எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2.
(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. தொடர்ச்சி)
எங்கே போகிறோம்? 2.
1. விடுதலைநாள் விழாச் சிந்தனைகள்
எங்கே போகிறோம்? விடுதலை நாளன்று நம்முடைய மதுரை வானொலி நிலையம் இந்த வினாவை நம்மை நோக்கிக் கேட்கிறது. இல்லை இல்லை! இந்த நாட்டு மக்களை நோக்கிக் கேட்கிறது. ஏன்?
எங்கே போகவேண்டும் என்று சொல்லாமல், வழி காட்டாமல், எங்கே போகிறோம் என்று கேட்பதற்குக் காரணமென்ன?
குற்றங்கள் தெரிந்தால் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். குறைகள் தெரிந்தால் நிறைகளை வளர்த்துக் கொள்ள முடியும். எனவே, எங்கே போகிறோம்? வழி தவறி விட்டோமா? அல்லது வழித் தடத்தில்தான் செல்லுகிறோமா? இப்போது செல்லுகின்ற வழி அல்லது தடம், எங்கே செல்லவேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று விடுமா? இன்று நாம் போகவேண்டிய வழியில் போகிறோமா அல்லது நம்மை இந்த உலகத்தின் செய்திகள், சின்னஞ்சிறு கதைகள், நிகழ்ச்சிகள், இழுத்துக் கொண்டு செல்லுகின்றனவா? இன்று சுதந்திரமாகப் பயணம் செய்வோர் யார்?
கால்நடை மருத்துவமனை என்று அறிவிப்புப் பலகை போட்டிருக்கிறார்கள். எனக்கு ஒருநாள் ஐயம் வந்தது. இது என்ன ‘கால்நடை என்றால் என்று பக்கத்திலுள்ள வரைக் கேட்டேன். “கால்நடை” என்றே திருப்பிச் சொன்னார். திருப்பித் திருப்பிக் கேட்ட பிறகு “காலால் நடக்கின்ற மாடு, ஆடுகள்” என்று சொன்னார். அப்படியானால் மனிதனும் காலால் தானே நடக்கின்றான்? அவனுக்கும் இந்த மருத்துவமனை பயன்படுமா? என்று சிந்தித்தேன். காலால் நடப்பது மட்டுமே கால்நடைகளின் இயல்பு.
சிந்தனையாலும், கருத்தாலும், அறிவாலும், நாகரிகத்தாலும், பண்பாட்டாலும், படைப்பாற்றலாலும், நடக்கவேண்டிய பொறுப்பு மனிதனுடையது. அவன், தான் நடக்கவேண்டிய தடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். புவி, அவனை நடத்தக்கூடாது. புவியை அவன் நடத்தவேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் “புவியை நடத்துக! பொதுவில் நடத்துக” என்று சொன்னான்.
விடுதலைநாளன்று இதைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்! பாரதி, விடுதலை நாளை மக்கள் நாளாக நினைத்துப் பாடுகின்றான். ஆடச் சொல்லுகின்றான், பள்ளுப் பாடச் சொல்லுகின்றான், “ஆடுவோமே! பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்”* என்று பாடுகிறான். இன்றைக்கு எந்த மக்கள் ஆடுகிறார்கள்? எந்த மக்கள் பள்ளுப் பாடுகிறார்கள்? எந்த நாட்டு. நகர வீதிகளில் சுதந்திர தினவிழா மக்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது? இன்னமும் தீபாவளிக்கு இருக்கிற செல்வாக்கு குறையவில்லை. பொங்கலுக்கு இருக்கிற செல்வாக்கு குறையவில்லை. விடுதலைநாள்சு விழா, அரசு பணிமனைகளில், கல்வி நிலையங்களில் கொடியேற்று விழாவாக முடிந்து விடுகிறது. பாரதியின் ஆசை அதுதானா? இல்லை. தினந்தோறும் மக்கள் ஆடவேண்டும். சுதந்திரப் பள்ளு பாடவேண்டும். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடவேண்டும். ஆம்! இன்றைக்கு மக்கள் அப்படிப் பாடாததற்குக் காரணம் என்ன? அவர்கள் அனுபவிப்பது ஆனந்த சுதந்திரமா? இல்லை. எத்தனையோ நெருக்கடிகள்! எத்தனையோ தொல்லைகள் அடிமைத்தனங்கள் பயந்தாங்கொள்ளித் தனங்கள் பயமுறுத்தல்கள்! இவைகளுக்கிடையே இந்தச் சமுதாயம் மெள்ள ஊர்ந்து கொண்டிருக்கிறது.
இப்பொழுது வானொலி நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும்பொழுது, இரண்டு மூன்று காட்சிகள்! ஒரு இடத்தில் போராட்ட உண்ணாவிரதம்! இன்னொரு புறத்தில் மகிழ்வுந்தில் கூக்குரலிட்டுக் கொண்டு, முழக்கம் எழுப்பிக்கொண்டு இந்த நாட்டு மகளிர் செல்லுகிறார்கள். மகளிர் எழுப்பிய முழக்கொலி “பெண்களை விடுதலை செய்! பெண்களுக்கு விடுதலை” நாடு விடுதலை பெற்று 47 ஆண்டுகள் கடந்த பிறகும் “பெண்களுக்கு விடுதலை இல்லை’ என்று தெருவில் நின்று முழக்கொலி செய்கிறார்கள் என்றால் ஆனந்த சுதந்திரம் ஆக முடியுமா?
விடுதலைநாள்விழா என்பது கொடியேற்றுதல் மட்டு மல்ல. ஒரு கணக்காய்வு செய்யவேண்டும். நேற்று என்ன நடந்தது? இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாளை என்ன நடக்கும்? நாளை என்ன நடக்குமாறு செய்யவேண்டும்? இந்தக் கணக்காய்வு செய்யாது போனால் விடுதலைநாள்சு விழாவுக்கு என்ன பொருள்? நேற்றிலிருந்து இன்று பிறக்கிறது. இன்றிலிருந்து நாளை பிறக்கிறது.
இன்றைக்கு நமது இளைய சமூகத்தைப் பற்றி, இளைய பாரதத்தைப் பற்றி, அடுத்து வருகின்ற தலைமுறையினரைப்பற்றி, நமக்குக் கவலை இருக்கிறதா? அதற்குரிய திட்டங்களைத் தீட்டுகிறோமா? அப்படியே தீட்டினாலும், அந்தத் திட்டத்தினுடைய பயன்கள் குழந்தைகளுக்குப் போய்ச் சேருகிறதா? இவையெல்லாம் சிந்திக்க வேண்டியன, எங்கே போகிறோம்? சிந்தனை செய்வோம்? எங்கே போகவேண்டும்? முடிவு செய்வோம்.
இந்தியா பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வரலாற் றுப் பழமை உடையது, இந்த நாட்டினுடைய பழமைக்கு ஈடாக வேறு எதுவும் சொல்ல முடியாது. அந்தப் பழமை யினுடைய வரலாற்றுப் பெட்டகங்கள் ஏராளம் உண்டு. இந்திய நாட்டு வரலாறு தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. ஏராளமான வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். வரலாற்றுப் படிப்பினைகளை இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு, புதியன கண்டு, போர்க் குணத்தோடு போராடி வந்திருந்தால் இன்றைக்கு இந்த நாட்டினுடைய அமைவே வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆயினும் அவர்கள் படிப்பினைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
இந்தியாவில் இருக்கின்ற இலக்கியங்களில் மிகப் பழமையானவை இதிகாசங்கள். இராமகாதை பாரதம், இந்த இரண்டு இதிகாசங்களும் மிகப் பழமையானவை என்பது மட்டுமல்ல. வாழ்க்கைக்குரிய நெறிகளை, முறைகளை நமக்கு ஏராளமாகப் புகட்டுகின்றன. இவைகளைப் பற்றி நாம் படித்துத் தெரிந்து கொண்டது ஓரளவு தான். ஆனாலும், எங்கு பார்த்தாலும் இராமனுக்குப் புகழ் பாடுபவர்கள் உணர்க. பாரதத்திற்குப் பறைசாற்றுபவர்கள் உண்டு. எனினும், இராமகாதையினாலும், பாரதத்தினாலும், படித்துக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன? இராம காதையிலிருந்த கோசல நாடு என்ன? இலங்கை நாடு என்ன? இன்றைக்கு இருக்கிற தம்முடைய நாடு என்ன? ஒப்பு நோக்கிப் பார்த்தோமா? புராணங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஏராளமான புராணங்கள் அந்தப் புராணங்களும் கூட, தெரிந்தோ, தெரியாமலோ, சண்டைகளைப் பற்றியே நிறைய பேசி விட்டன. கடவுளுக்கும், தேவர்களுக்கும் சண்டைகள் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டைகள், மூன்று தேவர்களுக்கிடையில் சண்டைகள்! இப்படிச் சண்டைகளைப் பற்றியே இந்தியா ஏன் சிந்தித்துக் கொண்டிருந்தது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்தச் சண்டைகளை மறப்பது அவசியம்.
இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தால், இந்திய மொழி இலக்கியங்கள் ஒரு பூங்கா என்று சொல்லலாம். பெரிய கருவூலமாக இருக்கின்ற உபநிடத்திலிருந்து, நம்முடைய இராமானுசர் காலம் வரையில், ஏன், நம்முடைய பாரதி காலம் வரையில் இலக்கிய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வந்தால், ஏராளமான படிப்பினைகள் பழைய உபநிசத்து ஒன்று கூறுகிறது.
“ஒன்றாக உழையுங்கள் ஒன்றாக உண்ணுங்கள்!
ஒன்றாக இருங்கள், ஒன்றாக வாழுங்கள்!” என்று.
இது வேதங்களின் மணிமுடிச் சிகரமாக உள்ள உபநிடத்தின் வார்த்தைகள், இன்றைக்கு எங்கே அப்படி வாழுகிறோம்? ஒன்றாக உண்ணுவதிலேயே சாதி முறைகள் குறுக்கிடுகின்றன. இராமகாதையை எடுத்துக் கொண்டால், கம்பன் அற்புதமாக ஒரு நாட்டை எண்ணிப் பார்க்கிறான். அவனுடைய இலட்சிய நாடு அது. அவனுடைய கோசல நாடு அப்படியிருந்ததா? தெரியாது. அவன் கண்ட இலங்கை நாடு அப்படியிருந்ததா? சொல்ல முடியாது. ஆனாலும் கம்பன் தன்னுடைய இலட்சிய நாடு ஒன்றைத் தன்னுடைய காதையில் நினைவூட்டுகிறான். “கள்வரும், காவல் செய்வாரும் இல்லாத நாடாக இருக்கவேண்டும்” என்று ஆசைப்படுகிறான். எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் பெறவேண்டுமென்று ஆசைப்படுகின்றான். இன்று இந்த நாட்டினுடைய நிலைமை என்ன? எண்ணிப் பாருங்கள்.
(தொடரும்)
தவத்திரு குன்றக்குடி அடிகளார்:
எங்கே போகிறோம்?
Leave a Reply