( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 34 தொடர்ச்சி)

ஆட்பெயரும் ஊர்ப்பெயரும்

கீரன்


    பழந் தமிழ் நூல்களில் பேசப்படுகின்ற கீரன், ஆதன் முதலிய
பெயர்கள் தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களிற் கலந்துள்ளன. கீரன் என்னும்
பழம் பெயருக்கு பெரும் புகழ் அளித்த புலவர் நக்கீரர் என்பது நாடறிந்தது.
கீரனூர் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில்
உண்டு.
 

ஆதன்

    ஆதன் என்னும் சொல் சேரகுல மன்னர் பெயரோடு சேர்த்துப்
பேசப்படுகின்றது. இளங்கோவடிகளின் தந்தை சேரலாதன் என்று
குறிக்கப்படுகின்றான். ஆதன் பெயரைத் தாங்கிய ஆதனூர்களும் தமிழ்
நாட்டிற் காணப்படும்.
 

கோடன்

    கோடன் என்னும் பெயரும் ஊர்ப் பெயராக வழங்குவதுண்டு.
சென்னைக்கு அணித்தாக உள்ள கோடம்பாக்கம் கோடன்பாக்கமே. நெல்லை
நாட்டில் முன்னாளில் கோடனூர் என்று வழங்கிய ஊர் இந் நாளில் கோடக
நல்லூர்
எனப்படுகின்றது.
 

டோனா

    இன்னும் பிற நாட்டுப் பெருமக்கள் பெயரும் தமிழ் நாட்டில் சில
ஊர்களுக்கு அமைந்துள்ளன. நெல்லை நாட்டில் டோனாவூர் என்னும்
சிற்றூர் இந்நாளிற் சிறந்து விளங்குகின்றது. அவ்வூரின் பழம் பெயர்
புலியூர்க் குறிஞ்சி  என்பதாகும். கிருத்தவ சமயம் நெல்லை நாட்டிற் பரவத்
தலைப்பட்ட போது கிருத்தவரானவர்கள் குடியிருந்து வாழ்வதற்காக அக் குறிச்சியிலுள்ள மனைகளையும் நிலங்களையும் விலை
கொடுத்து வாங்கினர் கிருத்தவ சங்கத்தார். அக் கிரயத் தொகையை
செருமானிய தேசத்தைச் சேர்ந்த டோனா என்னும் பெருஞ் செல்வர்
நன்கொடை யாக அளித்தார். நன்றி மறவாத நெல்லை நாட்டுக் கிருத்தவர்
அவர் பெயரை அவ்வூருக்கு அமைத்து டோனாவூர் என வழங்கலாயினர்.134
 

சாயர்


     நெல்லை நாட்டிலுள்ள மற்றொரு சிற்றூர் சாயர்புரம் என்று பெயர்
பெற்றுள்ளது. அங்கும் கிருத்தவர்களே பெருந் தொகையினராக
வசிக்கின்றார்கள். அவ்வூரில் குடியிருப்புக்கேற்ற மனையிடங்களை விலை
கொடுத்து வாங்கியவர் சாயர் என்னும் போர்ச்சுகீசிய வணிகர். கிறித்தவ
சங்கத்தார் நெல்லை நாட்டிற் செய்த பெரும் பணிகளை அவர் மனமுவந்து
ஆதரித்தார். அவர் வழங்கிய பொருளால் எழுந்த ஊர் சாயர்புரம் என்று
பெயர் பெறுவதாயிற்று.
 

காசாமேசர்

     திருக்குற்றால மலைக்கு அருகே காசிமேசபுரம் என்னும் சிற்றூர்
உள்ளது. அவ்வூர்ப் பெயரில் ஆங்கில நாட்டார் ஒருவர் பெயரைக்
காணலாம். கம்பெனியார் காலத்தில் காசா மேசர் என்ற ஆங்கில நாட்டு
வருத்தகர் குற்றால மலையின் அடிவாரத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார்.
தெற்கு மலை முதலிய இடங்களில் தோட்டப் பயிரிடும் பணியை அவர்
மேற்கொண்டார். அவர் வாசம் செய்த இடம் காசாமேசர் புரம் என்று
பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்தில் காசிமேசபுரமாயிற்று.  

மாக்டானல்

  சேலம் நாட்டில் மகுடஞ் சாவடி என்பது ஓர் ஊரின் பெயர்.
மாக்குடானல் என்ற பெயருடைய படைத் தலைவன் சில காலம் பாசறை
கொண்டிருந்த இடம் மாக்குடானல் சாவடி என்று பெயர் பெற்றது. அதுவே
மகுடம் சாவடி எனத் தமிழில் மருவி வழங்குகின்றது.

    

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

                அடிக் குறிப்பு

134. தேவாலயத்தொண்டர் பரப்புரைக் கழகம், (C.M.S.) திருநெல்வேலி