(கல்விச் சிந்தனைகள் 1/3  இன் தொடர்ச்சி)

(20-3-94 அன்று மதுரை வானொலியில் ஆற்றிய உரை)

கல்விச் சிந்தனைகள் – 2/3

இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப் படுகின்றன. ஆதலால், இன்றைய மனிதன் நாகரிகத்தை இழந்து காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும், சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள். கடந்த சில ஆண்டு களில் காவல் நிலையங்களின் வளர்ச்சியே குற்றங்களின் வளர்ச்சிக்கு நிரூபணமாகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழவேண்டியது சமூக அமைப்பு.

இச்சமூகத்தில் இன்று கல்வித் துறையிலிருந்து காவல் துறை வரையில் ஆண், பெண், பிரிக்கப்படுகின்றனர். ஏன் இந்த அவலம்? இந்த அவலத்தை முதலில் செய்தது ஆண் ஆதிக்கச் சமுதாய அமைப்பு. திருக்கோயிலில் அம்மை அப்பனாக இருந்து வழிபடும் பொருளை அர்த்த நாரீசுவரனாக இருந்த பரம்பொருளை இருவேறாகப் பிரித்துத் தனித்தனியாக்கினார்கள்.

அதற்குப் பிறகுதான் புராணங்களில் கூட ஆண் சாமிக்கும், பெண் சாமிக்கும் சண்டைகள் தொடங்கின. இன்னும் அதே திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம். ஆண், பெண் சமத்துவத்தைக் கல்வியில்கூடக் காண முடிய வில்லை. ஏன்? பண்பாட்டு வளர்ச்சிக்குரிய கல்வியை வழங்காததுதான் காரணம். வளரும் வரலாற்றுக்குரிய உயிர்ப்புள்ள கல்வியை மனிதனுக்குத் தரவேண்டும்.

கல்வி, தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு மட்டு மன்று. கல்வி, ஆன்மாவின் சக்தியைத் தூண்ட வேண்டும். நல்ல காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது! நல்ல காரியங்களைச் செய்யும் ஆர்வத்தைத் தரவேண்டும். ஒர் ஊர், ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதை அளந்தறியப் பயன்படுவது கல்வியேயாம். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களுடைய நாடு விளங்குமானால் “கெட்ட போர்” அங்கு இராது. ஆன்ற கல்வி கற்றோர் நல்லவராயிருப்பர். நாடும் நன்றாகவே இருக்கும்.

“எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்பது புறநானூறு.

கல்வி என்பது கல்லுதல் அல்லது தோண்டுதல் என்னும் சொல் அடியில் பிறந்தது. மனிதனிடத்தில் இயல்பாக உள்ள அறியாமையைத் தோண்டி எறிந்து விட்டு, அறிவூற்றைக் கண்டு, அந்த உயர்ந்த சக்தியை வளர்ப்பதே கல்வியாகும். இதுவே கல்வியின் நோக்கம் – பயன். கல்வித் துறை மக்கள் தொகுதிக்குரியதான பிறகு, இது நடைபெற வில்லை. ஆயினும், தக்க நாட்டுப்பற்றுள்ள சமூகச் சிந்தனை யுள்ள ஆசிரியர்கள் மனமிருந்தால், இன்னும் செய்ய இயலும்; செய்யவேண்டும்.

கல்வியின் தகுதி, கற்பிக்கும் ஆசிரியரையே மிகுதியும் சார்ந்திருக்கிறது. கற்பிக்கும் ஆசிரியரிடம் சிறந்த திறன் இல்லையானால் பள்ளியால் விளையும் நன்மையைவிட விபத்துகளும் குழப்பங்களும்தான் ஏற்படும். வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும்பொழுது, மாணவர் பகுதியுடன் ஒன்றி யிருக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் என்ன நடக்கிறது? கற்கும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் தனக்கும் அந்நிலையில் உள்ள ஒன்றுதலில் உள்ள அமைவு அல்லது இடை வெளியைத் தெரிந்துகொண்டு கற்பிக்கும் ஆசிரியர்தான், கற்பிப்பதில் வெற்றி பெற இயலும்.

பாடம் என்பது கற்பிக்கும் ஆசிரியரும் கற்கும் மாணவரும் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட வேண்டிய முயற்சி என்பதை ஆசிரியர் நினைவில் கொள்ள வேண்டும். கற்பிக்கும் தனது ஆசிரியத் தன்மையுடன், கற்கும் மாணவரையும் ஒன்றச் செய்வதன் மூலம் – கற்கும், கேட்கும், சிந்திக்கும் திறனைத் தூண்டித் தம்பால் ஈர்த்து, வினா – விடை மூலம் – மாணவன் கற்றுக் கொள்கிறான்; தெளிவாக இருக்கிறான் என்பதை ஆசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும். –

ஒரு செடி வளர்வதற்குப் பலவகை உணவுப் பொருட்கள், மருந்துகள் தேவைப்படும். அதுபோல், மனிதனும் வாழ்க்கையில் வளர, பண்பாட்டில் வளர கல்வி தேவை. கற்கவேண்டிய துறைகள், நூல்கள் மனிதர்களுக்கிடையில் வேறுபடும்! ஆன்மாவின் தேவைக்கு ஏற்பவும், ஆன்மாவின் வளர்ச்சிக்கேற்பவும் மாறுபடும்.

ஆதலால் கல்வியில் பொதுக் கல்வியும், சிறப்புக் கல்வியும் இடம்பெற வேண்டும். பொதுக் கல்வி என்பது பொது அறிவு, சமூக வாழ்க்கைக்கு – ஒரு பணி செய்யத் தேவைப்படும் அறிவு. சிறப்புக் கல்வி என்பது கற்போர் நிலைக்கேற்ப மாறும். அது அறிவியலாகவும் இருக்கலாம். அல்லது தத்துவத் துறையாகவும் இருக்கலாம். பிறவாகவும் இருக்கலாம். இங்ங்ணம் கல்வி வழங்கப் பெற்றால்தான் மனிதர்களை, அறிஞர்களை, ஞானிகளை உருவாக்கலாம்.

நம்முடைய குழந்தைகளைச் சிந்திக்கிறவர்களாகப் பழக்கிவிடுதல் அவசியம். முதல் இரண்டு வகுப்பு வரை பாடப் புத்தகங்களே வேண்டியதில்லை என்பது நமது கருத்து. இந்த வகுப்புக்களில் கற்பது எப்படி? நினைவாற்றலைப் பெறுவது எப்படி? சிந்திப்பது எங்ஙனம்: ஆகிய கல்வி கற்றலின் அடிப்படைகளைச் செயல்வழிக் கற்பிக்க வேண்டும். கற்கும் குழந்தைகளின் சிந்திக்கும் திறமையே ஆசிரியரின் திறமைக்கு அளவுகோல் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். –

குழந்தைகளுக்கு இயல்பாகவே அளவற்ற சக்தி இருக்கிறது. நாம் இங்கு குறிப்பிடுவது உடல்சக்தி, மூளை சக்தி இரண்டையுமே குறிப்பிடுகின்றோம். இந்த இருவகை ஆற்றல்களையும் குழந்தைகள் பயன்படுத்தும்படி ஆசிரியர் பழக்கவேண்டும். நடக்கும்பொழுது கீழே விழுந்துவிடும் குழந்தை, தானே எழுந்துவிடும் திறமையுடையது; மனப் பாங்கு உடையது. நாம் தூக்கும் போதுதான் குழந்தையின் ஆற்றல் குறைகிறது. மற்றவர்களை எதிர்பார்ப்பது குழந்தைகளிடத்தில் வளர்ந்து விடுகிறது.

ஆசிரியர், கற்கும் மாணவர்களிடத்தில் வினா கேட்கலாம். ஆனால் ஆசிரியர் விடை கற்றுத்தரவே கூடாது

மாணவர் சற்று விடை தரத் தாமதித்தால் அடுத்து – Next – சொல்லி விடுகிறார் ஆசிரியர். சில அவசரமுடைய ஆசிரியர்கள் விடையைத் தாமே சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். இது தவறு. வினாவுக்குரிய விடைகளை மாணவர்களே அவர்களின் அறிவுப்புலனால் தேட வேண்டும். தேவையானால் ஆசிரியர் துணை வினாக்களைத் தொடுத்து, மாணவர்களிடத்தில் விடை காணும் முயற்சியைத் தூண்டலாம். எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியர் விடை கூறக்கூடாது.

ஆனால், இன்று நடப்பு, வினா-விடைகளை எழுதிப் போட்டு மனப்பாடம் செய்வதுதான்! இதனால், சிந்தனைத் திறனும், புதியன காணும் முனைப்பும் வளரவில்லை! கல்வி உலகு, தேர்வு மட்டுமே என்ற குறுகிய குறிக்கோளில் சென்று கொண்டிருக்கிறது. திசையை விரிவுபடுத்திக் கொண்டு, சிந்தனையாளர்களை, படைப்பாளர்களை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும். படிப்பாளிகளை உருவாக்கும் நிலையிலிருந்து படைப்பாளிகளை உருவாக்கும் உலகை நோக்கிச் செல்லவேண்டும்.

கல்விக்கு இதயம் தேவை. சோவியத்து கல்வியாளன் சுகோம்லினசுகி “குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்” என்று எழுதினான். கல்வி, மூளையோடு மட்டுமோ, கற்கும் நூல்களோடு மட்டுமோ தொடர்புடையதன்று. இதயத்தோடும் தொடர்புடையது. கல்வி கற்பிக்கவும், கல்வி கற்கவும், அதற்கென ஒரு சிறந்த பாங்கு தேவை.

கற்பிக்கும் ஆசிரியருக்குச் சிறந்த உணர்வு நிறைந்த இதயம் தேவை. கற்கும் மாணவருக்கும் ஆசிரியரைப் பூரணமாக – ஆசிரியரின் மனத்தைக் கூடப் புரிந்துகொள்ளும் உள்ளம் வேண்டும். அப்போதுதான் கற்பிக்கும் பணியும், கற்கும் பணியும் அர்த்தமுள்ளது ஆகும்.

இத்தகு கல்விச் சூழலுக்கு உரியமொழி தாய்மொழியே என்ற கருத்திற்கு இரண்டாவது கருத்து இருக்கமுடியாது.

 (தொடரும்)

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

எங்கே போகிறோம்?