(ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும் தொடர்ச்சி)

ஊரும் பேரும் 41 : இரா.பி.சேது(ப்பிள்ளை): துறையும் நெறியும்

இறைவன் உறையும் துறைகள் பலவும் ஒரு திருப்பாட்டிலே தொகுக்கப் பெற்றுள்ளன.

“கயிலாய மலையெடுத்தான் கரங்களோடு
சிரங்கள் உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய் பராய்த்துறைதென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்துறை”.

என்று பாடினார் திருநாவுக்கரசர்.

திருப்பராய்த்துறை


காவிரியாற்றினால் அமைந்த அழகிய துறைகளுள் ஒன்று திருப்பராய்த்துறை. அது பராய்மரச் சோலையின் இடையிலே அமைந்திருந்தமையால் அப் பெயர் பெற்றது போலும்: காவிரிக்கரையில் கண்ணுக்கினிய காட்சியளித்த பராய்த் துறையிற் கோயில் கொண்ட பரமனை,

“பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே”

என ஆதரித்தழைத்தார் திருநாவுக்கரசர். இந் நாளில் இத்துறை திருப்பலாத்துறை என்று வழங்கும்.

காவிரி யாற்றங் கரையில் உள்ள மற்றொரு துறை பாலைத்துறையாகும். அத் துறையில் காட்சியளிக்கும் இறைவனை,

“மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே”

திருப்பாலைத்துறை

என்று பாடியருளினார் திருநாவுக்கரசர். பாலைத்துறையுடைய பரமனைப் பாலைவன நாதர் என்று இன்றளவும் வழங்குதலால், பாலை மரங்கள் நிறைந்த துறையாக அது முற்காலத்தில் இருந்ததாகத் தோன்றுகிறது.

திருத்தவத்துறை

இறைவன் அருள் விளங்கும் துறைகளுள் ஒன்று திருத்தவத்துறை. “பண்டு எழுவர் தவத்துறை” என்று இப்பதியைத் திருநாவுக்கரசர் குறித்தருளினார். முன்னாளில் முனிவர் எழுவர் தவம் புரிந்த பெருமை அதற்குரிய தென்பது அவர் திருவாக்கால் விளங்கும். இத்தகைய பெருமை சான்ற தவத்துறைக்குரிய தேவாரப் பாடல் கிடைத்திலதேனும் திருஞான சம்பந்தர் அப் பதியை வணங்கிப் பாடினார் என்று திருத்தொண்டப் புராணம் கூறும். திருச்சிராப்பள்ளியையும் திருவானைக்காவையும் வழிபட்ட பின்பு, “மன்னும் தவத்துறை வானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன்தமிழ் மாலை கொண்டேத்தினார்” என்று சேக்கிழார் கூறுதலால், திருஞான சம்பந்தர் தவத்துறைப் பெருமானைப் பாமாலை பாடித் தொழுதார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.2 ஆயினும், அப் பாடல் கிடைக்கப் பெறாமையால் தவத்துறை வைப்புத் தலங்களுள் ஒன்றாக வைத்தெண்ணப்படும்.3 இப்பொழுது லால்குடி என வழங்கும் ஊரே பண்டைத் தவத்துறை என்பது சாசனங்களால் விளங்குகின்றது.

திருவெண்துறை

தஞ்சை நாட்டு மன்னார்க்குடிக்கு அணித்தாக உள்ளது திருவெண்துறை. தேவாரப் பாடல் பெற்ற அத் தலம் இப்பொழுது திருவண்டு துறையாகி, பிருங்கி முனிவர் வண்டு வடிவத்தில் ஈசனை வழிபட்ட இடமாகக் கருதப்படுகின்றது. இன்னும்,

“குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை
⁠பெருந்துறையும் குரங்காடுதுறை யினோடு
மயில் ஆடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை
⁠மற்றும் துறையனைத்தும் வணங்குவோமே”

என்று பாடினார் நாவரசர்.

குயில் ஆலந்துறை

குயில்கள் இனிதமர்ந்து கூவும் செழுஞ் சோலையினிடையே ஆலந்துறையைக் “குயிலாலந்துறை” என்று அவர் குறித்தார். மாயூரம் என்னும் மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள நல்லக் குடியிலே கோயில் கொண்ட நாதன் பெயர் ஆலந்துறையப்பர் என்றும், நாயகியின் பெயர் குயிலாண்ட நாயகி என்றும் வழங்குதலால், திருநாவுக்கரசர் குறித்த குயிலாலந்துறை அதுவே எனக் கொள்ளப்படுகின்றது. இந் நல்லக்குடி ஈசனருள் விளங்கும் இடங்களுள் ஒன்றென்பது, “நற்கொடி மேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி’ என்னும் நாவுக்கரசர் திருவாக்கால் அறியப்படும்.

“சோழவள நாடு சோறுடைத்து” என்னும் புகழுரைக்குச் சான்றாக நிற்பது சோற்றுத்துறையாகும். தேவாரப் பாமாலை பெற்ற இப் பழந்துறையைப் “பொன்னித் திரை வலங்கொள் சோற்றுத்துறை” என்று பாராட்டினார் சேக்கிழார். பழங்

திருச்சோற்றுத் துறை

காலத்தில் இருவகை வழக்கிலும் ஏற்றமுற்று விளங்கிய சோறு என்னும் சொல் பிற்காலத்தில் எளிமையுற்றது.5 சாதம் என்பது அதனினும் சிறப்புடைய பதமாகக் கொள்ளப்பட்டது. இதனால் சோற்றுத்துறை சாதத் துறையாயிற்று; சாதத் துறை சாத்துறையென மருவிற்று. எனவே, இன்று திருச்சாத்துறை என்று அது வழங்கப்படுகின்றது.

அரிசிலாற்றங் கரையில், பாடல் பெற்ற பெருதுறை ஒன்று அமைந்துள்ளது.

“தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்
⁠தண் அரிசில் புடைசூழ்ந்து
குழையார் சோலை மென்னடை யன்னம்
⁠கூடுபெருந் துறையாரே”

திருப்பெருந்துறை

என்று அதன் இயற்கை யழகினை எடுத்துரைத்தார் திருஞானசம்பந்தர். இன்னும், தஞ்சை நாட்டுக் கும்பகோண வட்டத்தில் இப்பொழுது திருப்பந்துறை யென வழங்கும் பதி திருப்பெருந்துறையேயாகும். ஆதியில் செங்கற் கோயிலாயிருந்த திருப்பெருந்துறை, கரிகாற் சோழன் காலத்தில் கற் கோயிலாயிற்று என்று சாசனம் தெரிவிக்கின்றது. இராஜராஜ சோழன் வீரபாண்டியன் முதலிய பெருமன்னர் காலத்துச் சாசனம் அக் கோயிலிற் காணப்படுதல் அதன் பழமைக்கு ஒரு சான்றாகும்.6

இனி, பாண்டி நாட்டில் மாணிக்க வாசகர்க்கு ஈசன் அருள் புரிந்த இடமும் திருப்பெருந்துறையாகும். சிவபெருமானைத் ‘திருவார் பெருந்துறைச் செல்வன்’ என்று கீர்த்தித் திரு அகவல் கூறும். திருப் பெருந்துறையில் இருந்தருளும் இறைவனை,

“தில்லைவாழ் கூத்தா சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே”

என்றழைக்கின்றார் மாணிக்கவாசகர். இப் பதி ஆவுடை யார் கோயில் என்னும் பெயரோடு தஞ்சை நாட்டு அறந்தாங்கி வட்டத்தில் உள்ளது.7

குரங்காடு துறை காவிரியாற்றின் கரையில் குரங்காடு துறை யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உண்டு. அவற்றுள் வட கரையிலே அமைந்த குரங்காடு துறையில் வாலியென்னும் வானர மன்னன் இறைவனை வணங்கினான் என்பர்.8 “கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட நின்ற கோயில் வட குரங்காடு துறை என்பது திருஞான சம்பந்தர் தேவாரத்தால் விளங்கும். இனி, காவிரியாற்றின் தென் கரையிலுள்ள குரங்காடு துறை இப்பொழுது ஆடுதுறை என்றே வழங்குகின்றது. தேவாரப் பாமாலை பெற்ற அப் பதியில் வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன் ஈசனை வழிபட்டான் என்னும் ஐதிகம் உண்டு.


இன்னும், திருச்சி நாட்டுப் பெரம்பலூர் வட்டத்தில் வட வெள்ளாற்றங்கரையில் மற்றொரு குரங்காடுதுறையுள்ளது. ஆடுதுறை யென வழங்கும் அப்பதியின் பழமை

சாசனத்தால் விளங்குவதாகும். குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன் முதலிய பெருமன்னரால் ஆதரிக்கப்பெற்ற அக் கோயிலில் அமர்ந்த இறைவன் திருநாமம் குற்றம் பொறுத்த நாயனார் என்று கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது.9

மயிலாடுதுறை

காவிரி யாற்றின் கரையில் சிறந்திலங்கும் சிவப்பதிகளுள் ஒன்று மயிலாடுதுறை. அத் துறையைக் கண்டு ஆனந்தமாகப் பாடினார் திருஞான சம்பந்தர்.

“கந்தமலி சந்தினொடு காரகிலும்
⁠வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை உந்தியெதிர் மந்திமலர்
⁠சிந்துமயில் ஆடுதுறையே”

என்று அவர் பாடிய மயிலாடுதுறை இந் நாளில் மாயவரம் என வழங்குகின்றது.10

‘காவிரிசூழ் கடம்பந்துறை’ யென்று தேவாரத்திற் போற்றப்பட்ட துறை இக் காலத்தில் குழித்தலை யென வழங்கும் ஊரைச் சார்ந்த கடம்பர் கோவில் ஆகும்.11 காவிரியாற்றின் தென் கரையிலுள்ள கடம்பவனத் தில் ஈசன் காட்சியளித்தமையால் அப் பெயர் அமைந்ததென்பர். திருக்கோவையாரில் ‘தண் கடம்பைத் தடம் என்று சொல்லப்படும் தலம் கடம்பந்துறையாக இருத்தல் கூடுமென்று தோன்றுகின்றது.12

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

1. பராய் என்பது Paper tree என்று ஆங்கிலத்தில் வழங்கப்பெறும்.

2. திருஞான சம்பந்தர் புரராணம், 347.

3. இராகவய்யங்கார் ஆராய்ச்சித் தொகுதி, ப. 287.

4. நல்லக்குடி யென்பது இந் நாளில் நல்லத்துக்குடி என மருவி
வழங்குகின்றது.

5.     இம்மையே தரும் சோறும் கூறையும்
      
ஏத்தலாம் இடர் களையலாம்
       அம்மையே சிவலோக மாள்வதற்கு
       யாதும் ஐயுற வில்லையே – என்ற சுந்தரர் தேவாரத்தில் சோறு

என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது.

6. செ.க.அ.(M.E.R.),1931-32.

7. புதுக்கோட்டை நாட்டில் பெருந்துறை என்னும் பெயருடைய ஊர்
ஒன்றுண்டு. அங்குள்ள பழுதுற்ற சிவாலயத்திற் கண்ட சாசனங்களால்
அவ்வூர் பழைய கான நாட்டைச் சேர்ந்த தென்பது புலனாகின்றது.
பெருந்துறை என்ற பெயர் ஆதியில் அத்திருக் கோயிலுக்கு அமைந்து, பிறகு
ஊரின் பெயரா யிருத்தல் கூடும். 404 / 1906.

8. இத் தலத்தை வணங்கிய வாலி, அரக்கர் வேந்தனாகிய இராவணனை
வென்றுயர்ந்த கிட்கிந்தை யரசனே என்பது,

     “நீலமாமணி நிறத்தரக்கனை இருபது கரத்தோடொல்க
      வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்”

என்னும் திருஞான சம்பந்தர் வாக்கால் தெளிவாகும்.
                          -வடகுரங்காடு துறைப்பதிகம்.  9. 32 of 1913.

10 மயிலாடுதுறை, மயூரபுரமாகி, மயூரவரமாகி, மாயவரமாகிய செய்தி
பின்னர்க் கூறப்படும்.

11. காடவர்கோன் திருவெண்பாவில், “கழுகு கழித்துண்டலை யாமுன்
காவிரியின் தென்பால் குழித்தண்டலை யானைக் கூறு” என்று
கடம்பந்துறையைப் பாடியுள்ளார்.

12. இத் தலத்தைக் குறித்துக் ‘கடம்பூர் கோயில் உலா’ என்னும் பிரபந்தம்
ஒன்று உண்டு.