(ஊரும் பேரும் 57 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சிரீ அடை மொழி ஊர்ப்பெயர்கள்-தொடர்ச்சி)

வைப்புத் தலங்கள்

தேவாரப் பாமாலை பெற்ற தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்றும், அப் பாசுரங்களில் பெயர் குறிக்கப் பெற்ற தலங்கள் வைப்புத் தலங்கள் என்றும் கூறப்படும். எனவே, திருப்பாசுரத் தொடர்களையும், சாசனங்களையும் துணைக் கொண்டு வைப்புத் தலங்களுள் சிலவற்றை அறிந்து கொள்ளலாம்.

பேரூர்


பேரூர் என்னும் பெயருடைய சில ஊர்கள் சிறந்த சிவத்தலங்களாய் விளங்குகின்றன. “பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான், பிறவா நெறியானே” என்று சுந்தரர் பேரூர் இறைவனைக் குறித்தருளினார். கொங்கு நாட்டில் ஒரு பேரூர் உண்டு. தேவாரத்தில்,
“ஆரூரன் தம்பிரான் ஆரூரன்
மீகொங்கில் அணிகாஞ்சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்
சிற்றம்பலத்தே பெற்றாமன்றே”

என்று சுந்தரர் அப்பேரூரைப் பாடியருளினார். அவர் திருப் பாட்டால் கொங்கு நாட்டில் காஞ்சி நதிக் கரையில் அவ்வூர் அமைந்துள்ள தென்பது அறியப்படும் காஞ்சி நதி இப்பொழுது நொய்யலாறு என்று அழைக்கப்படுகின்றது. சைவ உலகத்தில் பேரூர் மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படுவதாகும். திருப்பேரூர்
பழைய எயில் நாட்டில் ஒரு பேரூர் சிவத்தலமாகச் சிறந்திருந்தது. அங்குள்ள சிவாலயம் சோழ மன்னராலும், விஜய நகர மன்னராலும் ஆதரிக்கப்பட்ட தென்பது கல்வெட்டுகளால் விளங்கும்.1 இந்நாளில் அவ்வூர்ப் பெயர் திருப்பத்தூர் எனத் திரிந்துவிட்டது. வட ஆர்க்காட்டில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அதுவே யாகும்.


பேராவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூர்” என்ற திருநாவுக்கரசர் பாசுரத்தால் பேராவூர் ஒரு சிவத்தலம் என்பது விளங்கும். சோழ மண்டலத்தில் பேராவூர் என்னும் ஊர் உள்ள தென்று சாசனம் கூறும்.2 பாடல் பெற்ற சிறந்த தலமாகிய திருவாவடுதுறை பேராவூர் நாட்டைச் சேர்ந்ததாகும். இப்போது மாயவர வட்டத்திலுள்ள பேராவூரே அவ்வூர். அங்குள்ள பழமையான திருக்கோயில் ஆதீச்சரம் என்னும் பெயருடைய தென்பது சாசனத்தால் அறியப்படுகின்றது.3


இரும்புதல்
இரும்புதல் என்பது ஒரு பழைய திருக் கோயிலின் பெயர். “இரும்புதலார் இரும்பூளையுள்ளார்” என்று பாடினார் திருநாவுக்கரசர். சோழ நாட்டில் ஆவூர்க் கூற்றத்தில் அவ்வாலயம் அமைந்திருந்தது. இரும்பு தலுடைய மகா தேவர்க்கு இராசராசன் முதலாய பெருமன்னர் விட்ட நிவந்தங்கள் சாசனத்தில் காணப்படும். அக்கோயில் மனுகுல சூளாமணி சதுர் வேதி மங்கலம் என்ற ஊரில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆயினும் நாளடைவில் கோவிற் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்று தோன்று கின்றது. இந்நாளில் தஞ்சை நாட்டுப் பாபநாச வட்டத்தில் உள்ள இரும்புதலை என்னும் ஊரே பழைய இரும்புதல் ஆகும்.


ஏமநல்லூர்
ஏமநல்லூர் ஒரு வைப்புத் தலம் என்பது, “எச்சிலிளமர் ஏமநல்லூர்” என்னும் திருநாவுக்கரசர் வாக்கால் அறியப்படும். தஞ்சைப் பெருங்கோயிற் சாசனம் ஒன்றில், “மண்ணி நாட்டு ஏம நல்லூராகிய திரை லோக்கிய மகாதேவி சதுர் வேதி மங்கலம்” என்ற வாசகம் வருகின்றது.5 அச்சாசனத்தால் முற்காலத்தில் ஏம நல்லூர் என்று பெயர் பெற்றிருந்த ஊர் பிற்காலத்தில் ஒரு மாதேவியின் பெயர் கொண்ட மங்கலமாயிற் றென்பது விளங்கும். இந்நாளில் தஞ்சை நாட்டுக் கும்ப கோண வட்டத்திலுள்ள திரை லோக்கி என்ற ஊரே பழைய ஏமநல்லூர்.

ஏமப்பேரூர்
ஏமப்பேரூர் என்னும் வைப்புத் தலம் தென்னார்க் காட்டுத் திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ளதென்று தெரிகின்றது. இப்பொழுது ஏமப்பேர் என வழங்கும் அவ்வூரில் பழமையான சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு ஆலந்துறை என்று சாசனம் அறிவிக்கின்றது.இராசராசன் காலத்துக் கல்வெட்டு ஆலந்துறைக் கோயிலிற் காணப்படுதலால் அதன் பழைமை நன்கு விளங்கும். திருவாரூருக்குத் தெற்கே ஆறு கல் தூரத்தில் மற்றோர் ஏமப்பேரூர் உண்டு. அது நமிநந்தியடிகள் என்னும் திருத்தொண்டர் பிறந்த பதியாகும்.

மந்தாரம்
மாயவரத்துக்கு அருகேயுள்ள ஆற்றூர் என்னும் பழம் பதியில் மந்தார வனத்தில் இறைவன் வெளிப்பட்டானாதலின், அதற்கு மந்தாரம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. ‘வக்கரை மந்தாரம் வாரணாசி’ என்று திருத்தாண்டகத் தொடரில் குறிக்கப்பெற்றுள்ளது.
“ஓங்கு மந்தார வனத்து மேவும்
உத்தமனே இஃதொன்று கேள்நீ”

என வரும் ஆற்றூர்ப் புராணத்தால் மந்தாரம் ஈசன் திருக் கோயில் கொண்ட இடம் என்பது இனிது விளங்கும்.7


மாறன்பாடி
மூவர் தேவாரமும் பெற்ற திருநெல்வாயில் அரத்துறையில் அருகே அமைந்த வைப்புத் தலம் திருமாறன் பாடியாகும். திருஞான சம்பந்தர் வரலாற்றில் சிறந்த தொரு நிகழ்ச்சியைக் காணும் பேறு பெற்றது அப்பாடி விருத்தாசலம் என்னும் முதுகுன்றத்தையும், திருப்பெண்ணாகடத்தையும் வணங்கிய திருஞான சம்பந்தர் அடி வருந்த வழி நடந்து அரத்துறையை நோக்கிச் சென்றார். மாறன் பாடியை அடைந்தபோது அந்தி மாலை வந்துற்றது. அடியார்களோடு அன்றிரவு அங்குத் தங்கினார் சம்பந்தர்.8
திருஞான சம்பந்தரது வருகையை அறிந்த திரு அரத்துறை வேதியர்கள் ஈசனளித்த முத்துச் சிவிகையும், மணிக்குடையும் மற்றைய சின்னங்களும் கொண்டு,திருமாறன் பாடிக்குச் சென்று அவரை ஆர்வத்துடன் அழைத்து வந்தார்கள். அந்நிலையில் இறைவனது பெருங்கருணையை நினைந்து மனமுருகிப் பாடினார் சம்பந்தர்.
“எந்தை ஈசன் எம்பெருமான்
ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்
சென்று கைகூடுவ தன்றால்”

என்னும் திருப்பாசுரம் அப்பொழுது எழுந்ததாகும்.
இங்ஙனம் திருத்தொண்டர் புராணத்தில் சிறப்பிக்கப் படுகின்ற மாறன்பாடி, சாசனத்திலும் குறிக்கப்படுகின்றது. திருவடத்துறை என வழங்கும் திருவரத்துறைக் கோயிற் சாசனத்திற் சேக்கிழார் பாலறாவாயன் என்னும் களப்பாள ராயன் அளித்த நன்கொடை என்று குறிக்கப்படுகின்றது. திருவரத் துறைப் பெருமான் மாறன் பாடிக்கு எழுந்தருளு கின்ற மாசித் திரு நாளிலும்,வைகாசி விழாவிலும் திருவமுது வழங்குவதற்காக விட்ட நிவந்தம் அச்சாசனத் தால் விளங்குவதாகும். இதனால் மாறன் பாடிக்கும் அரத் துறைக்கும் அந் நாளில் இருந்த தொடர்பு நன்கு அறியப் படும்.


கஞ்சாறு
ஈசன் காட்சி தரும் தலங்களுள் கஞ்சாறு என்ற ஊரும் ஒன்று.
கஞ்சனுர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாய நாதனையே காணலாமே”

என்று திருநாவுக்கரசர் திருவாக்கு எழுந்தது. இவ்வூரிலே பிறந்து சிவனடியாராகச் சிறந்தவர் மானக் கஞ்சாறனார் என்று பெயர் பெற்றார். சோலையும் வயலும் சூழ்ந்த இப்பழம் பதியின் செழுமையை,
கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின் கமழ்சாறுர் கஞ்சாறூர்

என்று அழகுற எழுதிக் காட்டினார் சேக்கிழார். தஞ்சை நாட்டைச் சேர்ந்த மாயவர வட்டத்தில் ஆனந்த தாண்டவபுரத்திற்கு அண்மையில் உள்ள கஞ்சா நகரமே இத்தலம் என்பர்.10

(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை), ஊரும் பேரும்

அடிக் குறிப்பு

  1. 252 / 1909, 248 / 1909, அச் சிவாலயம் பிரமீசுவரம் என்று பெயர் பெற்றுள்ளது.
  2. உய்யக்கொண்டார் வளநாட்டுப் பேராவூர் நாட்டுத் திருவாவடுதுறை யுடையார்” என்பது சாசனத் தொடர். பேராவூர்ச் சபையார் விற்றுக் கொடுத்த நிலவிலை ஆவணம் இச் சாசனம் (109 of 1925).
  3. 364 / 1925.
  4. 33 / 1910.
  5. தெ.இ.க.தொகுதிS.I.I Vol. H. 345, 336.
  6. 513 / 1921.
  7. மீ. ச. முதற் பாகம், ப. 218.
  8. “அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
    சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
    பெற்றம் ஊர்ந்த பிரான்கழல் பேணுவார்
    வெற்றி மாதவத் தோருடன் மேவினார்”
    என்றார் சேக்கிழார்.
  9. 221 /1929
  10. ஆனந்த தாண்டவபுரம் இருப்புப் பாதை நிலையத்திலிருந்து ஊருக்குள் கிழக்கே கால் நாழிகை தொலைவில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுவாமி பெயர் பஞ்சவடீசுவரர். இதுவே வைப்புத் தலம் என்பார், சி.கே. சுப்பிரமணிய முதலியார்.
    (திருத்தொண்டர் புராண உரை, பக். 1161, 1427)