(ஊரும் பேரும் 48 : இரா.பி.சேது(ப்பிள்ளை): கோயிலும் வாயிலும் 3- தொடர்ச்சி)

ஊரும் பேரும்

தளியும் பள்ளியும்

திருவாரூர்-மண்தளி

    குகைக் கோயில்களும் கற் கோயில்களும் தோன்று முன்னே, மண்ணாலயங்கள் பல இந் நாட்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. பழமையான நகரமாகிய திருவாரூரில் உள்ள பாடல் பெற்ற கோயில்களுள் ஒன்று மண்தளி என்று குறிக்கப்படுகின்றது. அம் மண்தளியில் அமர்ந்த மகாதேவனை,

        “தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர்

        அம்மானே பரவையுள் மண்டளி யம்மானே

என்று சுந்தரர் பாடும் பான்மையால், தமிழ்ப்புலமை வாய்ந்தோரைத் தலையளித் தாட்கொண்டருளும் ஈசன் கருணை இனிது விளங்குவதாகும். அத்தளியில் அமர்ந்த ஈசனை மண்தளியுடைய மகாதேவர் என்று சாசனம் குறிக்கின்றது.1

கச்சிப் பலதளி

    தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சியில் திருக்கோயில்கள் பலவுண்டு. அவற்றைக் கண்டு விம்மிதமுற்ற திருநாவுக்கரசர்,

          “கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்

          கயிலாய நாதனையே காணலாமே

என்று பாடினார். அந் நகரிலுள்ள பழமையான தளிகளுள் ஒன்று

திருமேற்றளி என்பதாகும்.

        “பாரூர் பல்லவனூர் மதிற்கச்சி மாநகர்வாய்ச்

        சிரூ ரும்புறவில் திருமேற் றளிச்சிவனை

என்று பாடினார் சுந்தரர். அத்திருக்கோவில் இப்பொழுது காஞ்சி மாநகரின் ஒரு பாமாகிய பிள்ளைப் பாளையத்தில் உள்ளது.  இன்னும், காஞ்சியில் உள்ள மற்றொரு கோயில் ஓணகாந்தன் தளி. அது கச்சி ஏகம்பத்திற்கு மேற்கே அரை கல் தூரத்தில் அமைந்திருக் கின்றது.

ஓணகாந்தன் தளியுளீரே” என்று சுந்தரராற் பாடப்பட்ட ஆலயம் அதுவே.

பழையாறை-வடதளியும், மேற்றளியும்

    “பாரின் நீடிய பெருமை சேர்பதி பழையாறை” என்று சேக்கிழாரால் புகழப்பட்ட பதியில் இரண்டு தளிகள் உள்ளன. அவற்றுள் வடதளி என்னும் திருக்கோயிலைச் சமணர் மறைத்து வைத்திருந்தனர் என்றும், திருநாவுக்கரசர் உண்ணா நோன்பிருந்து அதனை வெளிப்படுத்தினர் என்றும் தேவாரம் கூறும்.2 இன்னும், பழையாறைப் பதியில் மேற்றளி என்ற திருக்கோயிலும் உண்டென்பது,

          “திருவாறை மேற்றளியில்

          திகழ்ந்திருந்த செந்தீயின்

          உருவாளன்

என்னும் சேக்கிழார் வாக்கால் விளங்கும்.

ஓமாம்புலியூர் வடதளி

   ஓமாம் புலியூர் என்னும் பாடல் பெற்ற பதியில் உள்ள ஈசன் கோயில் வடதளி யென்பது தேவாரத்தால் தெரிகின்றது.

        “உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்

        புலியூரெம் உத்தமனைப் புரமூன் றெய்த

        சிலையானை வடதளியெம் செல்வம் தன்னை

என்பது திருநாவுக்கரசர் வாக்கு.               

திருப்புத்தூர் திருத்தளி

    பாண்டி நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று திருப்பத்தூர் ஆகும். அங்குள்ள சிவாலயம் திருத்தளி என்று பெயர் பெற்றது. சனங்களிலே குறிக்கப்படுகின்ற இக்கோயிற் பெயர் தேவாரத்திலும் காணப்படும்.

      “தேராரும் நெடுவீதித் திருப்புத் தூரில்

      திருத்தளியான் காண்அவனென் சிந்தை யானே

என்பது திருநாவுக்கரசர் பாட்டு. எனவே, திருப்புத்தூர்க் கோயிலின் பெயர் திருத்தளி என்பது தெளிவாகும்.

   திருமேற்றளி

   புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியான் மலையில் உள்ள கோயில் திருமேற்றளி என்னும் பெயருடையதென்பது சாசனங்களால் தெரிகின்றது.

முடியூர்-ஆற்றுத்தளி

     திருமுனைப்பாடி நாட்டுத் திருமுடியூர் என்ற ஊரில் அமைந்த சிவன் கோயில், ஆற்றுத்தளி என்னும் பெயர் பெற்றது.3 பராந்தக சதுர்வேதி மங்கலம் என இடைக் காலத்தில் வழங்கிய அவ்வூர் இப்பொழுது கிராமம் என்னும் பெயரோடு தென்னார்க்காட்டுத் திருக் கோயிலூர் வட்டத்தில் உள்ளது.

குரக்குத்தளி

    குரக்குத்தளி என்னும் கோவில் கொங்கு நாட்டு வைப்புத் தலம் என்பது “கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய்” என்னும் தேவாரக் குறிப்பினால் தெரிகின்றது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நாடுகள் இருபத்து நான்கில் குறும்பு நாடும் ஒன்றென்பர்.4 அந் நாட்டு முகுந்தனூரில்  அமைந்த திருக்கோயிலே குரக்குத்தளி என்பது சாசனங்களால் விளங்கும்.5

இக் காலத்தில் ‘சர்க்கார் பெரிய பாளையம்’ என்னும் பெயர் பெற்றுள்ள முகுந்தனூரில் காணப்படும் பழைய சிவாலயமே குரக்குத்தளியாகும். அங்கு வானரத் தலைவனாகிய சுக்கிரீவன் ஈசனை வழிபட்டான் என்பது ஐதிகமாதலின், சுக்கிரீவேஸ்வரர் கோயில் என்ற பெயர் அதற்கு அமைந்துள்ளது.6

    ஈசனார்க்குரிய பள்ளிகளுள் சிலவற்றைத் தொகுத்துரைத்தார் திருநாவுக்கரசர்.

       “சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி

       செழுநனி பள்ளி தவப்பள்ளி7 சீரார்

       பரப்பள்ளி யென்றென்று பகர்வோர் எல்லாம்

       பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே

என்னும் பாசுரத்திற் கண்ட பள்ளிகளைத் தமிழ்ப் பாடல்களாலும் சாசனங்களாலும் ஒருவாறு அறிந்து கொள்ளலாகும்.

சிராப்பள்ளி

   பண்டைச் சோழ நாட்டின் தலைநகராக விளங்கிய உறையூரின் அருகே நின்ற குன்றில் அமர்ந்த ஈசனைச் ‘சிராப் பள்ளிக் குன்றுடையான்’ என்று பாடினார்,

   திருஞான சம்பந்தர். அக் குன்றம் சிரகிரி எனவும் வழங்கப்பெற்றது.

        “தாயும் தந்தையும் ஆனோய், சிரகிரித்

        தாயு மான தயாபர மூர்த்தியே

என்று தாயுமானவர் சிரகிரிப் பெருமானைப் பாடித்தொழுதார். எனவே, சிரகிரியில் அமைந்த பள்ளியைத் திருநாவுக்கரசர் சிரப்பள்ளி எனக் குறித்தார் என்று  கொள்ளுதல் பொருந்தும். சிரகிரியையடைய ஊர் சிரபுரம் என்று பெயர் பெற்றுப் பின்பு திருசிரபுரம் ஆகச் சிறந்து, இறுதியில் திரிசிரபுரம் என்று ஆயிற்று.8

சிவப்பள்ளி

      தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ள திருச்சம்பள்ளி என்ற ஊர் பழைய சிவப்பள்ளி என்று கொள்ளப்படுகின்றது. சிவன் பள்ளி என்னும் கோயிற் பெயர் சிவம் பள்ளியென மருவி, திரு என்ற அடைபெற்றுத் திருச்சிவம் பள்ளியாகிப் பின்பு திருச்சம்பள்ளி எனச் சிதைவுற்றிருக்கலாம் என்று தோன்றுகின்றது.

செம்பொன் பள்ளி

      இன்னும், மாயவர வட்டத்திலுள்ள மற்றொரு பள்ளி திருச்செம்பொன் பள்ளி. செம்பனார் கோவில் என்பது அதற்கு இப்பொழுது வழங்கும் பெயர். காவிரி யாற்றங்கரையில் களித்திலங்கும் அப்பள்ளியை,

        “வரையார் சந்தோ டகிலும் வரும்பொன்னித்

         திரையார் செம்பொன் பள்ளி

என்று திருஞான சம்பந்தர் போற்றினார்.

நனிபள்ளி

   மூவர் தேவாரமும் பெற்று விளங்கும் பதிகளுள் ஒன்று திருநனிபள்ளி. தலைச்சங்காட்டின் அருகேயமைந்துள்ள இப்பதியை,

       “பங்காய மாமுகத் தாளுமை பங்கன் உறைகோயில்

        செங்கயல் பாயும் வயற்றிரு ஊர்நனி பள்ளியதே 

என்று பாடினார் சுந்தரர். இவ்வூர் புஞ்சை என்னும் பெயரோடு தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் உள்ளது.9

 பரன்சேர்பள்ளி

      கோவை நாட்டுத் தாராபுர வட்டத்தில் பரன்சேர் பள்ளியென்னும் திருக்கோயில் உண்டென்பது கல்வெட்டுக்களால் தெரிகின்றது. அக் கோயில் நட்டூர் என்ற ஊரில் இருந்தமையால் மத்திய புரீஸ்வரர் என்னும் பெயர் அங்குக்கோயில் கொண்ட ஈசனுக்கு அமைந்தது.

காங்கய நாட்டுப் பரன்சேர்

பள்ளியிலுள்ள நட்டூர் அமர்ந்தார் என்பது சாசன வாசகம்.10 இப் பெயர் பரஞ்சேர்வலி யென மருவியுள்ளது. திருநாவுக்கரசர் குறித்தருளிய பரப்பள்ளி இப் பதியாயிருத்தல் கூடும் எனத் தோன்றுகின்றது.

அறைப்பள்ளி

    “கொல்லிக் குளிர் அறைப்பள்ளி”யும் இறைவன் உறையும் பள்ளிகளுள் ஒன்றென்று அருளிப் போந்தார் திருநாவுக்கரசர். கொல்லி மலை கொங்கு நாட்டைச் சேர்ந்ததாகும்.11 அம் மலையில் அமைந்த அறைப் பள்ளியைச் சாசனம் குறிக்கின்றது. சேலம் நாட்டு நாமக்கல் வட்டத்திலுள்ள வளப்பூர் நாடு என்ற ஊரிற் கண்ட சாசனத்தால் அப்பள்ளியின் தன்மையை அறியலாகும்.12 கொல்லிப் பாவை என்று குறுந்தொகை முதலிய பழந்தமிழ் நூல்களிற் கூறப்படும் தெய்வப் பாவை அறைப்பள்ளிக்கு மேற்றிசையில் உள்ள தென்பர்.13

இன்னும், இறைவன் அமர்ந்தருளும் பள்ளிகளுள் சிலவற்றைத் தொகுத்துப் பாடியுள்ளார் திருஞான சம்பந்தர்.

       “அறப்பள்ளி அகத்தியான் பள்ளி வெள்ளைப்

       பொடிபூசி நீறணிவான் அமர் காட்டுப்பள்ளி

என்பது அவர் திருவாக்கு.

அகத்தியான் பள்ளி

     வேதாரண்யம் என்னும் திருமறைக் காட்டுக்குத் தென்பாலுள்ளது அகத்தியான் பள்ளி. அகத்திய முனிவர் ஈசனை வழிபட்டுப் பேறு பெற்ற இடம் அப்பள்ளி என்பர். அம்முனிவரது வடிவம் திருக்கோயிலிற் காணப்படுதல் அதற்கொரு சான்றாகும். “மாமயில் ஆலும் சோலை சூழ் அகத்தியான் பள்ளி” யென்று தேவாரம் பாடுதலால், அழகிய பொழில் சூழ்ந்த தலத்தில் ஆண்டவன் கோயில் கொண்டிருந்தான் என்பது விளங்குகின்றது. இக் காலத்தில் கோயிற் பெயர் ஊர்ப் பெயராகவும் வழங்கும்.

கீழைத் திருக்காட்டுப்பள்ளி

     காட்டுப்பள்ளி யென்னும் பெயருடைய தலங்கள் இரண்டு உள்ளன.ஒன்று காவிரியாறு கடலிற்பாயும் இடத்திற்கு அணித்ததாக உள்ளது.

     “பலபல வாய்த்தலை யார்த்து மண்டிப்

     பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்க்

     கலகல நின்றதி ருங்கழலான்

     காதலிக் கப்படும் காட்டுப்பள்ளி

என்ற அதன் வளத்தைக் குறித்தருளினார் திருஞான சம்பந்தர். பாடல்

பெற்ற திருவெண் காட்டுக்கு மேற்கே ஓரு மைல் தூரத்திலுள்ள

இக்காட்டுப்பள்ளி, இப்பொழுது ஆரணியேசுரர் கோயிலென வழங்குகின்றது.

மேலைத் திருக்காட்டுப்பள்ளி

    காவிரி யாற்றினின்று குடமுருட்டியாறு பிரிந்து செல்லும் இடத்தில் உள்ள மற்றொரு திருக்காட்டுப்பள்ளியும் பாடல் பெற்றதாகும்.

       “கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே

       காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே

என்று பணித்தார் திருநாவுக்கரசர். இக்காலத்தில் திருக்காட்டுப்பள்ளியிலுள்ள ஆலயம் அக்கினீசுரர் கோயில் என்ற பெயர் கொண்டு நிலவுகின்றது.

சக்கரப்பள்ளி

    இன்னும், சோழ நாட்டில் உள்ள மகேந்திரப் பள்ளியையும், சக்கரப்

பள்ளியையும் குறித்தருளினார் திருஞான சம்பந்தர்.

       “………………சீர்மகேந்திரத்துப்

       பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான்

       விரும்பும் இடைப்பள்ளி வண்சக்கரமால்

       உறைப்பால் அடிபோற்றக் கொடுத்தபள்ளி

       உணராய் மடநெஞ்சமே உன்னிநின்றே

என்று எழுந்த திருப் பாசுரத்தில் அமைந்த மகேந்திரப் பள்ளி ஆச்சாபுரத்துக்கு அண்மையில் உள்ளது. இந்திரன் முதலிய இறையவர் வழிபட அங்கிருந்த ஈசனை,

          “சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்

          இந்திரன் வழிபட இருந்தநம் இறையவன்

என்று சம்பந்தர் போற்றியுள்ளார்.

இந் நாளில் ஐயம்பேட்டையென வழங்கும் ஊருக்கு அண்மையில் உள்ளது சக்கரப்பள்ளி. அப் பதியில் ஈசன் கோவில் கொண்ட இடம் ஆலந்துறையாகும். “வண்சக்கரம் மால் உறைப்பால் அடி போற்றக் கொடுத்த பள்ளி” என்று தேவாரம் கூறுதலால், அவ்வூர்ப் பெயரின் காரணம் விளங்கும் என்பர்.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

                         அடிக் குறிப்பு

1. 577 / 1904. மண்தளி இப்பொழுது சத்திய வாகேசுவரர் கோயில் என வழங்கும்.

2. “தலையெலாம் பறிக்கும் சமண் கையருள், நிலையினால் மறைத்தால் மறைக்கொண்ணுமோ, அலையினார் பொழில் ஆறைவடதளி” என்பது திருநாவுக்கரசர் பாசுரம். இப்பொழுது வடதளி, வள்ளலார் கோயில் என வழங்கும். பழையாறை என்ற நகரத்தினிடையே திருமலைராயன் என்னும் ஆறு செல்கின்றது. அது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைராயன் பட்டினத்திலிருந்து ஆட்சி செய்த மாலைப்பாடித் திருமலைராயன் என்ற அரசனால் வெட்டுவிக்கப்பட்ட தென்பர். – மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம், 2-ஆம் பாகம், 41-42.

3. 739 / 1905.

4. கொங்கு மண்டல சதகம்: ஊர்த்தொகை, 1 அந்நாட்டிலுள்ள 32 ஊர்களில் முகுந்தை என்னும் முகுந்தனூரும் ஒன்று.

5. 305 / 1908.

6. செ.மா.க. ( I.M.P.,) 536

7. தவப்பள்ளியும் தவத்துறையும் ஒன்றெனின் இப்போது லால்குடியென வழங்கும் ஊரிலுள்ள சிவாலயமே அதுவாகும்.

8. இலங்கை நாட்டிலுள்ள கோணமலை (Trincomalee) திரிகோண மலையாகிய முறை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். திரிசிரபுரம், புராணத்தில் திரிசிரன் என்ற இலங்கை அரக்கனோடு தொடர்புறுவதாயிற்று. 

9. “செழுந்தரளப் பொன்னி சூழ் திருநன்னிபள்ளி” என்றும், “பானல்வாயல் திருநன்னிபள்ளி என்றும் சேக்கிழார் பெரிய புராணத்தில் இப் பதியின் செழுமையைப் பாராட்டியுள்ளார். (திருஞான சம்பந்தர் புராணம், 112, 114.)

10. 559 / 1908.

11. கொல்லி முதலிய பதினாறு மலைகள் கொங்கு நாட்டில் உண்டென்று

கொங்கு மண்டல சதகம் கூறும்.

-கொங்கு மண்டல சதகம், 5, 26.

12. செ.க.அ.(M.E.R.,) 1929-30.

13. “கொல்லிக் கருங்கட்டெய்வம்” என்பது குறுந்தொகை. அறப்பளீசுரர்

ஆலயம் என வழங்கும் அறைப்பள்ளிக்கு அண்மையில் கொல்லிப்பாவை

உறையுமிடம் உள்ளதென்று கொல்லிமலை அகராதியில்

சொல்லப்பட்டுள்ளதாம்.

-கொங்கு மண்டல சதகம், ப, 28.