(ஊரும் பேரும் 54 : இறையவரும் உறைவிடமும் – தொடர்ச்சி)

திருவாக்கும் ஊர்ப் பெயரும்

தேவாரம் பாடிய மூவருக்கும் சைவ உலகத்தில் அளவிறந்த பெருமை
யுண்டு. அவர்கள் திருவாக்குப் பொன் வாக்காகப் போற்றப்படும். இத்தகைய
சீர்மையைச் சில ஊர்ப் பெயர்களால் உணரலாகும்.

அழகார் திருப்புத்தூர்

 தேவாரப் பாமாலை பெற்ற ஊர்களில் புத்தூர் என்னும் பெயருடைய 

பதிகள் பலவுண்டு. அவற்றுள் வேற்றுமை தெரிதற் பொருட்டு ஒரு
புத்தூரைத் திருப்புத்தூர் என்றும், மற்றொரு புத்தூரைக் கடுவாய்க்கரைப்
புத்தூர்
என்றும், பிறிதொரு புத்தூரை அரிசிற்கரைப் புத்தூர் என்றும்
தேவாரம் குறிப்பதாயிற்று. அவற்றுள் அரிசிற்கரைப் புத்தூர், அரிசில்
ஆற்றங்கரையில் அமைந்ததாகும்.1 கண்ணுக்கினிய செழுஞ் சோலையின்
நடுவே நின்ற அவ்வூரை அழகார் திருப்புத்தூர்  என்று ஆறு திருப்பாட்டிற் பாடினார் சுந்தரர்.

அலைக்கும் புனல்சேர் அரிசில் தென்கரை
 அழகார் திருப்புத்தூர் அழகன் நீரே

என்பது அவர் திருப் பதிகத்தின் முதற் பாட்டு. அத்தேவாரத்தை
ஆர்வத்தோடு ஓதிய அன்பர் உள்ளத்தில் அழகார் திருப்புத்தூர் என்னும்
தொடர் அழுந்திப் பதிவதாயிற்று. நாளடைவில் அரிசிற் கரைப்புத்தூர் என்ற
பெயர் மாறி அழகார் திருப்புத்தூர் என்பது அதன் பெயராயிற்று. அப்பெயர்
அழகாதிரிப் புத்தூர் என இந்நாளில் மருவி வழங்கும்.

சிந்துபூந்துறை

 திருநெல்வேலியின் வழியாகச் செல்லும் பொருநையாற்றில் உள்ள துறைகளுள் சாலப் பழமை வாய்ந்தது பூந்துறையாகும். திருஞான சம்பந்தர்
தம் தேவாரத்தில் பூந்துறையைப் புகழ்ந்து போற்றியுள்ளார்; நெல்லையம்
பதியில் அவர் கண்களைக் கவர்ந்தது அத் துறை. அதன் இரு மருங்கும்
நின்ற நெடுஞ்சோலைகளில் நன்னிற மலர்கள் நறுமணம் கமழும்
நலத்தினையும், மந்திகள் அங்கு மிங்கும் பாய்ந்து மரக்கிளைகளைப் பற்றி
உலுப்பும் போது அவற்றி லுள்ள நாண் மலர்கள் அழகிய தேன்
துளிகளைச்சிந்தும் தன்மையையும் அறிந்து, அக மகிழ்ந்தார் திருஞான
சம்பந்தர். அக்காட்சியை ஒரு திருப் பாசுரத்திலே பாடியருளினார். 

“கந்தமார் தருபொழில்

மந்திகள் பாய்தர மதுத் திவலை

சிந்துபூந் துறைகமழ்

திருநெல் வேலியுறை செல்வர்தாமே”

என்பது அவர் திருவாக்கு. பூவார் சோலையின் இடையே அமைந்த அழகிய
துறையை “மதுத்திவலை சிந்து பூந்துறை” என்று அவர் குறித்தார். அப்
பாசுரத்தின் ஈற்றடியிலே முத லெடுப்பாகவுள்ள சிந்து பூந்துறை என்ற
தொடரையே அத்துறையின் பெயராகக் கொண்டு பொதுமக்கள் வழங்கத்
தலைப்பட்டார்கள். இப்போது அத்துறையும், அதன்கண் அமைந்த ஊரும்

சிந்துபூந்துறை என்றே அழைக்கப்படுகின்றன.

தூவாய் நயினார் கோயில்

திருவாரூரில் அமைந்த மண்தளி என்னும் பழமையான திருக் கோயில்

பாடல் பெற்றதாகும். அத்தளியிற் கோயில் கொண்ட ஈசனை நோக்கி,
“தூவாயா, தொண்டு செய்வார்படு துக்கங்கள்
காவாயா” 2

என்று உருக்கமாகப் பாடியருளினார் சுந்தரர். அத்திருப்பாட்டின் அடியாகத்
தூவாய் நயினார் என்ற பெயர் அப் பெருமானுக்கு வழங்கலாயிற்று.
நாளடைவில் அப்பெயர் துலா நயினார் என மருவிற்று. எனவே, பழைய
மண்தளி இப்பொழுது துலா நயினார் கோயில் என வழங்குகின்றது.3

 வைத்தீசுவரன் கோயில்

சிதம்பரத்துக்கு அண்மையில் உள்ள புள்ளிருக்கு வேளூர் என்னும்

ஊர், பாடல் பெற்றதாகும். அங்கு அமர்ந்தருளும் பெருமானைச் சடாயு
என்ற புள்ளும், நால் வேதங்களுள் ஒன்றாகிய இருக்கு வேதமும்,
முருகவேளும் தொழுது அருள் பெற்றமையால், புள்ளிருக்கு வேளூர்
என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்று புராணம் கூறும். அப் பதியில்
கோயில் கொண்ட ஈசனை அருமருந்தாகக் கண்டு போற்றினர் திருஞான
சம்பந்தரும் திருநாவுக்கரசரும்.

     “செடியாய உடல் தீர்ப்பான்
     தீவினைக்கோர் மருந்தாவன்”

என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. “மந்திரமும் தந்திரமும்
மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருள வல்லான்” என்பது திருநாவுக்கரசர்
பாட்டு. இருவர் திருவாக்கின் பண்பும் பயனும் உணர்ந்த அடியார்கள்,
வினை தீர்த்தான் என்றும், வைத்தீசுவரன் என்றும் புள்ளிருக்கு வேளூர்ப்
பெருமானைப் போற்றுவா ராயினர்.4 இக் காலத்தில் வைத்தீசுவரன்
கோயில் என்பது திருக் கோயிலின் பெயராகவும், அக்கோயிலை யுடைய ஊரின் பெயராகவும் வழங்குகின்றது.

 காளையார் கோயில்
பாண்டி நாட்டுக் கானப்பேர் என்னும் ஊர் பாடல் பெற்ற பழம்

பதியாகும். அங்கே கோயிற் கொண்ட ஈசன் மீது ஆசையுற்றுப் பாடினார்
சுந்தரர். அவர் பாடிய பத்துப் பாட்டிலும் “கானப்பேர் உறை காளை” என்று
இறைவனைக் குறித்துப் போந்தார். அத்திரு வாக்கின் சீர்மையால் காளையார்
என்னும் பெயர் அவர்க்கு அமைந்தது காளையார் அமைந்தருளும் கோயில்
காளையார் கோயி லாயிற்று. கோயிற் பெயரே நாளடைவில்
ஊர்ப்பெயராகவும் கொள்ளப்பட்டது.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை) ஊரும் பேரும்

                 அடிக் குறிப்பு
  1. “அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு
    பொன்னும் மணியும் பொருதென் கரைமேல் புத்தூரே”
    -திருஞான சம்பந்தர் தேவாரம்.
  2. தூவாயா – தூய வாயை யுடையோனே, ஈசனைத் “தூமறை பாடும்
    வாயான்” என்று சேக்கிழாரும் குறித்தல் காண்க. தடுத்தாட்கொண்ட
    புராணம்.
  3. இக்கோவிலைத் துருவாசர் கோயில் என்றும் கூறுவர். அதற்கேற்பக்
    கோயிலுள் விநாயகர் பக்கத்தில் துருவாசருடைய உருவம்
    நிறுவப்பட்டிருக்கிறது.
  4. வினை தீர்த்தான் கோயிலைக் குறித்த பாட்டொன்றுண்டு. “வாதக்காலாம்
    தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவாம். போதப் பெருவயிறாம் புத்திரற்கு –
    மாதரையில் வந்த வினை தீர்க்க வகையறியான் வேளூரான், எந்த வினை
    தீர்த்தான் இவன்” என்று இகழ்வார் போல் புகழ்ந்தார் காளமேகம். இதனை
    வீரமா முனிவர் பாட்டென்பாருமுளர்.