக்கள் பலரும் வித்துவான்கள் பலரும்
காணிக்கையுடன் வந்து தேசிகரைக் கண்டு இன்புற்றனர். வித்துவான்கள்
தேசிகர்மீது தாமியற்றிய புதிய பாடல்களைக் கூறி சல்லாபம் செய்து
சென்றனர். சேற்றூரிலிருந்து இராமசாமி கவிராயர் முதலியவர்களும்,
இராசவல்லிபுரம் அழகிய சொக்கநாதபிள்ளை என்பவரும், ஆழ்வார்
திருநகரியிலிருந்து தேவராச பாரதி என்பவரும் வந்தனர். தேவராச பாரதி சில
செய்யுட்களைச் சொன்னார். அவற்றிலுள்ள சில விசயங்களை நான்
ஆட்சேபம் செய்து கேள்விகள் கேட்டேன். அவர் அவற்றிற்குத் தக்க
சமாதானம் சொன்னார். அதுகாறும் வேறு வித்துவான்களிடம் அவ்வளவு
தைரியமாக ஆட்சேபம் செய்யாத எனது செயலைக் கண்ட தேசிகர் பிறகு
தனியே என்னிடம், “நீர் செய்த ஆட்சேபம் உசிதமானதாக இருந்தது.
விசயங்களைத் தடைவிடைகளால் நிருணயம் செய்வது ஒரு சம்பிரதாயம்.
புலவர்களில் வாதியென்று ஒருவகையுண்டு. விதண்டாவாதம் செய்யாமல்
நியாயத்தை அனுசரித்துத் தருக்கஞ்செய்தால் கேட்பதற்கு இரசமாக இருப்பதோடு
இரு சாராருடைய அறிவின் திறமும் வெளிப்படும். சம்சுகிருதத்தில் இந்த
வழக்கம் மிகுதியாக உண்டு” என்று சொன்னார். ‘நாம் அவர் கூறியதை
மறுத்துப் பேசியது ஒருகால் தவறாக இருக்குமோ’ என்று நான் கொண்டிருந்த
சந்தேகம் அவர் கூறிய வார்த்தைகளால் நீங்கியது.
கல்லிடைக்குறிச்சி
பிறகு சின்னப் பண்டாரசந்நிதியாகிய நமசிவாய தேசிகருடைய வேண்டு
கோளின்படி சுப்பிரமணிய தேசிகர் பரிவாரங்களுடன்
கல்லிடைக் குறிச்சிக்குச் சென்றார். அவருடைய வரவை உத்தேசித்து
நூதனமான கொலு மண்டபம் ஒன்று கட்டப்பெற்றிருந்தது. திருவாவடுதுறையைப்
போலவே அழகிய சிவாலயமொன்று மடத்தைச் சார்ந்து விளங்கியது
சுவாமியின் திருநாமம் கண்வசங்கரனென்பது. ஓதுவார்கள், காரியத்தர்கள்
முதலிய பரிகரத்தாரும் திருவாவடுதுறையைப் போலவே மிகுதியாகவும், திறமை
சாலிகளாகவும் இருந்தனர். அவ்வூரில் உள்ள பெரிய அக்கிரகாரங்களில்
இருந்த அந்தணர்களிற் பெரும்பாலோர் பெருஞ்செல்வர்கள். அவர்கள்
யாவரும் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் அன்புடையவர்கள். எல்லாரும்
தேசிகருடைய வரவை அறிந்து பழ வகைகளுடன் வந்து பார்த்துச்
சென்றார்கள்.
எல்லாக் காட்சிகளையும் கண்டு நான் ஆச்சரியமடைந்து கொண்டே
இருந்தேன். அங்கே உள்ள இயற்கைக் காட்சிகளும், மனிதர்களுடைய
விசுவாசமும், வித்துவான்களுடைய பெருமையும் யாரையும் வசீகரிக்கத்
தக்கவை. தேசிகர் அடிக்கடி கல்லிடைக்குறிச்சியைப் பற்றிப் பாராட்டிப்
பேசுவதுண்டு. அவர் சின்னப்பட்டத்தை வகித்த காலத்திலே பல வருஷங்கள்
அங்கே வசித்து வந்தார். அவர் பாராட்டியது அபிமானத்தா
லெழுந்ததன்றென்பதும் அவ்விடம் அந்தப் பாராட்டுக்கு ஏற்றதேயென்பதும்
எனக்கு அப்போது தெளிவாக விளங்கின.
உடன் வந்திருந்த வேணுவனலிங்கத் தம்பிரான் செவந்திபுரம் மடத்தில்
சுப்பிரமணிய தேசிகர் எழுந்தருள்வதற்குரிய நல்ல நாள் ஒன்று பார்த்து
வைத்திருந்தார். “தேசிகர் தம் பழைய தானமாகிய கல்லிடைக்
குறிச்சியிலேயே நெடுநாள் தங்கி விடுவாரோ” என்ற கருத்து அவருக்கு
இருந்தமையால் விரைவில் செவந்திபுரத்திற்கு புறப்பட வேண்டும் என்று
வற்புத்திக் கொண்டே இருந்தார். கல்லிடைக் குறிச்சியிலே எவ்வளவு காலம்
இருந்தாலும் மிகவும் சௌக்கியமாக இருக்கலாமென்பது எனக்குத் தெரியும்.
ஆனாலும் புதிய புதிய காட்சிகளைப் பார்க்க வேண்டுமென்றே ஆசையால்
“தேசிகர் விரைவில் புறப்பட வேண்டும்” என்று நானும் எண்ணினேன்.
செவந்திபுரம்
குறிப்பிட்ட நல்ல தினத்தில் தேசிகர் செவந்திபுரம் சென்று மடத்தில்
தங்கினார். பாண்டி நாட்டை ஆண்டு வந்த நாயக்க மன்னர்களின்
அதிகாரியாகிய செவந்தியப்ப நாயக்கரென்பவரால் மடத்திற்கு விடப்பட்ட
கிராமங்கள் எட்டுள் முக்கியமானது செவந்திபுரம். அதில் அவரால் நிருமிக்கப்பட்ட செவந்தீசுவரம் என்ற ஆலயம் ஒன்று உண்டு.
வேணுவனலிங்கத் தம்பிரான் அங்கே கட்டிய மடாலயத்திற்கு
‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ என்று பெயர் வைத்ததோடு சிரீ சுப்பிரமணிய
தேசிகருடைய திருவுருவம் ஒன்று அமைத்துப் பிரதிட்டை செய்து பூசை
செய்யும்படி ஏற்பாடு செய்தார். தேசிகரே நேரில் எழுந்தருளிய தினத்தில்
அவருக்கு உண்டான இன்பத்துக்கு அளவில்லை. அன்றைத் தினம் ஒரு பெரிய
திருவிழாவாகவே கொண்டாடப் பெற்றது.
அந்த அழகிய மடாலயத்தைச் சிறப்பித்து வித்துவான்கள் பலர்
செய்யுட்களை இயற்றியிருந்தனர். அன்றிரவு பட்டணப் பிரவேசம் ஆனவுடன்
இரவு இரண்டு மணிக்கு மேல் எல்லாச் செய்யுட்களையும் தேசிகர்
முன்னிலையில் பல வித்துவான்களும், பிரபுக்களும் கூடியிருந்த சபையில் நான்
படித்தேன். சிலர் தாங்கள் இயற்றிய பாடல்களின் நயங்களைத் தாங்களே
எடுத்துக் காட்டினர். எல்லாம் படித்து முடிவதற்குள் பொழுது விடிந்து விட்டது.
மகா வைத்தியநாதையர் அவர் தமையனார் முதலிய பலர் பாடிய 86 பாடல்கள்
இருந்தன. நான் எட்டுச் செய்யுட்களை இயற்றினேன்.
புத்தகப் பதிப்பு
அப்பாடல்களையெல்லாம் அச்சிட வேண்டுமென்று வேணுவனலிங்கத்
தம்பிரான் விரும்பினார். அப்படியே செய்ய ஏற்பாடு நடை பெற்றபோது
திருவாவடுதுறையில் உள்ள வேணுவனலிங்க விலாசத்தைச் சிறப்பித்த
செய்யுட்களையும் சேர்த்து வெளியிடலாமென்று பலர் கூறினர். அவ்வாறே
அவ்விரண்டு வகைப் பாடல்களும் வேறு சில பாடல்களும் சேர்த்துத்
திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக் கூடத்தில் ஒரு புத்தகமாகப்
பதிப்பிக்க பெற்றன. அந்தப் புத்தகத்தை ஒழுங்குபடுத்தி எழுதிக் கொடுத்தவன்
நானே. பிற்காலத்தில் எவ்வளவோ புத்தகங்களைப் பரிசோதித்து வெளியிடும்
வேலையில் ஈடுபட்ட நான் முதன் முதலாகப் பதிப்பித்தது அந்தப் பாடல்
திரட்டே. அக்காலத்தில் பதிப்பு முறை சிறிதும் எனக்குத் தெரியாது. ஆனாலும்
நான் பரிசோதித்து வெளியிட்ட முதல் புத்தகமென்ற நினைவினால்
அதனிடத்தில் எனக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வருகிறது. அதன் முகப்புப்
பக்கத்தில் இருந்தவை வருமாறு:
“ கணபதி துணை. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை
யாதீனத்தைச் சேர்ந்த செவந்திபுரத்தில் மேற்படி ஆதீனம் பெரிய காறுபாறு
வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. மேற்படி திருவாவடுதுறையில் மேற்படி சுவாமிகளியற்றுவித்த கொலு மண்டபமென்னும் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு. இவை பல வித்துவான்களாற் பாடப்பட்டு மேற்படி ஆதீன அடியார் குழாங்களிலொருவராகிய ஆறுமுக சுவாமிகளாலும் மேற்படி திருவாவடுதுறை வேங்கட சுப்ப ஐயரவர்கள் புத்திரராகிய சாமிநாத ஐயரவர்களாலும் பார்வை யிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர
அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. வெகு தான்யாண்டு ஆனிமீ.”
அப்புத்தகத்தில் வேணுவனலிங்கத் தம்பிரானுடைய சரித்திரச்
சுருக்கமும், திருவாவடுதுறை குமார சுவாமித் தம்பிரான் இயற்றிய தோத்திரச்
செய்யுட்களும், வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைப் பாராட்டிப்
பாடிய பாடல்களும் சேர்க்கப்பெற்றன. பிழைத்திருத்தம் சேர்க்கவேண்டி
நேர்ந்தது. எல்லாம் சேர்ந்து 32 பக்கங்கள் ஆயின.
அந்தப் புத்தகம் அச்சிட்டு வந்த காலத்தில் நானும் பிறரும் அதை
வைத்து அழகு பார்த்துக் கொண்டேயிருந்தோம். சம்பிரதாயத்திற்காக
ஆறுமுகத் தம்பிரான் பெயரையும் சேர்த்துப் பதிப்பித்திருந்தாலும் அவர்
என்னிடமே ஒப்பித்து விட்டமையால் நான்தான் முற்றும் கவனித்துப்
பார்த்தவன். ஆதலின் எனக்கு அப்புத்தகத்தைப் பார்த்தபோதெல்லாம்
ஆனந்தம் பொங்கியது. “நான் பதிப்பித்த புத்தகம், என் பாடல்கள் உள்ள
புத்தகம்” என்ற பெருமையோடு மற்றொரு சிறப்பும் அதில் இருந்தது.
சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்புச் செய்யுட்களில் தியாகராச செட்டியார்
பாடல்கள் பதின்மூன்று இருந்தன. அதில் ஒரு செய்யுளில் என்னைப் பாராட்டி
யிருந்தார்.
“துன்னுறுபே ரிலக்கணமு மிலக்கியமு
மீனாட்சி சுந்தரப் பேர்
மன்னுறுநா வலர்பெருமா னிடையுணர்ந்தெல்
லாநலமும் வாய்ந்தன் னோன்போற்
பன்னுகவி சொல்சாமி நாதமறை
யோனியற்சண் பகக்குற் றால
மென்னுமுயர் பெயர்புனைந்த கவிராசன்
முகற்பலரு மியம்பி யேத்த”
என்பது அச் செய்யுள்.
பாபநாசம்
செவந்திபுரத்தில் சுப்பிரமணிய தேசிகர் நான்குமாத காலம்
தங்கியிருந்தார். தினந்தோறும் காலையில் அருகிலுள்ள பாபநாசம்சென்று தாமிரபர்ணியில் நீராடி சிரீ உலகம்மையையும் சிரீ கலியாண
சுந்தரேசுவரரையும் தரிசித்து வருவார். அவருடன் நாங்களும் செல்வோம்.
பொதிய மலை அடிவாரத்தில் அமைந்த அந்தத் தலத்தின் காட்சி
மனோரம்மியமாக இருக்கும். பாறைகளினிடையே தத்தித் தவழ்ந்து வரும்
அருவியின் அழகும் அதில் கொழுத்த பல நிறமுள்ள மீன்கள் பளிச்சுப்
பளிச்சென்று மின்னி விளையாடும் தோற்றமும் மெல்லென்ற காற்றும் நம்மை
மறக்கச் செய்யும். அங்கே யாரும் மீனைப் பிடிக்கக்கூடாது. அதனால்
அங்குள்ள மீன்கள் சிறிதும் அச்சமின்றி நீராடுவோர்கள் மீது மோதி
விளையாடும்.
பாபநாசம் கோயிலில் எண்ணெய்ச் சாதமென்ற ஒருவகைப் பிரசாதமும்
அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படும். எங்கள் காலை நேர இளம்
பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அப்பிரசாதத்தை எங்களுக்கு
அளிக்கும்படி தேசிகர் ஏற்பாடு செய்திருந்தார். பொதிய மலையிலிருந்து
வேகமாய் இறங்கி ஓடி வரும் தாமிரபரணியின் தெளிந்த நீரில் மீனினங்கள்
எங்களைச் சுற்றிச் சுற்றி வர, அவைகளுண்ணும்படி அன்னத்தை இறைத்து
நாங்கள் அப்பிரசாதத்தை உண்ணும்போது உண்டான இன்பத்துக்கு இணையாக
எதைச் சொல்லலாமென்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply