ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி
(ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி)
ஊரும் பேரும் 42 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும் தொடர்ச்சி
கடம்பந்துறை
சைவ உலகத்தில் ஆன்ற பெருமை யுடையது ஆவடுதுறை. தேவாரப் பாமாலை பெற்றதோடு திருமந்திரம்
திருஆவடுதுறை
அருளிய திருமூலர் வாழ்ந்ததும் அப்பதியே இன்னும், திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் சிவகதியடைந்ததும் அப்பதியே. இத்தகைய ஆவடு துறை, பேராவூர் நாட்டைச் சேர்ந்தது என்று சாசனம் கூறுகின்றது. பசுவளம் பெற்ற நாட்டில் விளங்கிய அப்பதியினை “ஆவின் அருங் கன்றுறையும் ஆவடுதண்துறை” என்று போற்றினாா் சேக்கிழாா். அத் தலம், வட மொழியில் கோமுத்தீச்சுரம் என்று வழங்கும் பான்மையைக் கருதும் பொழுது ஆவடுதுறை யென்பது ஆலயப் பெயராக ஆதியில் அமைந்திருத்தல் கூடும் என்று தோன்றுகின்றது. அக் கோயிலிற் கண்ட சாசனம் ஒன்று ‘சாத்தனூரில் உள்ள திருவாவடு துறை’ என்று கூறுதல் இதற்கொரு சான்றாகும்.13 சாத்தனூர் என்பது இப்பொழுது திருவாவடுதுறைக் கருகே ஒரு சிற்றுாராக உள்ளது. அவ்வூரில் எழுந்த ஆவடுதுறை என்னும் சிவாலயம் பல்லாற்றானும் பெருமையுற்றமையால், கோயிற் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்று கொள்ளலாகும்.
மேலே குறித்த திருநாவுக்கரசர் திருப்பாசுரத்தில் “மற்றும் துறை யனைத்தும் வணங்குவோமே” என்றமையால், இன்னும் சில துறைகளும் உண்டு என்பது பெறப்படும். அவற்றுள் திருமாந்துறையும், திருச்செந்துறையும், திருப்பாற்றுறையும் சிறந்தனவாகும்.
திருமாந்துறை
திருமாந்துறை என்ற பெயருடைய பதிகள் இரண்டு உண்டு. அவற்றுள் ஒன்று திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது. மற்றொன்று வைப்புத் தலமாகக் கருதப் படுகின்றது. இவ்விரு துறைகளும் ஒரு பெயருடையன வாயிருத்தலின், இவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு முன்னதை வடகரை மாந்துறை என்றார் திருத்தொண்டர் புராணமுடையார். காவிரி யாற்றின் வட கரையில் அமைந்த மாந்துறையை,
“அம்பொனேர் வருகாவிரி வடகரை மாந்துறை”
என்று பாடினார் திருஞான சம்பந்தர்.14
இனி, வைப்புத் தலமாகிய திருமாந்துறை, கும்பகோண வட்டத்தில் திருமங்கலக் குடிக்கு அணித்தாக உள்ளது. அத் தலத்தையும் திருஞான சம்பந்தர் பாடினார் என்பது சேக்கிழார் வாக்கால் புலனாகின்றது.
“கஞ்சனூர் ஆண்டதம் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சி முன்போந்து
மஞ்சனி மாமதில் சூழும்.
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி”
என்னும் பாட்டால், திருமாந்துறை இறைவற்குத் திருஞான சம்பந்தர் தமிழ்மாலை சாத்தினார் என்று தெரிகின்றது எனினும், அப் பாடல் கிடைக்கவில்லை.
திருச்செந்துறை
ஆலந்துறையை வணங்கிய பின்னர்த் திருஞான சம்பந்தர் திருச்செந்துறை முதலாய பல கோவில்களையும் வழிபட்டுக் கற்குடிமலையை அடைந்தார் என்று சேக்கிழார் கூறுதலால், இறைவன் கோயில் கொண்டுள்ள இடங்களில் திருச்செந்துறையும் ஒன்றென்று தெரிகின்றது. திருச்சி நாட்டிலே
திருச்சி வட்டத்தில் உள்ளது. திருச்செந்துறை. ஈசான மங்கலத்திற்கு அருகேயுள்ள அச் செந்துறையில் சந்திர சேகரப் பெருமானுக்குத் தென்னவன் இளங்கோ வேளாளரின் திருமகள் கற்கோயில் கட்டிய செய்தி சாசனங்களிற் காணப்படுகின்றது.15
காவிரியின் வடகரையிலுள்ள திருப்பாற்றுறை திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றுள்ளது. அங்குள்ள ஆதிமூலநாதர் ஆலயத்திற் கண்ட சாசனங்களால் திருப்பாற்றுறை, உத்தம சீலி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்ததென்பது விளங்கும்.16 இப்பொழுது உத்தமசேரி என வழங்கும் ஊரே உத்தம சீலி என்பர்.
திருப்பாற்றுறை
இறைவனது அளப்பருங் கருணையைப் பேரின்ப வெள்ளமாகக் கண்டனர் ஆன்றோர். “சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய், ஏகவுருவாய்க் கிடக்குதையோ என்று பரிந்து பாடினார் தவ நெறியில் தலைநின்ற தாயுமானவர். வெள்ளம் பொங்கிப் பொழிந்து செல்லும் கங்கை, காவிரி முதலிய ஆறுகளில் துறையறிந்து இறங்கி நீரைத் துய்த்தல் போன்று, சான்றோர் கண்ட துறைகளின் வாயிலாக ஆண்டவன் அருளைப் பெறலாகும் என்னும் கருத்தால் ஆலயங்களைத் துறைகள் என்று மேலோர் குறித்தனர் போலும்! அவற்றுள் சில துறைகள் பாடல் பெற்றனவாகும். பண்டு எழுவர் தவத்துறையாய் விளங்கிய லால்குடியின் தன்மையையும், மாணிக்கவாசகர்க்கு ஈசன் இன்னருள் சுரந்த திருப்பெருந் துறையின் செம்மையையும் இன்னோரன்ன பிற துறைகளையும் முன்னரே கண்டோம். இனிச் சாசனங்களிலும்.
எனவே, அவர் குறித்த ஆலந்துறை திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே ஏழு கல் அளவில் காவிரியின் தென் கரையில் அமைந்த அந்துவநல்லூர் என்ற ஊரில் உள்ள ஆலயமே ஆதல் வேண்டும். இக்காலத்தில் அந்த நல்லூர் என வழங்குகின்ற அந்துவநல்லூரில் ஆலந்துறை யென்னும் பழமையான ஆலயம் உண்டென்று சாசனம் கூறும்.20 அக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் வடதீர்த்த நாதர் என்று பிற்காலக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்படுதலும் இதனை வலியுறுத்துவதாகும். வடதீர்த்தம் என்பது ஆலந்துறையைக் குறிக்கும் வடசொல்.
திருப்பழுவூர் ஆலந்துறை
திருவையாற்றுக்கு வடக்கே பத்துகல் தூரத்தில் உடையார் பாளைய வட்டத்தில் திருப்பழுவூர் என்னும் பழம்பதி யொன்று உள்ளது. அது திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதாகும். அங்கு ஆலமரச் சோலையில் ஆண்டவன் கோயில் கொண்டமையால் ஆலந்துறை யென்பது அதன் பெயராயிற்று.21 ஆலந்துறையில் அமர்ந்தருளும் ஈசனை இந் நாளில் வட மூலநாதர் என்பர். பிற்காலத்தில் பழுவூர், கீழப்பழுவூர் எனவும், மேலப் பழுவூர் எனவும் இரண்டாகப் பிரிந்தது. பாடல் பெற்ற பழுவூர் கீழப் பழுவூர் ஆகும்.
ஏமப்பேருர் ஆலந்துறை
தென்னார்க்காட்டிலுள்ள ஏமப்பேரூர் என்னும் வைப்புத் தலத்தில் விளங்கும் ஆலயத்தின் பெயரும் ஆலந்துறை என்பதாகும்.22 திருவாலந்துறையுடைய பெருமானுக்கு மூன்று கால வழிபாடு நாள்தோறும் முறையாக நடைபெறும் வண்ணம் நலவூர் வாசிகள் நல்கிய நிவந்தம் கல்வெட்டிற் காணப்படுகின்றது.23 அநபாயன் என்னும் விருதுப் பெயர் தாங்கிய இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாய நல்லூர் என்ற ஊரை உண்டாக்கி, அதனை ஆலந்துறை யுடையாருக்கு அளித்தான்.
இடையாறு மருதந்துறை
பெண்ணையாற்றின் அருகேயுள்ள பதிகளுள் ஒன்று இடையாறு. அங்கு ஈசன் கோயில்கொண்ட இடம் மருதந்துறை என்று சாசனம் அறிவிக்கின்றது. ‘பெண்ணைத் தெண்ணீா், ஏற்றுமூர் எய்த மானிடையா றிடை மருதே’ என்று சுந்தரர் தேவாரத்தில் அமைந்ததும் இத் துறையே. தென்னார்க்காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் இப்பொழுது இடையார் என வழங்கும் ஊரே மருதந் துறையையுடைய இடையாறாகும்.24
குரக்குத்துறை
திருச்சி நாட்டைச் சேர்ந்த முசிறிக்கு மேற்கே ஆறு கல் தூரத்தில் குரங்குநாதன் கோயில் ஒன்று உண்டு. அக்கோயிலையுடைய ஊர் மகேந்திர மங்கலம் என்றும் அது வடகரை மழநாட்டுப் பிரமதேயம் என்றும் கல்வெட்டுக் கூறுகின்றது.25 பழமையான குரங்குநாதன் கோயில் குரக்குத்துறை யென்று பெயர் பெற்றிருந்தது. கட்டுமானத்தில் அது காஞ்சிக் கயிலாச நாதர் கோயிலை ஒத்திருக்கின்றது.26 இப்பொழுது அக்கோயிலுள்ள ஊர் ஸ்ரீநிவாச நல்லூர் என வழங்கும்.27
இந் நாளில் நெல்லை நாட்டில் அம்பாசமுத்திரம் என்று வழங்கப்படுகின்ற ஊர் ஆதியில் இளங்கோக்குடி என்னும் பெயர் வாய்ந்து விளங்கிற்று. சாலைத்துறை என்பது
திருச்சாலைத்துறை
அங்குள்ள திருக்கோயிலின் பெயர். அவ்வூரில் அமைந்த சிவாலயம் திருப்போத்துடையார் கோவில் என்று பெயர் பெற்றிருந்தது. அஃது இன்று எரிச்சாவுடையார் கோவில் என வழங்குவதாகும்.28
செந்நெறி
துறை யென்பது கோவிற் பெயராக வழங்குதல் போன்று நெறி யென்று பெயர் பெற்ற சிவாலயங்களும் சில உண்டு. திருச்சேறைப் பதியில் அமைந்த கோயில் செந்நெறி யென்று பெயர் பெற்றது.29 அதனைச் செந்நெறி யுடையார் கோயில் என வழங்கலாயினர். அது நாளடைவில் உடையார் கோயில் ஆயிற்று.
நீள்நெறி
தண்டலை யென்பது ஒரு பாடல் பெற்ற தலம். அங்குள்ள ஆலயம் நீணெறி என்று தேவாரத்திற் போற்றப்படுகின்றது. மீளா நெறியாகிய நெடு நெறி காட்டும் இறைவன் அமர்ந்தருளும் ஆலயம் (நீணெறி) நீள்நெறி என்று பெயர் பெற்றது போலும்!
அரநெறி
திருவாரூரில் அமைந்த திருக் கோயில்களுள் ஒன்று அரநெறி யென்னும் பெயர் பெற்று விளங்கிற்று.
“அருந்தவனை அரநெறியில் அப்பன் தன்னை
அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்த வாறே”
என்று பாடினார் திருநாவுக்கரசர்.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
- செ.க.அ.(M.E.R.), 1925.
- இது திருச்சி நாட்டுப் பெரம்பலூர் (பெரும்புலியூர்) வட்டத்தில் உள்ளது.
- 316 of 1903. ஈசான மங்கலத்துத் திருச்செந்துறையில் முதற் பராந்தக
சோழன் மகனாகிய அரிகுல கேசரியின் மனையாள், தென்னவன் இளங்கோ
வேளாரின் திருமகள் எடுப்பித்த கற்றளியைக் குறிப்பது இச் சாசனம், தெ.இ.க.(S.I.I.),
தொகுதி 3, பக்கம் 228. - 568 / 1908; 575 / 1908.
- தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டியும் கோயிலடியாகப் பிறந்த
ஊர்ப்பெயராகத் தெரிகின்றது. திருத்துறையென்ற ஆலயத்தையுடைய பூண்டி
திருத்துறைப்பூண்டியாயிற்று போலும்; 477 of 1912. இவ்வாறன்றித்
திருத்தருப்பூண்டி யென்னும் பெயரே திருத்துறைப்பூண்டியெனத் திரிந்தது
என்று கொள்வாரும் உளர். - 210 / 1929.
- திருஞான சம்பந்தர் புராணம். 342.
- செ.மா.க.(I.M.P.), திருச்சிராப்பள்ளி, 371, 374.
- பழுமரம் என்னும் சொல் ஆலமரம் என்று பொருள் படுதலால், பழுவூர்
என்பது ஆலமரமுடைய ஊரைக் குறித்தது போலும்! வடமூலநாதன் என்னும்
சொல் ஆலந்துறை இறைவன் என்று பொருள்படும். - 533 / 1921.
- 513 / 1921
- 276 /1928
- 594 / 1904.
- திருச்சிராப்பள்ளி அரசிதழ், தொகுதி 1, பக்.289
- திருச்சி நாட்டு முசிரி வட்டத்தில் உள்ளது.
- போத்து என்பது எருது. எனவே, போத்துடையார் எருதுவாசன முடைய
ஈசன். எருத்தாவுடையார் என்று அப்பெயர் மொழிபெயர்க்கப்பட்டு,
எரிச்சாவுடையாரால் சிதைந்ததென்று தோன்றுகின்றது. - காஞ்சிபுரத்தில் அமைந்த பாடல்பெற்ற கோவில் ஒன்று ‘கச்சி நெறிக்
காரைக்காடு’ என்னும் பெயருடையது. அதனைப் பாடிய திருஞான சம்பந்தர்
பாசுரந்தோறும் ‘நெறிக் காரைக் காட்டாரே’ என்று போற்றும் பான்மையைக்
கருதும் பொழுது நெறியென்பது ஆலயத்தின் பெயராக இருத்தல் கூடும்
எனத் தோன்றுகின்றது. காஞ்சியில் அமைந்த நெறியாதலின் கச்சிநெறி
எனப்பட்டது போலும்! இப்பொழுது காரைக்காடு திருக்காலிக்காடு என்றும்,
திருக்கோவில் திருக்காலீஸ்வரன் கோயில் என்றும் வழங்கும். - செ.க.அ.(M. E. R.), 1924-25.
Leave a Reply